மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?!



அதிர்ச்சி

‘‘உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் காசநோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 90 லட்சம் மக்கள் செயல்படா காசநோய்க்கு ஆளாவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாகவும், நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதையும் உலக சுகாதார அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. இந்த செயல்படா காசநோய் குறித்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வேண்டும்’’ என்கிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ராஜ்குமார்.

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி என அழைக்கப்படும் மனித நோய் எதிர்ப்பு குறைபாட்டு வைரஸின்(HIV) தாக்கத்திற்குள்ளான நோயாளிகளில் ஏற்படக்கூடிய முக்கியமான இரண்டாவது தொற்றாக (Secondary infection) இந்த காசநோயே காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடும் தொற்றுநோயால் நோயுற்றவர்கள் இறக்கவும் நேரிடும் என்று காசநோயைப் பற்றி ஓரளவு நமக்குத் தெரிந்திருந்தாலும் புதிதாக கிளம்பியுள்ள Latent Tuberculosis - LTB பற்றி நாம் புரிந்துகொள்வது அவசியம். காசநோயில் இரண்டு வகைகள் உண்டு. Active TB என்கிற செயல்படும் காசநோய், Latent TB என்ற செயல்படா காசநோய் என இரண்டு வகைகள் இருக்கிறது.

செயல்படும் காசநோய் என்பது என்ன?
எல்லோரது உடலிலும் மைக்ரோபாக்டீரியா கிருமி உள்ளுக்குள் இருக்கும். அந்தக் கிருமியானது எப்போது வேலை செய்ய ஆரம்பிக்கிறதோ அவருக்கு காசநோய் உண்டாகிறது. ஒருவருக்கு செயல்படும் காசநோய் இருப்பின், அந்த பாக்டீரியா அவரை நோயுறச் செய்வதோடு, அவர் மூலம் மற்றவர்களுக்கும் காசநோயினை பரப்பக்கூடும். மேலும் அவரது உடல் நலனுக்கு காசநோய் மிகவும் தீங்காக அமையலாம். காசநோய் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் நாள்பட்ட நோயாக இருந்தாலும் கூட அதைக் குணப்படுத்த முடியும்.

செயல்படா காசநோய் என்பது…
செயல்படா காசநோயை மறைந்திருக்கும் TB என்று சொல்லலாம். இந்த வகையில் ஒருவர் உடலினுள் காசநோய்க்கான பாக்டீரியா இருக்கும். ஆனால், அது செயல்படாத நிலையில் உறங்கிக் கொண்டிருக்கும். நோய் பாதிப்பு ஏதுமின்றி ஆரோக்கியமாகவே இருப்பீர்கள். இந்த செயல்படா காசநோய் மற்றவருக்குப் பரவாது. இருப்பினும், அந்த பாக்டீரியாவானது எதிர்காலத்தில் விழித்துக்கொண்டு, செயல்படும் காசநோயாக மாறி உங்களை நோயுறச் செய்வதற்கான சாத்தியம் உண்டு.

ஒருவரின் கையில் Mantoux test செய்யும்போது பாசிட்டிவாக இருந்தாலே செயல்படா காசநோய் இருக்கிறது என்றே அர்த்தம். ஆனால், இந்த Mantoux test-ஐ வைத்து செயல்படும் காசநோயா அல்லது செயல்படா காசநோயா என்று வேறுபடுத்த முடியாது. சில நேரங்களில் மருத்துவர்களே Mantoux test-ஐ மட்டும் பார்த்து காசநோய் இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். அது தவறு.

