அலற வைக்கும் அலட்சியம்!



மருத்துவ கவனக் குறைபாடு!

சில ஆரம்ப சுகாதார நிலையங்கள்... 
சில அவலங்கள்!

அவலம் 1

ஒரு கிராமத்து ஆரம்ப சுகாதார நிலையம். பிரசவ வார்டில் எப்போதும் மருத்துவரும் நர்ஸும் இருக்க வேண்டும் என்பது விதி. பின்னிரவு. நர்ஸுகள் வேறோர் அறைக்கு ஓய்வெடுக்கப் போய்விடுகிறார்கள். ஒரு பெண்ணுக்கு தானாகவே பிரசவம் நிகழ்ந்து விடுகிறது. பிறந்த குழந்தை, படுக்கையில் இருந்து வழுக்கி கீழே விழுந்து விடுகிறது. விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, மூளையில் ரத்தக்கசிவு உண்டாகி மரணம் நிகழ்கிறது.

மருத்துவமனையில் ‘இறந்தே பிறந்து விட்டது’ என்று அறிக்கை கொடுக்கிறார்கள். குழந்தையின் தலை வீங்கி இருந்ததால் சந்தேக மடைந்த பெற்றோர் வழக்குத் தொடுக்கிறார்கள். குழந்தை உயிரோடுதான் பிறந்தது என்பதும், கீழே விழுந்ததில் அடிபட்டு உயிர் பறிபோயிருப்பதும் போஸ்ட்மார்ட்டத்தில், Lung Float test பரிசோதனைக்குப் பின் உறுதி செய்யப்படுகிறது. வழக்கு இன்னும் நடக்கிறது.

அவலம் 2

பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஒரு பெண். 2 நாட்களுக்கும் மேலாகியும் பிரசவம் நிகழவில்லை. இரவு இரண்டரை மணிக்கு அவரை அருகில் இருக்கும் சிறுநகர்  அரசு மருத்துவமனைக்குப் போகச் சொல்கிறார்கள். பெண்ணும் அங்கே அனுப்பப்படுகிறார். அங்கு குழந்தை இறந்து பிறக்கிறது, அம்மா காப்பாற்றப்படுகிறார். ‘நள்ளிரவில் ஏன் அனுப்பினீர்கள்’ என்று அந்தப் பெண்ணின் தரப்பில் கேட்கிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘Caput Formation’ என்று தகவல் சொல்லியிருக்கிறார்கள். பெண்ணுக்கு குழந்தையின் தலை வெளியே வரும் இடத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற சிக்கலான பிரசவங்களை ‘Obstructed Labour’ என்று குறிப்பிடுகிறார்கள்.

 ஒரு பெண் பிரசவ வலியில் அனுமதிக்கப்பட்ட பிறகு, 20லிருந்து 30 மணி நேரத்துக்கு மேலானால், அதை ‘Prolonged Labour’ என்பார்கள். அந்தப் பெண்ணின் பிரச்னையை முதலிலேயே மருத்துவர்கள் கணித்திருக்க வேண்டும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது விதி. சம்பவம் நடந்து 4 மாதங்கள் ஆகியும் குழந்தையின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வழங்கப்படவில்லை.

அவலம் 3

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்தக்கொதிப்பு. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். சென்னையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அந்தப் பெண் சேர்க்கப்படுகிறார். சிசேரியன் செய்து குழந்தையை எடுத்தபோது, அந்தப் பெண்ணின் வயிற்றில் சிறிது நஞ்சுக்கொடி (Placenta) தங்கிவிடுகிறது. மருத்துவ அறிக்கையோ எல்லாவற்றையும் சுத்தமாக எடுத்தாகிவிட்டது என்கிறது. அதாவது, கேஸ் ஹிஸ்டரியை தவறாக எழுதிவிடுகிறார்கள்.

ஊருக்குத் திரும்பிய அந்தப் பெண்ணுக்கு ரத்த ஒழுக்கு, கடுமையான ஜுரம் ஏற்படுகிறது. ஸ்கேன் செய்து பார்த்ததில் கருப்பையில் சிறிது நஞ்சுக்கொடி ஒட்டிக் கொண்டிருப்பது தெரிகிறது. அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார்கள். அதிலும் நஞ்சுக்கொடி கருப்பையில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னைக்கு வந்து வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைக்கிறார் அந்தப் பெண்.

