ஊசி போடுகிறவர்கள் எல்லாம் உண்மையான டாக்டர் அல்ல!



அதிர்ச்சி

‘30 ஆயிரம் போலி மருத்துவர்கள் தமிழ்நாட்டில் ‘சேவை’யில் இருக்கிறார்கள்’ என்று சமீபத்தில் அதிர வைத்திருக்கிறது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில். ‘போலி மருத்துவர் கைது’ என்று அவ்வப்போது செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில், இந்த அதிகாரப்பூர்வ தகவல் விழிப்புணர்வையும் சில சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவரான வி.எஸ்.துரைராஜிடம் இதுபற்றிப் பேசினோம்...

‘‘ஆங்கில மருத்துவம் (அலோபதி), ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, அக்குபஞ்சர் என பல்வேறு மருத்துவ முறைகளைப் பின்பற்றுகிற மருத்துவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள்தான் அலோபதி மருத்துவத்தை செய்ய வேண்டும்.

ஆனால், எம்.பி.பி.எஸ். படிக்காதவர், மருத்துவரிடம் வேலை பார்க்கும் செவிலியர், கம்பவுண்டர், மருந்துக்கடைக்காரர் போன்ற சிலர், மருத்துவரிடமிருந்து மருந்து வகைகளையும் சிகிச்சைகளையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, சொந்தமாக கிளினிக் திறந்து விடுகிறார்கள். இவர்களைத்தான் போலி மருத்துவர்கள் என்கிறோம்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 250 மருத்துவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள்தான் ஆங்கில மருத்துவம் பார்க்க வேண்டும். கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்களிலேயே சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள்...

சிலர் உயிருடன் இல்லை. ஆனால், தமிழகத்தில் அலோபதி மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையைவிட மிகவும் அதிகமாக இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருக்கலாம் என்று சொன்னோம். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருக்கலாம்...’’

போலி மருத்துவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

‘‘மருத்துவர் தன்னுடைய பெயர், கல்வித்தகுதி, பதிவு எண் போன்ற விவரங்களை ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். நோயாளி சந்தேகப்பட்டுக் கேட்கும் பட்சத்தில், தன்னைப் பற்றிய விவரங்களைக் காண்பிக்க வேண்டிய கடமையும் மருத்துவருக்கு இருக்கிறது.

இன்னும் எளிமையாக சொன்னால், எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்தான் ஊசி போட வேண்டும். மாற்று மருத்துவம் படித்த மருத்துவர்கள் கூட ஊசி போட மாட்டார்கள். அப்படி ஊசி போடும் பட்சத்தில் அவர்களையும் போலி மருத்துவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்...’’போலி மருத்துவர்களால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன?

‘‘பொருட்களில் போலி என்றால் அது பண விரயத்தோடு போய்விடும். மருத்துவர்களிலேயே போலி என்றால் அது உயிருக்கே உலை வைக்கிற அபாயம். அதிலும் ஆங்கில மருத்துவத்தைக் கவனமாகக் கையாளாவிட்டால், அது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும். முறையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே அதன் நுட்பங்கள் தெரியும். போலி மருத்துவர்களுக்கு நோயின் தன்மையைப் பற்றியோ, மருந்துகளின் தன்மையைப் பற்றியோ முழுமையாகத் தெரியாது.

இதனால் நோயாளிக்கு நோயும் தீராமல், சிறுநீரகம், இதயம், கல்லீரல் என உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து உயிரிழப்பு வரை என்ன வேண்டுமானாலும் நடந்துவிடுகிறது...’’ஒருவர் போலி மருத்துவர் என்று தெரிந்தால் எங்கு புகார் கொடுக்க வேண்டும்?‘‘ஒருவர் போலி மருத்துவராக இருக்கலாம் என்று சந்தேகப்படும் பட்சத் தில், ‘தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், 914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை-106’ என்ற முகவரிக்கு புகார் அனுப்பலாம்.

சந்தேகப்படும் நபர், அவரது மருத்துவமனை செயல்பட்டு வரும் முகவரி, முடிந்தால் மருத்துவமனையின் புகைப்படம் ஆகியவற்றுடன் புகார்தாரரும் தன்னைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும். தொலைபேசியின் வழியாகப் புகார் தெரிவிப்பதைத் தவிர்த்து, எழுத்துப்பூர்வமாக அளிப்பதே சரியான முறை. அதன்மீதுதான் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். எந்த முகாந்திரமும் இல்லாமல், ஒருவரிடம் விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை.

உள்ளூர் காவல்நிலையத்திலும் போலி
மருத்துவர்கள் பற்றி புகார் அளிக்கலாம்...’’
புகார் அளிக்கப்பட்டவர் மீது என்ன
நடவடிக்கை எடுப்பீர்கள்?
‘‘சந்தேகப்படும் நபரை சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரச் சொல்வோம். பெரும்பாலான போலி மருத்துவர்கள் சான்றிதழ் சரிபார்க்க அழைத்தவுடனே தலைமறைவாகிவிடுவார்கள்.இதிலேயே அவர்க ளுடைய போலித்தன்மை உறுதியாகிவிடும். எம்.பி.பி.எஸ். சான்றிதழையே போலியாகத் தயாரித்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த ஒருவரையும் சமீபத்தில் பிடித்தோம். இதுபோன்ற போலி மருத்துவர்கள் மோசடி என்ற சட்டத்தின்கீழ் வருவதால், அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடுவோம்.

