உயிர்க்கொல்லியாகும் மூச்சடைப்பு நோய்



அபாய அலாரம்

சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்படும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காற்று மாசு காரணமாக ஏற்படும் COPD என்கிற மூச்சடைப்பு தற்போது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதும் 6.4 கோடி மக்கள் நோயால் துன்பப்படுகின்றனர். வரும் 2030-ம் ஆண்டுகளில் மனித இறப்புக்குக் காரணமான நோய்களில் COPD மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புகையிலை அல்லது புகையின் பாதிப்புக்கு ஆளாகிறவர்கள், புகைக்கும் பழக்கமுடைய ஆஸ்துமா நோயாளிகள், காற்று, சமையல் எரிவாயு போன்ற உள் மற்றும் வெளி மாசுகளால் பாதிக்கப்படுகிறவர்கள், பணியிட தூசி மற்றும் வேதிப் பொருட்களால் ஏற்படுகிற நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்படுபவர்கள் போன்ற அனைவருக்கும் இந்நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இழுப்பு, நெஞ்சிறுக்கம், சளியோடு கூடிய இருமல், எதிர்பாராத எடை இழப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டதாக இருக்கிறது. சளி, நச்சுக்காய்ச்சல், நிமோனியா போன்ற சுவாசத் தொற்றுக்கள், மிகை ரத்த அழுத்தம், மாரடைப்பு உட்பட இதய நோய்கள், நுரையீரல் புற்று, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இந்நோயால் ஏற்படுகிறது.

எனவே, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புகை பிடித்தலைத் தவிர்க்க வேண்டும். காற்று, வேதியியல் ஆவி, தூசி போன்ற வெளி அல்லது உள் மாசுகளைத் தவிர்க்க வேண்டும். அதிக போக்குவரத்து, சந்தை, வேதியியல் தொழிற்சாலை போன்ற நெருக்கமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

பணியிட தூசி, வேதியியல் பொருட்களைத் தவிர்க்க முகமூடி பயன்படுத்த வேண்டும். மூச்சடைப்பு நோயாளியாக இருந்தால் பட்டாசு, புகை ஆவி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள். இதனை ஒரு அபாய அலாரமாகக் கொண்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகியிருக்கிறது.

- அஜி