செயல்படும் காசநோயை உறுதி செய்ய Sputum Test எனப்படும் தனி சோதனையில் பாசிடிவ் என்று இருந்தால் மட்டுமே செயல்படும் காசநோயை உறுதிப்படுத்த முடியும். இந்த தனி சோதனையில் சளி வந்தாலும் சரி, பிராங்கோஸ்கோபி செய்து சளி எடுத்தாலும் சரி செயல்படும் டிபியை உறுதி செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் செயல்படா காசநோய்க்கும் Isonicotinylhydrazide (INH) 6 மாதத்துக்கு மருந்து கொடுப்பார்கள். நம் நாட்டில் இதற்கு மருந்து கொடுக்க மாட்டார்கள், கொடுக்கவும் கூடாது. அதற்கு காரணம் பெரும்பாலானோருக்கு செயல்படா காசநோய் இருக்கக்கூடும். இதற்கு INH மருந்து கொடுத்தால், அந்த மருந்துக்கு நம் உடல் நோயெதிர்ப்பு (Resistance) திறன் பெற்றுவிடும்.

எதிர்காலத்தில் அது செயல்படும் காசநோயாக மாறும்போது அந்த மருந்துக்கு வேலை செய்யாது. அதனால், சாதாரண காசநோயை Drug resistance tuberculosis-யாக மாற்றிவிடுவோம். வெளிநாடுகளில் காசநோயாளிகளின் மக்கள்தொகை வெகு குறைவு. ஆனால், நம் நாட்டில் காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் செயல்படா காசநோய்க்கு மருந்து கொடுக்கக் கூடாது.

ஒருவருக்கு செயல்படா காசநோய் இருந்தால் அது செயல்படும் காசநோயாக மாறுமா?

ஒருவருக்கு செயல்படா காசநோய் இருக்குமானால், எதிர்காலத்தில் அது செயல்படும் காசநோயாக மாறுவதற்கு 10 சதவீத வாய்ப்புள்ளது. எப்போது அது செயல்படும் காசநோயாக மாறும் என்றால் புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள் அல்லது சரியாக தூங்காதவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இரவு நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு 100 சதவீதம் மாறுவதற்கு சாத்தியம் உண்டு.

ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு, வாழ்வியல் முறைகளை நெறிதவறாமல் கடைபிடிப்பவர்களுக்கு காலம் பூராவுமே இந்த மறைந்திருக்கும் காசநோய், Active TB-யாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால், செயல்படா காசநோய், செயல்படும் காசநோயாக மாற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

செயல்படும் காசநோயில் மட்டுமே இருமல், மூச்சுத்திணறல், சளி(சில நேரங்களில் சளியில் ரத்தம்), பசிக்குறைவு போன்ற அறிகுறிகள் தென்படும். செயல்படா காசநோயில் எந்தவிதமான அறிகுறிகளும் இருக்காது.

வெளிநாடு செல்பவர்களுக்கு மாஸ்டர் செக்கப்பில் Mantoux test மற்றும் Igra Test செய்யும்போது பாசிடிவ் இருந்தால் உடனே காசநோய் இருக்கிறது என்று சொல்வார்கள். அதை வைத்து செயல்படும் காசநோய் என்று சொல்லிவிட முடியாது. எக்ஸ்ரே பரிசோதனை எடுக்க வேண்டும், ரத்தப்பரிசோதனை மற்றும் சளி பரிசோதனைகள் என முழுமையான பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

யாருக்கெல்லாம் காசநோய்த்தொற்று செயல்பட ஆரம்பிக்கும்?

ஒருவருக்கு செயல்படா காசநோய் இருந்து, அருகில் ஒரு செயல்படும் காசநோயாளி வருவாரே என்றால் அவர் மூலம், உங்கள் உடலில் உள்ள அந்த கிருமி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். செயல்படா காசநோய்க்கு எந்தவிதமான மருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மருத்துவ தொழிலில் ஈடுபடுபவர்கள் இரவு நேரப் பணியாளர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், எச்.ஐ.வி நோயாளிகள், புற்றுநோயாளிகள் போன்றவர்களுக்கு காசநோய் வருவதற்கு அதிக சாத்தியம் உள்ளது.

சரியான தூக்கம், ஆரோக்கியமான வாழ்வியல், நல்ல உணவு இவற்றை கடைபிடித்தாலே இறுதி வரை செயல்படும் காசநோயாக மாறாமல் நம்மை
பாதுகாத்துக் கொள்ளலாம்”.

-  உஷா நாராயணன்