மரணப் படுக்கையில் சில மனிதர்கள்



தேவை அதிக கவனம்

‘படுத்தா பாயும் பகை’ என்பார்கள். அதிலும் மரணப்படுக்கையில் இருப்பவர்களின் நிலை சொல்லி மாளாது. ‘கோமா’ போன்ற பிரச்னைகளால் நீண்ட நாட்கள் படுக்கையில் இருப்பவர்களை எப்படி கவனித்துக் கொள்வது, என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து விளக்குகிறார் டாக்டர் ஆனந்த் பிரதாப்.

‘‘நீண்ட நாள் கோமாவில் இருக்கும் நோயாளிகளுக்கு மூச்சு மட்டும்தான் இருக்கும். நினைவு இருக்காது. இவர்களால் கூப்பிட்ட குரலுக்கு திரும்ப முடியாது. உணவு எடுத்துக்கொள்ள முடியாது. 24 மணிநேரமும் இந்த நோயாளிகளுக்கு நர்ஸ் ஒருவரின் கண்காணிப்பு தேவைப்படும்.

மூளையில் ரத்தக்கசிவு உள்ளவர்கள், தலையில் பலத்த காயம் அடைந்து குணம் அடையாத நபர்கள், மூளையில் ஏற்பட்ட கேன்சர் கட்டிக்கு பலமுறை சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாமல் ஆபத்தான நிலைக்கு செல்லும் நோயாளிகள், சிறுநீரகம், இதயம் பாதிப்பு அடைந்து கோமா நிலையை அடைபவர்கள், புற்றுநோய் முற்றி மற்ற உறுப்புகள் செயலிழந்து கோமா நிலைக்குச் செல்பவர்கள் என இவர்களை 5 வகைப்படுத்தலாம்.

இப்படிப்பட்டவர்களை கவனித்துக்கொள்வதில் மிகுந்த அக்கறை அவசியம். இவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறதா என்று அடிக்கடி கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேளை சுவாசித்தலில் சிரமம் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தால், கண்டிப்பாக மருத்துவர் உதவியை நாட வேண்டும். சுவாசம் இயல்பான நிலைக்கு வர, நர்ஸ் அல்லது மருத்துவர் உதவியுடன் நெபுலைசர் (Nebulizer) வைக்க வேண்டும்.

இவர்கள் படுக்கையிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பார்கள். எனவே, இவர்களுக்கு சிறுநீர் துவாரத்தில், சிறுநீர் குழாய் (Catheter) பொருத்தப்பட வேண்டும். இது சிறுநீர் பையுடன் இணைக்கப்பட வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், சிரமம் இன்றி மலம் கழிப்பதற்காக, ரப்பர் விரிப்பை படுக்கையில் போட வேண்டும்.

ஆசன வாயை சுற்றி நாப்கின் கட்டிவிட வேண்டும். இந்த நோயாளிகளுக்கு எட்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஆசன வாயை சுத்தம் செய்து, நாப்கினை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். சிறுநீர் இயல்பாக வெளியேறுவதற்கு பொருத்தப்பட்ட குழாய் மற்றும் மூச்சு சீராக இருப்பதற்கு பொருத்தப்பட்ட குழாய்களை மருத்துவரின் அனுமதியின்றி அகற்றக் கூடாது.

4 மணி நேரத்துக்கு ஒரு முறை இவர்களுடைய ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் குறைந்தாலோ, அதிகமானாலோ சற்றும் தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டும். இந்த நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்று பார்க்கும்போது, முதலில் ஏற்படுவது, முதுகில் உண்டாகும் படுக்கைப்புண்(Bedsore).

