மகிழ்ச்சியாக இருக்க விரும்புங்கள்!



சுகர் ஸ்மார்ட்

1 சோனம் கபூர்...

பாலிவுட்டின் பேபி டால்! நடிகர் அனில் கபூரின் அன்பு மகள். 2007ல்   Saawariya படம் மூலம் அறிமுகமானவர். “I hate love stories” படத்தில் இளைஞர்கள் மனதைக் கொள்ளை கொண்டு, பிஸியான ஸ்டாராக வலம் வருபவர். நம்ம ஊர் தனுஷ் உடன்  Raanjhanaa படத்தில் நடித்த அந்த அழகியேதான்! (தமிழில்: அம்பிகாபதி).

சோனம் தினமும் சராசரியாக 10 மணி நேரத்துக்கும் அதிகமாக படப்பிடிப்புத் தளத்தில் ஆடுகிறார்... ஓடுகிறார்... காதல் செய்கிறார்... கண்ணீரும் விடுகிறார். ஓயாது உழைக்கும் இவரைப் பற்றி பலரும் அறியாத ஒரு ரகசியம்...

இவர் டைப் 1 நீரிழிவாளர் (Juvenile diabetes ) என்பது! ஏழை, பணக்காரர், சிறியவர், பெரியவர் என எந்த பேதமும் பாராமல் தாக்கக்கூடிய டயாபடீஸ் பிரச்னையை வெற்றிகரமாக  எதிர்கொள்ள முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணமாகத் திகழ்கிறார் சோனம்.

ஒரு காலத்தில் 90 கிலோ எடை இருந்தார். சைஸ் 16. இது தனது நீரிழிவுக்கு சவாலானது என உணர்ந்த அடுத்த நிமிடமே, செயலில் இறங்கினார். இப்போது அவரது எடை
65 கிலோ. சைஸ் 2! தீவிரமான உடற்பயிற்சி மற்றும் திட்டமிட்ட உணவுத் திட்டமே அவரது வெற்றி ரகசியம். 5 வேளைகளாகப் பிரிக்கப்பட்டலோ கார்போஹைட்ரேட் ஹை புரோட்டீன் உணவு முறை. காலை உணவாக ஓட்மீல் மற்றும் அனுமதிக்கப்பட்ட பழங்கள். அதன் பின் உடற்பயிற்சி.

பிறகு பிரவுன் பிரெட்டும் முட்டையின் வெள்ளைக்கருவும். அதோடு புரதச்சத்து பானம். மதிய உணவுக்கு ராகி சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள், சாலட். மாலையில் மீண்டும் பிரவுன் பிரெட்டும் முட்டையின் வெள்ளைக்கருவும். இரவு உணவில் சூப், சாலட், ஒரு துண்டு க்ரில்டு சிக்கன் அல்லது மீன். இடையிடையே உலர் பழங்கள்.

நாள் முழுக்க நிறைய நீராகாரம் உண்டு. சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றையெல்லாம் சோனம் கண்ணாலும் பார்ப்பது இல்லை!மருத்துவர்கள் சோனம் கபூருக்கு அளித்த 4 அறிவுரைகளை அவர் தவறாது பின்பற்றுகிறார்.

* பிதீ1ணீநீ அளவைத் துல்லியமாகப் பராமரித்தல்
* சமச்சீர் உணவுத் திட்டம்
* வழக்கமான உடற்பயிற்சி
* சரியான மருந்துகள்.

இந்த அளவு சோனம் துல்லியமாகச் செயல்படுவதற்கு, ஒருமுறை அவர் பட்ட அவஸ்தையும் காரணம். வயிற்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றை அவர் கண்டுகொள்ளாமல் விட்ட போது, அது குடல் நோயாக மாறி, அவரை மருத்துவமனை படுக்கையில் 10 நாட்கள் தள்ளியது. அந்தக் கொடுமையான அனுபவத்துக்குப் பிறகு, அவரது உடல்நல அக்கறையில் அலட்சியம் காட்டுவதே இல்லை!

திட்டமிட்டுச் செயல்பட்டதன் காரணமாக, சோனம் கபூரால் ஒரே ஆண்டில் 30 கிலோ எடை குறைக்க முடிந்தது. வெயிட் ட்ரெயினிங், யோகா, பைலேட்ஸ் ஆகிய மூன்றும்தான் அவரது ரெகுலர் பயிற்சிகள். இவற்றோடு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்குவாஷ் ஆடுவார்... மீனாக மாறி நீந்துவார்.

