செம்ம வெய்ட்டு...Obese Stress

‘‘மனிதரை வாட்டும் பலவிதமான கவலைகளில் உடல் பருமனால் வரும் கவலையும் இப்போது முக்கியமானதாகிவிட்டது. மற்றவர்களின் கிண்டல்கள், நோய் குறித்த அச்சங்கள், பொருத்தமான ஆடைகள் கிடைக்காத அவதி என்று பல்வேறுவிதமாக மன அழுத்தத்துக்கு
ஆளாகிறார்கள்.

எனவே, உடல்ரீதியான எடை குறைப்பு சிகிச்சையிலும், உணவுமுறையிலும் அவர்கள் மாற்றம் மேற்கொள்ளும்போது உளவியல்ரீதியிலான ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வது நலம் தரும்’’ என்கிறார்
மன நல ஆலோசகர் அபர்ணா.

‘‘ஒரு நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கடைபிடித்த உணவுகள் உலகமயமாக்கலில் அது முற்றிலும் சம்பந்தமே இல்லாத இன்னொருவகை உணவுப்பழக்கமாக மாறிவருகிறது. இது ஒருவரின் ஆரோக்கியத்தை சீர்குலைப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக சராசரி உடல் எடையை விட அதிகமான உடல் பருமன் கொண்டவர்கள் இயல்பாகவே மன அழுத்தத்துக்கு ஆளானவர்களாக இருக்கிறார்கள்.

ஒருவர் பருமனாக இருப்பதற்கு தவறான உணவுப்பழக்கம், மரபியல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை காரணங்களாக இருக்கின்றன. எனவே, மன அழுத்தத்துக்கு ஆளாவதைவிட பருமனானதன் காரணி என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

இயல்பாக உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போது அதிகமாக சாப்பிடுகிற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதைத்தான் Emotional Eating என்கிறோம். இவர்களுக்கு பருமன் பிரச்னை இன்னும் அதிகமாக இருக்கிறது.

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்போது தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். இது மனரீதியாக மேலும் பிரச்னை தரும். உடல் எடை குறித்த மன நோய்க்குள்ளானவர்கள் 2 விதமாக தூக்கக் குறைபாடுகளில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிகம் தூங்குதல் பிரச்னை அல்லது தூக்கமின்மை பிரச்னை என இருவேறு கட்டத்திலும் ஊசலாடுகிறார்கள்.

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களை சமூகமும் அவர்களை பல வழிகளில் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. ஒல்லியாக இருப்பதுதான் அழகு, அவர்கள்தான் கதாநாயகிகள் போன்ற பிம்பங்களை ஊடகங்களில் தொடர்ந்து காண்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களை சினிமாக்களில் கேலிப் பொருளாகவும் சித்தரிக்கிறார்கள். ‘ஒரே நாளில் உங்கள் எடையை குறைத்துக் காட்டுகிறோம்’, ‘ஒரு நாள்… ஒரு கிலோ’ போன்ற உடல் பருமன் சார்ந்த  வாசகங்கள் பொருந்திய விளம்பரங்களும் எல்லா இடங்களிலும் நம்மை ஆக்கிரமிக்கிறது. எனவே, இவைகளிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும்.

உடல் எடை குறித்து கவலைப்படுவதை முதலில் நிறுத்த வேண்டும். சராசரி உடல் எடையை விட அதிகமாக இருந்தால் அன்றாடம் உணவு எடுத்துக்கொள்வதை கவனிக்க வேண்டும். பசி வந்த பிறகா அல்லது உணர்ச்சி வயப்பட்ட நிலையிலா அல்லது பொழுதுபோக்குக்காகவா என எப்போது உணவு எடுத்துக் கொள்கிறோம் என்பதை ஆராய வேண்டும்.

குறிப்பாக, பசியே இல்லாதபோது உணவு எடுத்துக்கொண்டால் அது மனநலம் சார்ந்த பிரச்னையாகக் கூட இருக்கலாம். அதனால்தான் மன நல ஆலோசகரை பார்ப்பது நல்லது என்று கூறுகிறோம்.

நீங்கள் உண்ணும் உணவு மற்றும் நொறுக்குத்தீனிகள் போன்றவை உங்கள் பசியைப் பொறுத்து அமைத்துக் கொள்ள வேண்டும். அதை புறச்சூழல் தீர்மானிக்கிற வகையில் இருக்கக் கூடாது. முக்கியமாக நம்முடைய பாரம்பரிய உணவுகள் எடுத்துக்கொள்வது எளிதில் ஜீரணமடையக் கூடிய உணவுகளை அன்றாட உணவுகளாக உட்கொள்வது ஆரோக்கியமானது!’’

- க.இளஞ்சேரன்