10 லட்சம் பேரை தின்ற குட்கா!



இனி வேண்டாம் இது!

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி, இந்தியாவின் பல மாநிலங்களில் மெல்லும் புகையிலைப் பொருளான குட்கா தடை செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாம், பீஹார், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, ஒடிசா மற்றும் தலைநகரான டெல்லியிலும் குட்கா தடை செய்யப்பட்டுள்ளது.

ஆச்சரியமாக இந்த தடை உத்தரவு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்து நடத்திய  கருத்துக்கணிப்பில், 92 சதவிகிதம் மக்கள், ‘குட்காவை தடை செய்தது சரியே’ என்று ஆதரவு அளித்துள்ளனர்.

‘குட்காவை தடை செய்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உடல்நலம் பாதுகாக்கப்பட்டுள்ளது’ எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். 80 சதவிகிதம் மக்கள் குட்கா தடை செய்யப்பட்டதால் வேறு வழியின்றி, புகையிலைப் பொருட்கள் மெல்லுவதை நிறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

‘‘புகையிலைப் பொருட்களின் மீதான தடையை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தினால், இது மக்களிடையே நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது பேக்கிங் செய்யப்பட்டு கடைகளில் கிடைக்கும் குட்காவுக்கு மட்டுமே இந்தத் தடை வந்துள்ளது. குட்கா போன்ற மெல்லும் புகையிலைப் பொருட்களின் உற்பத்தியையும் விநியோகத்தையும் தடை செய்தால் இன்னும் பல நல்ல மாற்றங்களை மக்களிடம் எதிர்பார்க்கலாம்’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதியான நடா மேனப்டி.

புகையிலையுடன் காரமான மசாலா பொருட்கள் மற்றும் சிறிதளவு இனிப்புப் பொருட்கள் சேர்த்து குட்கா தயாரிக்கப்படுகிறது. இதன் போதைக்கு பலர் அடிமையாகி இப்பழக்கத்தை கைவிட முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் இந்தியாவில் 26 சதவிகித மக்கள் பலவிதமான புற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள் என்றும், கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்தியதால் இறந்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க குட்காவுக்கு குட்பை சொல்லுங்க!