மேலே சொன்ன அவலங்களுக்கு ஒரு பெயர் உண்டு... ‘மருத்துவ கவனக் குறைபாடு’ (Medical Negligence). இது போல இந்தியா வில் எத்தனையோ நிகழ்வுகள்... சமீபத்தில் கூட உதகை அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 5 பெண்கள் இறந்து போனார்கள். காரணம் என்னவென்று இன்னமும் தெளிவாகவில்லை.

உயிர் காக்கும், நோய் தீர்க்கும் மருத்துவமனைகள் சில நேரங்களில் சறுக்கிவிட என்ன காரணம்? பல அப்பாவி மக்களின் உயிர் போவதற்கு மருத்துவ கவனக் குறைபாடும் ஒரு காரணமா? தெய்வத்துக்கு சமமாகக் கருதப்படும் மருத்துவர்களுக்கும் கவனக் குறைபாடு ஏற்படுமா? அது என்ன மருத்துவ கவனக் குறைபாடு? தீர்வு உண்டா? விரிவாகப் பேசுகிறார் மருத்துவர் புகழேந்தி...

‘‘மருத்துவர் தன்கிட்ட வர்ற நோயாளிக்கு, நோயின் தன்மைக்கு ஏற்ப என்னென்ன சிகிச்சைகள் செய்யணும்னு சில வழிமுறைகள் இருக்கு. அதை சரியா செய்யாம விட்டுடறது தான் கவனக் குறைபாடு. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் ஒரு நோய்க்கு எப்படி சிகிச்சை கொடுக்கணும், என்ன மருந்து கொடுக்கணும், எந்த நேரத்துல டெஸ்ட் பண்ணணும்னு எல்லாத்தையும் சட்டமாகவே  வச்சிருக்காங்க.

அதாவது, ‘ஸ்டேண்டர்டு மெடிக்கல் ட்ரீட்மென்ட்’. ஒரு டாக்டர் சரியா சிகிச்சை தர்றாரா, இல்லையாங்கறது அந்த அறிக்கையைப் பார்த்தாலே தெரிஞ்சிடும். சாதாரண ஜுரம், நீரிழிவு, டெங்கு, சிக்குன்குன்யா, ஃப்ளூன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி சிகிச்சை இருக்கு. சட்டப்படி சிகிச்சை நடக்கலைன்னா வழக்கு போட்டுருவாங்க. இந்தியாவுலயும் ஸ்டேண்டர்டு மெடிக்கல் ட்ரீட்மென்டுக்கான கைடுலைன்ஸ் இருக்கு. ஆனா, இன்னும் சட்டமாக்கலை. 

அமெரிக்காவுல ‘எசென்ஷியல் மெடிக்கல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்’ இருக்கு. உதாரணமா ரத்தக்கொதிப்புன்னு வச்சுக்குவோம். அது ஏன் வருது, எப்படி கையாளணும், சிகிச்சைகள் என்னென்ன, என்ன மாத்திரை கொடுக்கணும்னு யாரு வேணாலும் தெரிஞ்சிக்கலாம். அது எல்லாமே ‘பப்ளிக் டொமைன்’ல இருக்கு. புத்தகமாகவே கிடைக்கும்.

இப்படி வரையறுத்து வைக்கும் போது, தேவையில்லாத மருந்துகளைக் கொடுக்கவோ, தேவையில்லாத டெஸ்டுகளை எடுக்கச் சொல்லவோ முடியாது. ‘அமாக்ஸலின்’னு ஒரு ஆன்டிபயாடிக் மருந்தைக் கொடுத்தா, கூடவே அந்த மருந்து பத்தின முழுத்தகவலையும் கொடுக்கணும். அதனோட சாதக பாதகங்கள் போன்ற எல்லா தகவல்களும் இருக்கணும்.

அமெரிக்காவுலயும் இதுல பிரச்னைகள் இல்லாம இல்லை. அதாவது, சில விவரங்கள் நோயாளிக்கு தெரிஞ்ச மொழியில இருக்காது. தொழில்நுட்ப வார்த்தைகளால மறைச்சிருப்பாங்க. உதாரணமா, ‘Pyrexia’ன்னா யாருக்கும் புரியாது. ஜுரத்தை மெடிக்கல் டேர்ம்ல அப்படித்தான் சொல்லுவாங்க. ‘Fever‘னாதான் எல்லாருக்கும் புரியும்.