‘‘நீரிழிவுக்குப் பிறகு, நீங்கள் ஹைபர் சென்சிட்டிவ் உடையவராக (மிகை உணர்வு) மாறிவிடுவீர்கள். நீங்கள் யாராக இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என்பதில் ஏற்கனவே உங்களுக்கு ஒருவித சிக்கலான மனப்பான்மை இருப்பதால், யார் என்ன சொன்னாலும் உங்களைப் பாதிக்கும். நீங்களும் அவர்களுக்குப் பதிலுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் சண்டைதான் மிஞ்சும். உறவுகள் சிக்கலாகும். நான் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறேன்... அதற்கு ஏற்பவே செயல்படுகிறேன்.

இது உங்களுக்கும் பொருந்தும்  என சக நீரிழிவாளர்களுக்கு மனவியல் ரீதியாக புதுமையான கோணத்தில் அனுபவம் பகிர்கிறார், நாள் தவறாமல் இன்சுலின் எடுத்துக்கொள்ளும் சின்சியர் சோனம். இதில் அவருக்கு எந்தச் சலிப்பும் வருத்தமும் இல்லை என்பதே செய்தி!சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றைஎல்லாம் சோனம் கபூர் கண்ணாலும் பார்ப்பது இல்லை!

2 சரியா? தவறா?

உலகின் ஒட்டுமொத்த டயாபடீஸ் நபர்களில் 10 முதல் 15 சதவிகிதத்தினரே டைப் 1 பிரச்னை உடையவர்கள்.

குடும்பப் பின்னணியில் சர்க்கரை நோய் இருந்தால்தான் அடுத்த சந்ததியினருக்கும் வரும்?

இது முற்றிலும் தவறு. குடும்பப் பின்னணியில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், மற்றவர்களுக்கும் வருவதற்கான அபாயம் அதிகம். ஆனால், அப்படி இல்லாதவர்களுக்கும் இன்று வேறு காரணங்களால் நோய் வரும். முன்பெல்லாம் 60, 70 வயதில் வந்த சர்க்கரை நோய், இப்போது 18, 19 வயதிலேயே வருகிறது.அடிபட்ட காயமோ, புண்ணோ உடனே ஆறிவிட்டால் சர்க்கரை நோய் இருக்காது?

இதுவும் தவறான அபிப்ராயம். சர்க்கரையின் அளவைப் பொறுத்த விஷயம் இது. அளவு அதிகரிக்கிற போதுதான் காயம் ஆறாமல் இருப்பதெல்லாம் இருக்கும். ஆரம்ப கட்டத்தில் அப்படி இருக்காது.அசைவம் சாப்பிடுகிறவர்களுக்குத்தான்

சர்க்கரை நோய் வரும்?

அப்படிப் பார்த்தால் சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு சர்க்கரை நோயே இருக்காது இல்லையா? என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, எப்படி சமைத்து சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம்.
இனிப்பு அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்?

இனிப்பு சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும். பருமன் கூடினால் சர்க்கரை நோய் வர சந்தர்ப்பங்கள் அதிகம்.பாகற்காய் மாதிரி கசப்பான அயிட்டங்கள்

சாப்பிடுவது சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்?

சர்க்கரை இனிப்பு என்பதால், கசப்பான உணவுகளை சாப்பிடுவது அதை ஈடுகட்டும் என கண்மூடித்தனமாக உருவான நம்பிக்கை இது. வெந்தயம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம். அதை சாப்பிடுகிற போது உட்கொள்ளும் உணவின் அளவு குறைகிறது. பருமனாவது தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோய் அபாயமும் குறைகிறது.

சர்க்கரை நோயாளிகள் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும்?

அது அவரவர் எடை மற்றும் உயரத்தைப் பொறுத்தது. எடைக்கும் உயரத்துக்கும் ஏற்றபடி, உழைப்புக்கேற்றபடி சாப்பிடுவதில் தவறில்லை.

கஞ்சி மாதிரியான திரவ உணவுகளை சாப்பிடக் கூடாது?