இந்தப் புண் மேலும் வராமல் தடுக்க, விலையுயர்ந்த படுக்கைகள் அல்லது நீர்படுக்கைகளைப் (Water Bed) பயன்படுத்தலாம். 2 அல்லது 3 தடவை ஒருக்களித்த நிலையில் இவர்களை படுக்க வைக்க வேண்டும். குப்புறப் படுக்க வைக்கக் கூடாது. எந்த காரணத்துக்காகவும் இவர்களை வெறுந்தரையிலோ, திறந்தவெளியிலோ படுக்க வைக்கக் கூடாது. இவர்கள் இருக்கும் அறை காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

இறுக்கமான ஆடைகளை அணிவிக்கக் கூடாது. குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கக் கூடாது. இவையெல்லாம் மூச்சடைப்பை அதிகப்படுத்தும். உணவுப்பொருள்கள், நீர்  மற்றும் பால் போன்றவற்றை வலுக்கட்டாயமாக தரக்கூடாது.இவர்களுக்கு அடிக்கடி நெஞ்சில் சளி கட்டும். நர்ஸ் வழிகாட்டுதலுடன் மூக்கு அல்லது தொண்டை வழியாக சளி உறிஞ்சான் குழாயை பொருத்தி, சளியை அகற்ற வேண்டும். இவர்களின் ரத்த ஓட்டம்  சரியாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக, கை மற்றும் கால்களுக்கு பிஸியோதெரபி (Physiotherapy) அளிக்க வேண்டும்.

மருத்துவர் உதவியைத் தவிர்த்து, வேப்பிலை அடித்தல், மாந்திரீக சிகிச்சை போன்ற வற்றை செய்யக்கூடாது. சில பேர்வழிகள் ‘மூச்சு ஒழுங்காக வருகிறதா பார்க்கிறேன்’ என்று மூக்கில் சிறு கயிறு, நூல் செலுத்தி பரிசோதனை செய்வார்கள். இவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். எதிர்பாராதவிதமாக, குறுகிய காலத்தில் கோமா நிலையை அடைபவர்களுக்கு முதல் உதவி செய்வதைவிட, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எமர்ஜென்சி வார்டுக்கு கொண்டு செல்வது நல்லது.

ஏனென்றால், முறையான பயிற்சி பெறாமல் முதலுதவி செய்கிறேன் என நேரத்தை வீணாக்கக் கூடாது. ஆனால், திடீரென கோமா நிலையை அடைந்தவர்களுக்கு, சுவாசம் சீராக உள்ளதா என்று பரிசோதனை பண்ண வேண்டும். உடலில் எங்கேயாவது ரத்தப்போக்கு இருந்தால் பஞ்சு, பேண்டேஜ் துணியால் அதை நிறுத்த வேண்டும். மார்பு, நெஞ்சு வலியால் துடிப்பவர்களுக்கு காரணம் தெரியாமல் முதலுதவி பண்ணக் கூடாது.

உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸ் அல்லது காரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். பைக், ஆட்டோவில் அழைத்துச் செல்லக்கூடாது.கிட்னி, மூளை, இதயம், நுரையீரல் மற்றும் வயிறு போன்ற உறுப்புகளின் பாதிப்புக்காக மாதக்கணக்கில் சிகிச்சை பெற்று வருபவர்கள், மாதம் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவர்கள் கண்டிப்பாக சுய மருந்துகள் எடுத்துக்கொள்ளக்கூடாது. நண்பர்கள், உறவினர்கள் சொன்னார்கள் என்று எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.

ஏற்கனவே எடுத்துவந்த சிகிச்சையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நிறுத்தக்கூடாது. ஒரு சிகிச்சை முறையில் இருந்து இன்னொரு சிகிச்சை முறைக்கு மாறக்கூடாது. எப்போதும் முறையான உணவு, உடற்பயிற்சி, சீரான தூக்கம், காற்றோட்ட மான வீடு என மன இறுக்கம் இல்லாமல் வாழ்ந்தால், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்...’’முறையான உணவு,உடற்பயிற்சி, சீரான தூக்கம், காற்றோட்டமான வீடு என மன இறுக்கம் இல்லாமல் வாழ்ந்தால், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்... இவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறதா என்று அடிக்கடி கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்...

-விஜயகுமார்