‘Fluosctine’ அப்படிங்கிற மருந்தை அங்கே மன அழுத்தத்துக்குக் கொடுப்பாங்க. அந்த மருந்தை சாப்பிட்ட பல பேருக்கு தற்கொலை எண்ணம் தூண்டப்படுதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அதுக்குக் காரணமும் அந்த மருந்தோட எசென்ஷியல் இன்ஃபர்மேஷன் சரியாக இல்லாம, தொழில்நுட்ப வார்த்தைகளைப் பயன்படுத்தினதுதான்.

இங்கே மருத்துவ கவனக் குறைபாட்டுக்கு அடிநாதமா பணம் சம்பாதிக்கறதுதான் இருக்கு. மனிதாபிமானம் இல்லை. மக்களிடம் அறியாமை அதிகமா இருக்கு. அதனாலேயே தேவையில்லாம மருந்து எழுதிக் கொடுக்கறது, ஏமாத்தறது எல்லாம் நடக்குது. தமிழ்நாட்டில் ஒரு சிறுநகரத்துல ஒரு கர்ப்பவதி ஸ்கேன் சென்டருக்கு போறாங்க.

 6 மாச கருவை வயிற்றில் சுமக்கிறாங்க. ஸ்கேன் ரிப்போர்ட் குழந்தை நார்மல்னு சொல்லுது. பிறக்கும்போதோ ஊனமா இருக்குது. அந்தப் பெண்மணி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்துல கேஸ் போடுறங்க. நீதிமன்றம் ஐந்தரை லட்ச ரூபாய் இழப்பீடு குடுக்க ணும்னு தீர்ப்பு குடுக்குது. ஆனா, மருத்துவமனை நிர்வாகம் மேல் முறையீடுக்குப் போறாங்க.

உயர் நீதிமன்றத்துல ‘இது மருத்துவ கவனக் குறைபாடு இல்லை. மருத்துவ சோதனைல 100 சதவிகிதம் சரியா காட்டணும்னு அவசியம் இல்லை’ன்னு வழக்கை தள்ளுபடி செஞ்சிட்டாங்க. இந்த மாதிரி பிரச்னைகள் இங்கே விவாதிக்கப்படுறதே இல்லை. வடநாட்டில் ஒரு டாக்டர் குடும்பத்துக்கே இப்படி நடந்தது. அவர் மனைவிக்கு அளவுக்கு அதிகமான டோஸ் மருந்து கொடுக்கப்படுது. அவங்க பாதிக்கப்படுறாங்க. அந்த டாக்டர் வழக்கு தொடுத்தார். இன்டர்நேஷனல் டாக்டர்ஸோட ஒப்பீனியனையும் கேட்டு வாங்கினார். வழக்கில் ஜெயிச்சு கோடிக்கணக்குல இழப்பீடு வாங்கினார். இது தொடர்பா அவர் ஒரு புத்தகமே எழுதியிருக்கார்.

இந்தியாவுல சட்டத்தில் ஒரு நோயாளிக்கு என்ன அதிகாரம், டாக்டருக்கு என்ன அதிகாரம்னு வரையறுக்கலை. சிகிச்சைன்னு வரும்போது டாக்டரும் நோயாளியும் சேர்ந்துதான் அதை செய்யணும். என்ன சிகிச்சை அளிக்கப்படுதுன்னு டாக்டர் நோயாளிக்கு எடுத்துச் சொல்லணும். இங்கே எந்த நோயாளியும் டாக்டர்கிட்ட விளக்கமே கேட்க முடியாது. கேட்டா, ‘நீ டாக்டரா நான் டாக்டரா’ன்னு கேட்டுடுவாங்க. எனக்கே இந்த மாதிரி சம்பவங்கள் நடந்திருக்கு.

