மனநிலையை மாற்ற உதவும் புதிய செயலி



ஆச்சர்யம்

ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் உறங்கும் நேரம் தவிர ஸ்மார்ட்போன் இல்லாத ஒரு மணி நேரத்தைக் கூட நம்மால் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. அந்த அளவுக்கு நம் சகல தேவைகளையும் தீர்த்து வைக்கும் சர்வ ரோக நிவாரணியாக இருந்து வருகிறது.

ஆனால், இதே ஸ்மார்ட்போன் நம் மனநிலையை மோசமாக்கி அழுத்தத்தையும் தந்துவிடுகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்கும் முயற்சியாக Moodrise என்ற செயலியை உருவாக்கி இருக்கிறார் போன் அழைப்புகள், கடன்காரர் மிரட்டல்கள் போன்றவை மட்டுமல்ல, இணையம் மூலம் வாட்ஸ் ஆப் வதந்திகள், ஃபேஸ்புக் பொறாமைகள், எதிர்மறை மனநிலைகளைத் தூண்டும் தகவல்கள், கட்டுரைகளின் தாக்கங்கள் போன்றவற்றால் நாள் முழுவதும் ஒருவரின் மனநிலை மாறுபாட்டுக்கு உள்ளாக நேரிடுகிறது. இதற்கு மாற்று மருந்தாக மூட் ரைஸ் (Moodrise) என்ற ஒரு புதிய செயலியை உருவாக்கி இருக்கிறார் கலிஃபோர்னியாவின் பிரபல தொழில்முனைவோரான மைக்கேல் பிலிப்ஸ் மாஸ்கோவிட்ஸ்.

மூட் ரைஸ் அப்படி என்ன செய்யும்?!

Digital Nutrition என்ற வசீகரமான வார்த்தையை இதில் பயன்படுத்துகிறார் மைக்கேல் பிலிப்ஸ். நாள் முழுவதும் ஒருவருடையை உளவியல் தேவையாக இருக்கும் நல்ல உணர்வுகளை ஒலியும், ஒளியுமாக இந்த செயலி வழங்கும் என்கிறார். இதமான உணர்வுகளை மனதில் விதைக்கும் மூட் ரைஸ் செயலியை உளவியல் மருத்துவர்களும் மனதார பாராட்டி இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

எப்படி இயங்குகிறது எந்த செயலியில் என்பதற்கான எளிய பதில் இது. மகிழ்ச்சி, ஊக்கம், அமைதி, மன ஒருமைப்பாடு என்று நமக்கு எந்த வகையான உணர்வு தேவையோ, அந்த வகையிலான பகுதிக்கு முதலில் செல்ல வேண்டும். அதற்குரிய பட்டனை அழுத்தினால் போதும். அதற்குரிய வீடியோக்கள், கட்டுரைகள், பாடல்கள், ஆடியோக்கள் நமக்குக் கிடைக்கும் என்கிறார் மைக்கேல். இந்த செயலியை பயன்படுத்த மாதம் 500 ரூபாய் வரை சந்தா வேறு செலுத்த வேண்டுமாம்.எப்படியெல்லாம் உலகம் போய்க் கொண்டிருக்கிறது?!

- கௌதம்