கோதுமையை சப்பாத்தியாக சாப்பிடுகிறோமா, கஞ்சியாக சாப்பிடுகிறோமா என்பதில் இல்லை பிரச்னை. அதில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம். ஓட்ஸ் கஞ்சி, கேழ்வரகுக் கஞ்சி போன்றவை மிக நல்லது.சர்க்கரை நோய்க்கு காலத்துக்கும் மாத்திரைகளைத் தொடர வேண்டும்?

கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றில் கண்டிப்பாக இருந்தால், ஒரு கட்டத்தில் மாத்திரைகளின் உதவியின்றி இருக்கலாம்.
சுய சோதனையே போதும்?

சர்க்கரையின் அளவை சரிபார்க்க உதவும் கருவியை வைத்துக் கொண்டு, வீட்டிலேயே அடிக்கடி பார்த்துக் கொள்கிறவர்கள் பலர். அதற்காக அதையே முழுக்க நம்பாமல், அடிக்கடி பரிசோதனைக்கூடத்தில் செய்கிற போது, உடனேயே இந்தக் கருவியிலும் செய்து, வித்தியாசத்தைப் பார்க்கலாம். வீட்டிலேயே வாரம் ஒரு முறை கூட சோதனை செய்து கொள்ளலாம். சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் செய்து பார்க்கலாம்.

பிதீகி1நீ என்கிற சோதனையில் கடந்த 2 அல்லது 3 மாதங்களுக்கான சர்க்கரை அளவைத் தெரிந்து கொள்ளலாம். ஏற்ற, இறக்கம் சரியாகத் தெரிய இந்த சோதனை உதவும்.
குறைந்தால் நல்லதுதானே?சிலருக்கு சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சாப்பிடுகிற போது, சர்க்கரையின் அளவு கிடுகிடுவெனக் குறைய ஆரம்பிக்கும். தனக்கு சர்க்கரை ரொம்பவும் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள் தப்பர்த்தம் செய்து கொள்வார்கள். சிறுநீரகம் பாதிக்கப்பட்டாலும், இப்படி மாத்திரைகளால் சர்க்கரை அளவு குறையலாம். எனவே, சிறுநீரகப் பரிசோதனை, நீரிழிவு நோயாளிகள் எல்லாருக்கும் அவசியம்.

மாத்திரைகள் உதவாத போது?

ஆரம்ப நிலை நீரிழிவை உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகளின் மூலமே கட்டுப்படுத்தி விடலாம். சர்க்கரை அளவு கட்டுப்படாவிட்டால் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். இன்சுலின் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால், அது தொடர்கதையாகி விடும் (Once on insulin. always on insulin) என பரவலான நம்பிக்கை ஒன்று உண்டு. இது தவறு. சர்க்கரை அளவு தாறுமாறாக எகிறும் போது சிலருக்கு சில வாரங்களுக்கு இன்சுலின் ஊசி போட்டு, கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து, பிறகு, மருத்துவர் ஆலோசனை பெற்று, மறுபடி மாத்திரைகளைத் தொடரலாம்.

இன்சுலினில் பல வகைகள் உள்ளன. ஷார்ட் ஆக்டிங் இன்சுலின் என்பது 4 முதல் 6 மணி நேரம் வரை பலனளிக்கும். இதை உணவுக்கு முன் போட்டுக் கொள்ள வேண்டும்.
லாங் ஆக்டிங் இன்சுலின் என்பது 12 மணி நேரம் அல்லது 24 மணி நேரத்துக்குப் பலனளிக்கும்.நோயாளிகளின் உடல்நிலை மற்றும் பாதிப்பின் அளவைப் பொறுத்து நாளொன்றுக்கு 1 முதல் 4 இன்சுலின் ஊசிகள் வரை தேவைப்படலாம்.

மாத்திரைகளை ஆரம்பித்த பிறகு 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு தடவை, முறையான மருத்துவப் பரிசோதனை முக்கியம். ரத்த சர்க்கரை அளவுக்கான சோதனையும், ரத்த அழுத்தத்துக்கான சோதனையும் செய்து பார்க்க வேண்டும். ரத்த சர்க்கரைக்கான சோதனையை எப்போதும் மாத்திரையை சாப்பிட்ட பிறகே எடுக்க வேண்டும். இவை தவிர, பி.பி. மற்றும் கொலஸ்ட்ராலுக்கான சோதனைகளும் அவசியம்.

(கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)

தாஸ்