என் அம்மாவுக்கு கேட்டராக்ட் ஆபரேஷன் செய்யறதுக்காக ஒரு பெரிய மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனேன். ஒரு ஃபார்மை நீட்டி கையெழுத்துப் போடச் சொன்னாங்க. அதுல ‘எதிர்பாராதவிதமாக நோயாளிக்கு பிரச்னை ஏதாவது ஏற்பட்டால், மருத்துவரோ மருத்துவ நிர்வாகமோ பொறுப்பில்லை’ன்னு எழுதியிருக்கு. நான் ஒரு டாக்டராக அவங்ககிட்டே, ‘இதுல ஒரே ஒரு வரியை சேத்துடுங்க. அதாவது, ‘மருத்துவ கவனக் குறைபாடு இல்லாத பட்சத்தில்...’ என்ற வரியை சேத்துடுங்க’ன்னேன்.

அதுக்குக் காரணம், சரியான அளவுக்கு மயக்க மருந்து கொடுத்தா பிரச்னை இல்லை. அப்படி இருந்து என் அம்மாவுக்கு ஏதாவது பிரச்னைன்னா கேட்கவே மாட்டேன். ஆனா, அவங்க தரப்புலயே தப்பு இருந்தா? இதை எடுத்துச் சொன்னேன். அவங்க அப்படி சேர்க்க முடியாதுன்னாங்க. நான் என் புகாரை கம்ப்ளைன்ட் பாக்ஸுல எழுதிப் போட்டேன். 2 மணி நேரத்துல என்னை கூப்பிட்டாங்க. இனிமே ஃபார்ம்ல அப்படி ஒரு வரியை சேர்க்கறோம்னு ஒத்துக்கிட்டாங்க. இந்த மாதிரி பல மருத்துவமனைகள்ல நடக்குது. 

‘இன்ஃபார்ம்டு கன்சன்ட்’னு சொல்லு வாங்க. நோயாளிக்கு மருந்து கொடுக்கும்போது அதனோட சாதக, பாதகங்களை தெரியப்படுத்தணும். போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்போது கூட அது நடக்கறதில்லை.

 வாய்வழியா போலியோ மருந்து கொடுக்கும் போது குழந்தைக்கு புற்றுநோய் வர வாய்ப்பிருக்கு. அமெரிக்காவில் ஊசி மூலமாதான் போலியோ மருந்து போடப்படுது. ‘இந்தியாவில் 50 சதவிகித சிசேரியன்கள் தேவையில்லை’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

எந்த மருத்துவமனையிலயாவது பிரசவம் பத்தின விளக்கம் ஒட்டப்பட்டிருக்கா? எப்போல்லாம் சிசேரியன் பண்ண வேண்டியிருக்கும்னு நோட்டீஸ் போர்டுல எழுதி ஒட்டலாம்ல? ஜுரம்னு மருத்துவமனைக்குப் போன ஒரு குழந்தை இறந்து போகுது.

காரணம், மலேரியா, டைபாய்டு ரெண்டுக்கும் குடுக்கற மாத்திரைகளை குடுத்திருக்காங்க. இதை சம்பந்தப்பட்டவங்களுக்கு தெரியப்படுத்தக் கூட இல்லை. இந்த மாதிரி ஏகப்பட்ட தடைகள் இருக்கு. ஒளிவுமறைவற்ற தன்மை இங்கே இல்லை. இந்த விஷயத்துல மக்களின்
பங்களிப்பும் இருக்கணும்.

இன்னொரு சந்தர்ப்பத்துல என் அம்மாவுக்கு வலிப்பு வந்துடுச்சு. சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்குப் போனேன். அங்கே இருந்த டியூட்டி டாக்டர் உடனே என் அம்மாவை ஐ.சி.யூ.ல சேர்க்கணும்னார். ‘அட்மிஷன் போடுறதுக்கு தயாரா இருக்கேன். ஆனா, எதுக்கு ஐ.சி.யூ.ல சேர்க்கணும்? இப்போதைக்கு ஏன் அவசரம்’னு கேட்டேன். ஏன்னா, ‘வைட்டல் பேராமீட்டர்’னு சொல்லப்படுற பல்ஸ் (இதயத் துடிப்பு), பி.பி., மூச்சு வாங்குதான்னு எல்லா டெஸ்டையும் என் அம்மாவுக்கு செஞ்சிருந்தேன்.

