கைகளின் வலி…



எலும்பே நலம்தானா?!

உடலில் வேறு எந்த இடத்தில் வலித்தாலும் பொறுத்துக் கொள்ளலாம். கைகளில் வலி ஏற்பட்டால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் அவதிப்படுவோம். உடல அளவில் மட்டுமில்லாமல் மன தளவிலும் பெரிய அசௌகர்யத்தை ஏற்படுத்தும் வலி அது. கைகளில் ஏற்படும் வலிக்கான காரணத்தையும், அதற்கான தீர்வுகள் மற்றும் சிகிச்சைகளையும் பற்றி பார்க்கலாம். கை வலிகளில் முதன்மையானது De Quervain’s Tendinitis. இது கட்டைவிரலை ஒட்டிய மணிக்கட்டுப் பகுதியில் வலியை ஏற்படுத்தும். உள்ளங்கையை மூடி மடக்குவதிலும், பொருட்களை பிடித்து தூக்குவதிலும், மணிக்கட்டு பகுதியை திருப்புவதிலும் சிரமம் இருக்கும்.

ஒரே வேலையை நீண்ட நேரம் செய்வதாலும், கையின் ஒரு பகுதியை அதிக நேரம் பயன்படுத்துவதாலும் இந்த வலி வரலாம். மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படுகிற எலும்பு முறிவும் இதற்கு காரணமாகலாம். புதிதாக குழந்தை பெற்ற அம்மாக்கள் குழந்தையை ஒரே பொசிஷனில் நீண்ட நேரம் தூக்கி வைத்திருப்பதாலும் இந்த வலியை உணர்வார்கள். வலி ஏற்பட்ட பகுதிக்கு ஓய்வு கொடுப்பது முதல் சிகிச்சை. வலியின் தீவிரத்தைப் பார்த்து வீக்கத்தையும், வலியையும் குறைக்கும் Antiflammatory மருந்துகள் மற்றும் கார்ட்டிசோன் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

Carpal Tunnel Syndrome…

கைகளின் நரம்புப் பகுதியில் ஏற்படுகிற கோளாறுதான் இந்த வலிக்கான காரணம். இதில் உள்ளங்கை மற்றும் விரல்கள், மணிக்கட்டு, அதற்கு மேல் பகுதி போன்ற இடங்களில் வலி இருக்கும். பகலைவிட இரவு நேரத்தில் இந்த வலி அதிகரிக்கும். வலி மட்டுமில்லாமல் பலவீனம், கூச்சம், மரத்துப் போவது போன்ற உணர்வுகளும் இருக்கும். கட்டைவிரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலில் இந்த உணர்வுகளை உணர்வார்கள்.

எலும்புகளும், இணைப்புத் திசுக்களும் சேர்ந்த பகுதியான கார்ப்பல் டன்னல் என்பது கைகளின் அடிப்பகுதியில் இருக்கும். இதன் வழியாகவே மீடியன் என்கிற நரம்பு செல்லும். அப்படி செல்கிற நரம்பு அழுத்தப்பட்டு, வீங்கி, அழற்சிக்குள்ளாகும்போது வலி ஏற்படும். முதல் பிரச்னைக்கு சொன்னது போலவே இதற்கும் ஓய்வு, வலி நிவாரணிகள், பிசியோதெரபி போன்றவை பரிந்துரைக்கப்படும். வலி குறையாவிட்டாலோ, 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்தாலோ அறுவை சிகிச்சை தேவையாக இருக்கும்.

ஃபிராக்ஸர் எனப்படும் எலும்பு முறிவு

விபத்து, அடிபடுதல் என ஏதோ காரணங்களால் எலும்பு முறிவு ஏற்படும்போது உண்டாகிற வலி தாங்க முடியாததாக இருக்கும். வலியுடன் வீக்கம், அந்த இடம் விரைத்து போவது, அசைக்க  முடியாத நிலை போன்றவையும் ஏற்படலாம். எலும்பு முறிவில் பல வகைகள் உள்ளன. எந்த வித பெரிய பாதிப்பும் இல்லாத முறிவு, முறிவின் காரணமாக எலும்பு நகர்வது, மேலும் அதனால் சிகிச்சை கடுமையாவது, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எலும்புகள் முறிவது, முறிந்த எலும்பு சருமத்தின் வழியே வெளியே வருவது என இதில் பல நிலைகள் உள்ளன. ஃபிராக்சருக்கான சிகிச்சை என்பது இதில் எந்த நிலை என்பதை பொருத்தது.

ஆர்த்தரைட்டிஸ்

கை வலிக்கான மிக முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று. குருத்தெலும்பில் ஏற்படுகிற தளர்வுதான் இதற்கு முக்கியமான காரணம். அதன் தொடர்ச்சியாக வலி, வீக்கம் மற்றும் பலவீனம் எல்லாம் ஏற்படும். கட்டைவிரலின் அடிப் பகுதியில், ஒரு விரலிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விரலிலோ அவற்றை இணைக்கும் மைய ப்பகுதியில், விரல் நுனிகளில் வலி இருக்கும்.

ஆர்த்தரைட்டிஸ் பிரச்னையில் மிகவும் பரவலானது ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ். இதில் குருத்தெலும்பானது மெள்ள மெள்ள பலவீனமாகும். வயதாவதன் விளைவாக இப்படி ஏற்படும். சிலருக்கு ஃபிராக்சருக்கு பிறகும் ஏற்படலாம். வலியுடன், வீக்கமும், விரைப்பும் கூட இருக்கும். அன்றாட வேலைகளை செய்வதே சிரமமாகும். வலியின் தீவிரத்தைப் பொறுத்து இதிலும் வலி நிவாரணிகள் தொடங்கி, அறுவை சிகிச்சை வரை பரிந்துரைக்கப்படும்.

Trigger Finger

இதில் விரல்கள் வளையும். குறிப்பாக கட்டைவிரலில் இப்படி ஏற்படும். வளைந்த விரலை நிமிர்த்த முயற்சித்தால் வலி அதிகமாகும். ருமட்டாயிட் ஆர்த்தரைட்டிஸ் கவுட் மற்றும் நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை அதிகம் வருகிறது. 40 முதல் 60 வயதினருக்கு இந்த பிரச்னை அதிகம் பாதிக்கிறது. பெண்களுக்கு ஆண்களைவிட அதிகம் பாதிக்கிறது. வலி நிவாரணிகளும், ஓய்வுமே முதல்கட்ட சிசிச்சைகளாக பரிந்துரைக்கப்படும். தேவைப்பட்டால் ஊசி மற்றும் அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம்.

(விசாரிப்போம்!)

எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி