திக்… திக்… டிக் டாக்



மொபைல் போனாலும், சமூக வலைதளங்களாலும் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் விதவிதமாக தோன்றி வருகின்றன. முகப்புத்தகம், மோமோ, மியூசிக்கலி போன்ற பிரச்னைகளைத் தொடர்ந்து சமீபத்தில் டிக் டாக் என்ற செயலி இளைய தலைமுறையினரை தவறாக ஆக்கிரமித்து வருகிறது. இதனைத் தடை செய்ய வேண்டும் என்று கண்டனக் குரல்களும் எழுந்துள்ளது.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாக இருந்தது மியூசிக்கலி (musically) என்கிற செயலி. கடந்த ஆண்டு சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான பைட்-டான்ஸ் இந்த செயலியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையினால், இந்த செயலி மூடப்படும் என்ற செய்தி பரவியதால் அதன் பயனர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

திடீர் மாற்றமாக மியூசிக்கலி தரவுகள் மற்றும் பின் தொடர்வோர் அனைவரையும் முன்னறிவிப்பு எதுவுமின்றி டிக்டாக் (TicTok) என்கிற புதியதொரு செயலிக்கு மாற்றியது, அதிக மகிழ்ச்சி மற்றும் அதிர்ச்சியை அதன் பயனர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. டிக்டாக் செயலியும் மியூசிக்கலி செயலியைப் போன்றே 15 வினாடி அளவிலான சிறிய வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளும் செயலிதான்.

தங்களது முக பாவனைகளையும், நடிப்பு திறமைகளையும் வீடியோவாக பதிவு செய்து, அவற்றின் பின்னணியில்  பாடல்கள் அல்லது ஆடியோ போன்றவற்றை சேர்த்து பகிர்ந்து கொள்ள மியூசிக்கலி செயலி பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் புதிய டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் ரியாக்‌ஷன் என்னும் சேவை பயனர்களுக்கு வழங்கப்படு கிறது. தனது நண்பர்களின் பதிவுகளுக்கு, தன் கருத்துக்களை சுவாரசியமான gesture filter  மூலம் இனி கருத்து தெரிவிக்க முடியும்.

ஒரு பதிவுக்கு ஆயிரம் பேரிடமிருந்து வரவேற்பு கிடைத்தால், அடுத்த முறை இன்னும் கூடுதல் விருப்பங்கள் வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக பதற்றத்துக்கும், மொபைல் அடிமைத்தனத்துக்கும் ஆளாகின்றனர். இது அவர்களை மனரீதியாகவும், சமூகரீதியாகவும் பாதிக்கிறது. எனவே, இந்த செயலியின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அதனை தடை செய்யவும் வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்திருக்கிறது.

- கௌதம்