புத்தகம்னாலே அலர்ஜி சார்...



அட்டென்ஷன் ப்ளீஸ்

ஒரு சிறு முன் குறிப்பு... இந்த கட்டுரை மாணவர்களைப் பற்றியது அல்ல. அச்சடித்த காகிதங்களைத் தொடுவதால் வரும் Contact Dermatitis என்ற பிரச்னை தொடர்பானது... இந்த சரும பிரச்னை எதனால் வருகிறது யாருக்கு வரும் என்பது பற்றி மருத்துவர்கள் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

பொதுவாகவே ஒரு பொருளை தொடும்போது, நம் தோல் பகுதி எரிச்சலூட்டுவதாகவோ அல்லது ஒவ்வாமையை தூண்டுவதாகவோ இருந்தால் அதனையே Contact Dermatitis என்ற தோல் பிரச்னையாகக் குறிப்பிடுகிறோம். இதில் Allergic contact dermatitis, Irritant Contact Dermatitis என்ற இரண்டு வகைகள் உண்டு. முதலாவது வகை பிரச்னையில் ஆன்ட்டிபயாடிக், நிக்கல் போன்ற உலோகங்கள், நச்சுப்பொருட்கள், தோல் பொருட்கள், சன் ஸ்க்ரீன் பொருட்கள், டாட்டூ இங்க், உணவுப்பொருட்களில் கலக்கப்படும் ப்ரசர்வேட்டிவ்ஸ், ஹேர்டை, கருப்பு ஹென்னா மற்றும் பிரின்டிங் இங்க் போன்றவற்றால் ஏற்படுகிறது.

இரண்டாவதான Irritant Contact Dermatitis டிடர்ஜென்ட் பொருட்கள், தரையை சுத்தம் செய்யும் ரசாயனப் பொருட்களை தொடர்ந்து உபயோகப்படுத்துவதால் வருவது. இத்தகைய சருமப் பிரச்னைக்கு அதன் தீவிரத்தன்மையைப் பொருத்து மிதமானது முதல் சற்று கடினமான ஸ்டீராய்டு மருந்துகள் வரை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிலருக்கு அந்த பொருட்களை தொடாமல் இருப்பதாலேயே சரியாகிவிடக் கூடும்.

சமீபத்தில்கூட மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களை தொடுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு அவரது தோலில் அரிப்பு, தடிப்புகள் ஏற்பட்டதை அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். இதுவும் Allergic Contact Dermatitis வகையைச் சார்ந்ததுதான் என்கிறார்கள் சரும நல மருத்துவர்கள். குறிப்பிட்ட பொருளைப் பயன்படுத்தும்போது அலர்ஜி ஏற்படுவதாக உணர்ந்தால், சரும நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உரிய சிகிச்சையைப் பெறுவதும் அவசியம்!

- என்.ஹரிஹரன்