மருத்துவர்களை கடவுள் என்று சொல்வது ஏன்?!



சல்யூட்

எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் மருத்துவம் என்பது எப்போதும் புனிதத் தொழில்தான். உயிர் காக்கும் மருத்துவர்கள் எல்லோரும் நன்றிக்குரிய கடவுளர்தான். இது உணர்ச்சிவசத்தால் மட்டுமே சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. நியாயமான காரணங்களும் உண்டு.

ஏனெனில்.....

நீங்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும்போது அதன் தாக்கத்துக்கு மருத்துவரும் சிறிது ஆட்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?! காயங்களுக்கு மருந்திடும்போதும், கட்டு போடும்போதும் பல மருத்துவர்கள் அதனை மிகப்பெரிய தியாகமாகவே செய்கிறார்கள். குறிப்பாக Diabetic foot ulcer போன்ற துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்னைகளுக்குக் கட்டுபோடும்போது, அந்த அசாதாரணமான உணர்விலிருந்து மீள முடியாமல் பல மருத்துவர்கள் அன்று சரியாகவே உணவு உட்கொள்வதில்லை.

ஒவ்வொரு பிரசவத்தை எதிர்கொள்ளும் மருத்துவரும் அன்றைய இரவு நேரத்தில் 10 போன் கால்களுக்காவது பதிலளிக்கக் கடமைப்பட்டவராயிருக்கிறார். பிரசவம் நிகழ்ந்த ஒரு பெண்ணுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கும், கழிவறை செல்ல வேண்டும் அவஸ்தை இருக்கும். இந்த சிக்கல்களையும், அவஸ்தைகளையும் கர்ப்பிணிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரும் அதற்கிணையாக எதிர்கொள்கிறார்.

அறுவைச் சிகிச்சைகள் பலவும் மணிக்கணக்காக நிகழ்கின்றன. உதாரணமாக நரம்பியல் மருத்துவர்கள் 12 மணி நேரம் தொடர்ச்சியாக அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அந்த மிக முக்கியமான கட்டத்தினால் அவர்கள் தங்களது தூக்கம் மற்றும் உணவையே மறக்கிறார்கள்.
ஒரு இதய சிகிச்சை நோயாளியை மருத்துவர் பரிசோதிக்கும்போது, ஆய்வகத்தின் கதிர்வீச்சுக்கு அவரும் சிறிது ஆளாகிறார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வேலை தொடர்பான அழுத்தம், போதிய உறக்கமின்மை, நேரம் தவறி உண்பது போன்ற காரணங்களால் சராசரி மனிதர்களின் வாழ்நாளைவிடவும் ஒரு மருத்துவரின் வாழ்நாள் 10 வருடங்கள் குறைவு.ஆமாம்... மருத்துவர்களும் பணத்துக்காகத்தான் வேலை செய்கிறார்கள். ஆனால், பணம் ஒன்றுக்காக மட்டுமே வேலை செய்வதில்லை!

- ஜி.வித்யா