எல்லாமே சரியா இருந்தது. ‘ஐ.சி.யூ.ல சேர்க்கறதானா சேருங்க. இல்லைன்னா, வேற டாக்டர்கிட்ட போங்க’ன்னு சொல்லிட்டார் அந்த டியூட்டி டாக்டர். அதோட, ‘இந்த அம்மாவுக்கு ஏதாவது ஆனா அதுக்கு நான்தான் பொறுப்பு’ன்னு எழுதி கையெழுத்து வேற கேட்கறாங்க. அப்போ அந்தப் பக்கமா எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் வந்தார்.

விசாரிச்சிட்டு, டியூட்டி டாக்டரை வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார். பிறகு, ஐ.சி.யூ. வேண்டாம்னு சொல்லி அட்மிஷன் மட்டும் போட்டாங்க. ஒரு டாக்டரான எனக்கே இந்த மாதிரி பிரச்னைன்னா சாதாரண ஜனங்களுக்கு எவ்வளவு இருக்கும்? எனக்கு இரட்டைக் குழந்தைகள். பிறந்தப்போ ஒரு குழந்தைக்கு தோள்பட்டை இறங்கிடுச்சு. டாக்டர், என்னை கேட்காம எக்ஸ்ரே எடுத்துட்டார். எக்ஸ்ரே எடுத்தா பின்னாளில் புற்றுநோய் வரும் வாய்ப்பு இருக்கு.

அவசர காலம், ஒருவர் சாகக் கிடக்கும் நிலையில்தான் அவரைக் கேட்காமல் எக்ஸ்ரே எடுக்கலாம்னு சட்டமே இருக்கு. அப்போ கூட சம்பந்தப்பட்ட பெற்றோரையோ, காப்பாளரையோ கேட்காம எடுக்கக்கூடாது. நான் அந்த டாக்டர்கிட்ட சண்டை போட்டேன். ‘முதல்ல எப்படி ஷோல்டர் இறங்கியிருக்குன்னு கண்டுபிடிச்சீங்க’ன்னு கேட்டேன். ‘கிள்ளிப் பார்த்தேன். அதுல கண்டுபிடிச்சேன்’னார். ‘கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் ஏன் எடுத்தீங்க’ன்னேன்.

இன்னொரு பெரிய மருத்துவமனையில குழந்தைக்கு தடுப்பூசி போடணும்னாங்க. நான் போட மாட்டேன்னேன். உடனே, ‘பெண் குழந்தையை தடுப்பூசி போடாம கொல்லப் பார்க்கறான்’னுட்டாங்க. நம்ம தடுப்பூசியில ‘Thiomersal’னு ஒரு பாதரசம் இருக்கு. அதனால மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்னு அமெரிக்கால 2004லயே தடை பண்ணிட்டாங்க. இந்த மாதிரி கேள்வி கேட்கறதாலேயே மற்ற மருத்துவர்கள் எல்லாம் என்னை எதிரியா பார்க்கறாங்க.

அவங்க ஏன் உண்மையை மறைக்கப் பார்க்கணும்? அவங்களோட குழந்தைக்கு இப்படி நடந்தா விட்டுடுவாங்களா?  ஒரு பெண் பத்திரிகையாளர் பிரசவத்துக்காக ஒரு மருத்துவமனைல சேர்றாங்க. நார்மல் டெலிவரிதான் ஆகும்னு சொல்லிகிட்டே இருந்த டாக்டர்ஸ் திடீர்னு சிசேரியன் பண்ணணுங்கறாங்க.

உடனே அந்தப் பெண் எனக்கு போன் பண்றாங்க. நான் அந்த டாக்டர்கள்கிட்ட போன்லயே காரணம் கேட்டேன். ‘Fetal Distress’... பனிக்குடத்துல தண்ணி அளவு குறைஞ்சு போயிடுச்சுன்னாங்க. நான் அவங்ககிட்ட அந்தப் பெண்ணோட பழைய பரிசோதனை ரிப்போர்ட், புதிய ரிப்போர்ட் ரெண்டையும் காமிக்கச் சொன்னேன். காமிக்கலை. அப்புறம் சண்டை போட்டு, எப்படியோ அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவமே நடந்தது.

