பதற்றம் வேண்டாம்...கவனம் போதும்!



காய்ச்சல்களின் காலம்

காய்ச்சல் என்ற ஒற்றை வார்த்தை ஊரெல்லாம் ஒரே பேச்சாக பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என்ற விதவிதமான பெயர்களும், உயிரிழப்புகள் தொடர்பாக பரவக்கூடிய தகவல்களும் பதற வைப்பதாக இருக்கிறது. ஆனால், காய்ச்சல் குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. சில எளிய முறைகளைப் பின்பற்றினால் போதும் என்கிற பொதுநல மருத்துவர் சுகுநாதன், அதற்கான ஆலோசனைகளை இங்கே முன் வைக்கிறார்.

‘‘காய்ச்சல் என்பது எல்லோருக்கும் வரக்கூடியது. அது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கிறது. காய்ச்சல் வருவது ஒருவகையில் நல்லதும் கூட. ஏனெனில் உங்கள் கவனம் உங்கள் மீது தேவை என்கிற அலாரம் ஒலியை போல எச்சரிக்கையை தருகிறது காய்ச்சல். காய்ச்சலுடைய தாக்கம் அதிகமாகும்போதுதான் அது கவனிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. உடனடியாகப் பரிசோதித்து சிகிச்சை அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

சாதாரணமாக ஒருவருக்கு காய்ச்சல் மூன்று நாட்களுக்கும் மேல் அதிகம் இருந்தாலோ அல்லது உடலின் வெப்பநிலை 98 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருந்தாலோ உடனே கவனிக்கப்பட வேண்டும். உடலில் பொதுவாக பல்வேறு காய்ச்சல்கள் மனிதர்களை தாக்குகிறது. காய்ச்சல் ஒரு வைரஸ் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கிறது.

வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், நிஃபா வைரஸ் காய்ச்சல், டைபாய்டு, பறவைக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல்கள் இருக்கிறது. குறிப்பாக, மழைக்காலங்களைப் பொறுத்தளவு கொசுக்களால் பரவக்கூடிய காய்ச்சல்கள் அல்லது சுகாதாரமற்ற நீர், உணவால் ஏற்படக் கூடிய காய்ச்சல்கள் என இரண்டு வகைகளாக இருக்கிறது.

அதில் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய காய்ச்சலாக டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய், சிகா வைரஸ் நோய் போன்ற காய்ச்சல்கள் அதிகம் ஏற்படும். குறிப்பாக, மலேரியா Anopheles gambiae எனும் வகையைச் சேர்ந்த கொசுவால் பரப்பப்படுகிறது, சிக்குன் குனியா காய்ச்சலானது Aedes aegypti வகை கொசுக்களால் பரப்பப்படும். மூளைக்காய்ச்சல் Culex tarsalis எனும் வகை கொசுவால் பரப்பப்படுகிறது, டெங்குக் காய்ச்சல் ஏடிஸ் எகிப்தி எனும் வகை கொசுவால் பரப்பப்படுகிறது. யானைக்கால் நோய் Culex quinquefasciatus எனும் வகை கொசுவால் பரப்பப்படுகிறது. இவையெல்லாம் கொசுவால் பரவக்கூடிய காய்ச்சல்கள் ஆகும்.

இத்துடன் மழைக்காலங்களில் சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவுகளால் வைரஸ் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்றவையும் அதிகம் மக்களைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களை இத்தகைய காய்ச்சல்கள் எளிதில் தாக்குகிறது.
 மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் ஒரு நோய் இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய அபாயமும் கொண்டதாக இருக்கிறது. அதனால் மழைக்காலங்களில் காய்ச்சல் வராத வண்ணம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதில் சுய உணவு ஒழுக்கம், சுற்றுப்புறத் தூய்மை இரண்டையும் பின்பற்றுவது மிகவும் அவசியம்.

மழைக்கால காய்ச்சல்களும் அறிகுறிகளும்

வைரஸ் காய்ச்சல்

சுகாதாரக் குறைவான காற்று, தண்ணீர், கொசுக்களின் மூலம் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவுகிறது. இந்த காய்ச்சல் வந்தால் ஒரு வாரம் வரை நீடிக்கும், தீராத உடல் வலி, தோலில் அரிப்புகள் கடுமையான தலைவலி போன்றவை அறிகுறிகளாக இருக்கும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி தக்க சிகிச்சை மேற்கொள்ளும்போது மூன்று நாட்களுக்குள் குணப்படுத்திவிடலாம்.

டைபாய்டு காய்ச்சல்

மழைக்காலங்களில் ஏற்படும். சுகாதாரமற்ற உணவு மற்றும் குடிநீர் மூலம் நம் உடலுக்குள் Salmonella typhi பாக்டீரியா கிருமிகள் தாக்குகிறது. இதன் மூலம் டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் சிறுகுடலை பாதிக்கச் செய்கிறது. நாக்கில் வெண்படலம் தோன்றும். பசியின்மை. வாந்தி, வயிற்று வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

மலேரியா

மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது நுளம்பினால் ஒருவரிலிருந்து ஒருவருக்குக் கடத்தப்படுகிறது. இந்த நோய் மழைக்காலங்களில் கொசுக்களால் தொற்றக்கூடிய ஒரு காய்ச்சல் இந்த காய்ச்சல் வந்தால் குளிர் நடுக்கம், ஏற்படும். பெரும்பாலும், மலேரியா நோய் தொற்றியவுடன் காய்ச்சல் ஏற்படுவதில்லை அதிகபட்சம் 30 நாட்கள் வரை ஆகிறது.