கவுன்சிலில் பதிவு பெற்ற ஒரு மருத்துவர் மருத்துவத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ஏதாவது தவறுகள் புரிந்திருந்தால், அவர்மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். போலி மருத்துவரின் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை...

’’காவல்துறையிடம் ஒப்படைத்ததோடு உங்கள் கடமை முடிந்துவிடுமா?‘‘அப்படி இல்லை... போலி மருத்துவர் மேல் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். அப்போது சாட்சிகளாக நாங்கள் சென்றாக வேண்டும். அந்த வழக்கு முடியும் வரை நம் கடமை முடியாது...’’போலி மருத்துவர்களை ஏன் ஒழிக்க முடியவில்லை?

‘‘கஷ்டப்பட்டு நாங்கள் பிடிக்கிற போலி மருத்துவர் எளிதாக ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார். மீண்டும் அதே தொழிலை வேறு ஊரில் ஆரம்பித்துவிடுகிறார். ஒருவர் போலி மருத்துவர் என்று தெரிந்துவிட்டால், அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது. குண்டர் சட்டம்போல ஓராண்டாவது அவர் சிறைத்தண்டனையை அனுபவித்தால்தான் அவர்களுக்குப் பயம் ஏற்படும். சட்டம் கடுமையாக இல்லாத காரணத்தால்தான் போலிகளை ஒழிக்க முடியவில்லை...’’

இதில் மக்களின் பங்கு என்ன?

‘‘போலி மருத்துவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் இருக்கிறார்கள். அதனால், கிராமப்புற மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை. ஊசி போடுகிற மருத்துவராக இருந்தால் அவர் தன்னுடைய பெயருக்குப் பின்னால் எம்.பி.பி.எஸ். அல்லது எம்.டி. என்று தனது கல்வித்தகுதியைக் குறிப்பிட்டிருக்கிறாரா, பதிவு எண்ணைத் தெளிவாக எழுதியிருக்கிறாரா என்று கவனிக்க வேண்டும்.

வேறொரு மருத்துவரின் பதிவு எண்ணை குறிப்பிட்டு ஏமாற்றுகிறவர்களும் உண்டு. பெயருக்குப் பின்னால் RMP என்று போட்டுக் கொள்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் போலியாக இருக்கிறார்கள். அதனால், ஒருவர்மீது சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும்...’’வேறு என்ன வழிகளில் போலி மருத்துவர்களை ஒழிக்க முடியும்?

‘‘இது மக்களின் உயிரோடு விளையாடுகிற ஆபத்து என்பதால் எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் பொறுப்பு உண்டு. சமூகநல அமைப்புகள் இதுபோன்ற போலி மருத்துவரைக் கண்டுபிடித்தால் புகார்களை முன்னெடுக்கலாம். மருந்துக்கடைக்காரர்களிடம் மொத்தமாக மருந்து வாங்குகிற யார் மீதாவது சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம். சுகாதாரத்துறையும், காவல்துறையும் தொடர்ந்து ஆய்வுகள் செய்து போலி மருத்துவர்களைக் கண்டறிய வேண்டும். முக்கியமாக சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்!’’

கேப்ஸ்யூல்


விடாமல் விரட்டும் விக்கல் ஏன்? தீர்வு என்ன?

டி.ஜி.பாலச்சந்தர், இரைப்பை குடலியல் சிகிச்சை நிபுணர் “விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு  காரணங்கள் உண்டு. இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தலே இதற்கான முக்கியக் காரணம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அக்கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்த்திசையில் உணவுக்குழாய்க்கு செல்கிறது.

உணவுக்குழாயை சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து விடுவதாலும் விக்கல் ஏற்படும். நரம்பு மண்டலக் கோளாறு மற்றும் நுரையீரலில் ஏற்படும் கிருமித் தொற்று ஆகியவற்றாலும் விக்கல் ஏற்படும். விக்கலை நிறுத்த முதலுதவியாக சில கை வைத்தியங்களை மேற்கொள்ளலாம். சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நின்று போகும். பாலிதீன் பைக்குள் சுவாசித்தலும் (கவனம்: சில நொடிகள் மட்டும்தான்)

இதற்குத் தீர்வாக அமையும். ஏனெனில், பாலிதீன் பைக்குள் இருக்கிற ஆக்சிஜன் சிறிது நேரத்தில் தீர்ந்துபோய் கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசிக்க நேரும்போது விக்கல் நிற்கும். இதுபோன்ற முதலுதவிகளுக்கு விக்கல் கட்டுப்படவில்லையென்றால் மருத்துவத் தீர்வை நாடுவது நல்லது.

பொதுவாகவே நம் உணவு முறையில் அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கார வகை, எண்ணெய் மற்றும் மசால் பொருட்களைத் தவிர்த்து விடுதல் நல்லது. நல்ல உணவுப்பழக்கத்தை மேற்கொண்டும் விக்கல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி பரிசோதனைக்குப் பின்னர் தீர்வை நாடலாம்...”

-கிருஷ்ணவேணி

- ஞானதேசிகன்
படம்: ஆர்.கோபால்