முதல்ல நான் ஒரு மனுஷன். அப்புறம்தான் டாக்டர். அதனாலதான் மருத்துவத்தில் பிரச்னைகள், இந்த மாதிரி கண்ணுக்குத் தெரிஞ்சு குறைபாடுகள் நடக்கும் போது எதிர்த்துக் கேள்வி கேட்கிறேன். மருத்துவ கவனக் குறைபாடு விஷயத்தில் முதல்ல மக்கள் மத்தியில விழிப்புணர்வு வரணும். அப்படி வந்தாதான் இந்தப் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமா சரியாகும்’’ என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

மருத்துவ கவனக் குறைவு விஷயத்தில் சட்டம் என்ன சொல்கிறது? விளக்குகிறார் வழக்கறிஞர் அலமேலு மங்கை... ‘‘உயிர் காக்கும் பணியைச் செய்வதால் மருத்துவர்கள் கடவுளுக்குச் சமமாக மதிக்கப்படுகிறார்கள்.

அதனால்தான் தங்கள் உடலை நம்பி அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள் நோயாளிகள். மருத்துவர்கள், நோயின் தன்மையை சரியாக ஆராய்ந்து சிகிச்சை தர வேண்டியது அவசியம். மருத்துவரின் கவனக் குறைவு ஒரு நோயாளியின் உயிரைப் போக்குவதாகவும், உடலுறுப்புகளை ஊனமுற்றதாக முடக்குவதாகவும் ஆக்கிவிடக் கூடாது.

மருத்துவர்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டியதின் அவசியத்தை உணர்த்தவும், அந்தத் தவறை மற்றவர்கள் செய்து விடாமல் தவிர்க்கவும், பாதிக்கப்பட்டவருக்கு ஈடு தரவும், தவறான சிகிச்சை தந்த மருத்துவருக்கு தண்டனை தரவும் ‘இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304கியிலும் வழிவகை இருக்கிறது.

இந்தச் சட்டத்தின்படி, எச்சரிக்கையற்ற, கவனக் குறைபாடான சிகிச்சை காரணமாக ஒருவருக்கு மரணம் நேர்ந்தால், அந்தக் குற்றத்துக்குக் காரணமாக இருந்தவருக்கு அபராதமோ அல்லது 2 ஆண்டு சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ கிடைக்கலாம்.

அதே போல மருத்துவர் மீது தவறாக புகார் கொடுத்துஅல்லது புகார் கொடுத்து அது சட்டரீதியாக நிரூபிக்கப்படாவிட்டால், குற்றம் சுமத்தியவர் அல்லது குற்றம் சுமத்திய நிறுவனத்துக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ, இரண்டும் சேர்த்தோ கிடைக்கலாம் என்பதற்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 211 துணை புரிகிறது.  

இந்திய தண்டனைச் சட்டம் இப்படிச் சொன்னாலும், மருத்துவ கவனக் குறைபாட்டின் முக்கியத்துவத்தைக் கருதி, பாதிக்கப்பட்டவருக்கு விரைவாகவும் செலவு இல்லாமலும் நிவாரணம் அளிக்க 1986ம் ஆண்டு ‘நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றப்பட்டது. மாவட்ட, மாநில, தேசிய அளவில் நுகர்வோர் குறை தீர்க்கும் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட சில காலம் வரை, மருத்துவம் தொடர்பான வழக்குகள் இந்த மன்றங்களின் அதிகார எல்லைக்குள் அடங்காது என்ற கருத்து நிலவியது. காலப்போக்கில் மருத்துவத் துறையும் இதில் அடங்கும் என்பது போல பல குறிப்பிடத்தக்க தீர்ப்பு கள் வெளியானபடி இருக்கின்றன. இந்த விழிப்புணர்வு காரணமாக, மருத்துவத் துறையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதையும் மறுக்க முடியாது!’’

ஒரு டாக்டரான எனக்கே இந்த மாதிரி பிரச்னைன்னா சாதாரண ஜனங்களுக்கு எவ்வளவு இருக்கும்?

மருத்துவ கவனக் குறைபாட்டின் முக்கியத்துவத்தைக் கருதி, பாதிக்கப்பட்டவருக்கு விரைவாகவும் செலவு இல்லாமலும் நிவாரணம் அளிக்க 1986ம் ஆண்டு ‘நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றப்பட்டது...

- மேகலா