டெங்கு காய்ச்சல்

இது மழைக்காலங்களில் தேங்கியிருக்கிற தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் எகிப்தி என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த கொசு பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கிறது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, வயிற்றுவலி, கண்ணுக்குப் பின்புறம் ஏற்படும்.

வலி, வாந்தி, உடல்சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். டெங்குவில் 4 வகை உட்பிரிவுகள் வைரஸ்கள் உள்ளது. இந்த நான்கு வகையிலும் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வரலாம். ஒரு வகை டெங்கு காய்ச்சல் குணப்படுத்தியும், கொசுவால் மற்ற வகை டெங்கு காய்ச்சலும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால், டெங்கு எந்த வகை வைரஸால் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டிய கடமை
மருத்துவர்களுக்கு அதிகம் இருக்கிறது.

மூளைக்காய்ச்சல்

மூளைச்சவ்வுக் காய்ச்சல் Culex tarsalis எனும் வகை கொசுவால் பரப்பப்படுகிறது, இதனால் மூளையைச் சுற்றி உள்ள மூளைச் சவ்வுகள் வீக்கமடைகிறது. கொசுக்கள் மூலம் பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது. தலைவலி, ஒளி விரும்பாமை, எரிச்சல், கழுத்துப் பகுதியில் தசை இறுக்கம், காய்ச்சல் மற்றும் பிற நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். கழுத்து வலி, காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, மயக்கம் ஆகியவை மூளைக் காய்ச்சலால் தோன்றுகிறது. இதனால் மூளை பாதிக்கப்பட்டால் வலிப்பு நோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

யானைக்கால் நோய் பாதிப்பு

இது ஃபைலேரியா (Filaria) என்னும் நுண்புழுவாலும், கொசுக்களாலும் இந்த நோய் பரவுகிறது. இது கால் பகுதியை தாக்கி கால்களை ஊதிபெருக்கச் செய்கிறது. இது காலைத் தவிர பிற பகுதிகளையும் தாக்கும். இது பெரும்பாலும் கியுலக்ஸ் (Culex) என்ற வகையான கொசுக்கள் கடிப்பதால் யானைக்கால் நோய் பரவுகிறது. இதன் அறிகுறிகளாக இரவு நேரங்களில் காய்ச்சல், நெறிகட்டுதல், கால்வீக்கம், விறைவீக்கம் போன்றவைகளாக இருக்கிறது.

சிக்குன் குனியா காய்ச்சல்

ஏடிஸ் எகிப்தி வகை கொசுக்களால் பரப்பப்படும். ஒரு வகை காய்ச்சல் இதன் அறிகுறிகளாக காய்ச்சலும் மூட்டு வலியும் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. தலைவலி மற்றும் ஒளி ஒவ்வாமையும் ஒவ்வாமை இருக்கும். தலைவலி, மூட்டுவலி, தூக்கமின்மை ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

ஜிகா வைரஸ்

இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடிய நோயாகும். இதை தடுக்கக்கூடிய மருந்து இன்னும் கண்டறியபடவில்லை. கொசுக்கள் மூலம் பரவும் ஸிகா என்ற வைரஸ்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. தலைவலி, தசை பிடிப்பு, கண்களில் வலி, கால் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

சிகிச்சைகள்

ஒருவருக்கு காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்களுக்குமேல் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து அது எந்த வகை காய்ச்சல் என்பதை கண்டறிந்திட முடியும். இது ரத்தத்துடைய வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்களை கணக்கிட்டு இது எந்த வகை காய்ச்சல் என்பதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சாதாரண வைரஸ் தொற்றாக இருந்தால் அதிக பட்சம் மூன்று நாட்களுக்குள் மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம் அல்லது டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலாக இருந்தால் அதிகபட்சம் ஒரு வாரத்திற்கு மேல் உள்நோயாளிகளாக வைத்து நோயாளியின் காய்ச்சலுக்கேற்பவும், அவருடைய உடல்நிலைக்கு ஏற்பவும் அதற்குரிய ஆன்டிபயாடிக் ஊசிகள், மருந்துகள் செலுத்தி குணப்படுத்த முடியும்.

அட்டென்ஷன் ப்ளீஸ்

மழைக்காலங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய காய்ச்சல்கள் கொசுக்களால் தான் பரவுகிறது. அதனால் மழைக்காலங்களில் கொசுக்கள் கடிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு அருகில் நீர்த்தேக்கங்கள் இருந்தாலோ சுத்தம் சுகாதாரம் மற்ற சூழல் இருந்தாலோ கொசு உற்பத்திக்கான சூழல் அமைந்தாலோ உடனடியாக அருகில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் சூழலை தூய்மைப்படுத்தி கொசு உற்பத்தியை தடுத்து, புகை மருந்துகள் மூலம் கொசுக்களை விரட்டுகிறார்கள்.

அதனால் அலட்சியமாக இல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடிக்கும் தண்ணீரை சுட வைத்து வடி கட்டி பயன்படுத்த வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும், ஃபிரிட்ஜ் உணவுகள், பழைய உணவுகளை உட்கொள்ளாமல் உடனுக்குடன் தயார் செய்து உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலோ பொது மருத்துவமனையிலோ சென்று காய்ச்சல் பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- க.இளஞ்சேரன்

படம் : ஏ.டி.தமிழ்வாணன்