மசாஜ் மேட்டர்ல மாட்டிக்காதீங்க...



Centre Spread Special

‘மசாஜ் என்பது அறிவியல்பூர்வமான ஒரு மருத்துவ சிகிச்சை. அதுபற்றி தவறான பிம்பத்தை உண்டாக்கக் கூடாது’ என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கியிருந்தார்.
சென்னையில் உள்ள மசாஜ் நிலையத்தில் பணியாற்றிய இந்தோனேஷியப் பெண்ணை ஆதாரம் இன்றி கைது செய்தது தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பித்திருந்தார். மசாஜ் என்கிற பெயரில் முறைகேடுகள் சில இடங்களில் நடைபெறுவதாக வரும் செய்திகளும் இதில் கவனம் பெறுகின்றன.

மருத்துவரீதியிலான மசாஜ் எங்கு செய்துகொள்ள வேண்டும், அதனால் என்ன பலன்கள் கிடைக்கிறது என்று யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வீரபாண்டியனிடம் கேட்டோம்...
‘‘மசாஜ் ஓர் அற்புதமான மருந்தில்லா மருத்துவமுறை.

பல மேலை நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் இன்றளவும் சிறந்த முறையில் நோய்களை குணப்படுத்தவும், நோய்கள் வராமல் தடுக்கவும், இளமையைக் காத்திடவும் இச்சிகிச்சையைப் பயன்படுத்தி வருகின்றனர். இது இந்திய மருத்துவ முறைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான மருத்துவ சிகிச்சைமுறை என்பதனால் இதை யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா மற்றும் பிற மருத்துவ முறைகளிலும் முக்கியமானதொரு சிகிச்சையாக வழங்கப்பட்டு வருகிறது.

மசாஜ் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் கொண்ட எண்ணெய்கள், வாசனை திரவியங்கள் போன்றவை பல விதமான நோய்கள் குணமாக உதவிகரமாக இருக்கின்றன.

இந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது உடலில் ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம், தாது உப்புக்களின் பரிமாற்றம், அதிகப்படியான ரத்த ஓட்டம், நரம்பு மண்டல தூண்டல்கள், நிணநீர் மண்டலத்தில் ஓட்ட மாறுதல்கள், உடலின் அமில மற்றும் காரத்தன்மை மாறுதல்கள் காரணமாக பலதரப்பட்ட நோய்கள் குணமாவதற்கும், நோய்கள் வராமல் தடுக்கவும் ஏதுவாக உள்ளது. இந்த சிகிச்சை முறை உடலில் தங்கும் தேவையற்ற கழிவுகளையும் நீக்க வல்லது.

இப்படி பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவும் சிகிச்சை முறையை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இப்படி ஒரு அவப்பெயர் உருவாகி இருக்கிறது. உயர்நீதிமன்றமும் அதனை உரிய நேரத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறது. எனவே, தவறுகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டியது அவசியம் என்பதைப் போலவே, இந்த சிகிச்சையினை சரியான இடங்களில் பெற்றுக் கொள்வது பற்றி விழிப்புணர்வும் வேண்டும்.

எல்லோராலும் மசாஜ் செய்துவிட முடியாது. மசாஜ் செய்வதற்கு உடல் விஞ்ஞானம் பற்றிய அறிவு கொண்டவர்களாக இருப்பது அவசியம். அரசு மருத்துவமனைகள், அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத, சித்த மருத்துவமனைகளில் செய்துகொள்ளலாம். உங்களுக்கு நம்பகத்தன்மை கொண்ட குடும்ப நல மருத்துவரிடமும் வழிகாட்டச் சொல்லலாம்’’ என்று எச்சரிக்
கிறார் மருத்துவர் வீரபாண்டியன்.  

- அஜி