வாலிப வயோதிக அன்பர்களே...கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...

பாலியல் குறித்து நம் மனதுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பயமும் தயக்கமும் மருத்துவப் போலிகளின் வியாபார மந்திரமாக இருக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் ரகசியமாகவே இதற்கான வழி தேடுகின்றனர். பாலியல் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு பலர் அறியச் செல்வது கூட நம் மக்களுக்கு பதற்றம் அளிக்கிறது.

பாலியல் மருத்துவப் பிரச்சாரங்கள் ஊடகங்களின் வழியாக விளம்பரங்கள், இலவச ஆலோசனையாகவும் வழங்கப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றியெல்லாம் யோசிக்காமல் அவர்கள் சொல்வதை நம்பி, விளம்பரங்களில் வரும் கிரீம் மற்றும் மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதில் ஆயிரங்களில் பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்கின்றனர்.

இவை பெரும்பாலும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகளாகவே குறிப்பிடப்படுகின்றன. பாலியல் குறைபாடுகளுக்கு நிஜமாகவே இத்தகைய சிகிச்சைகள் இருக்கின்றனவா என்று சித்த மருத்துவரான விக்ரம்குமாரிடம் கேட்டோம்...

‘‘தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்றைய இளைஞர்கள் சிறு வயதிலேயே பாலியல் தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர். திருமணத்துக்கு முன்பான பாலுறவுகள், ஓரினச்சேர்க்கை, சுய இன்பம், போர்னோ படங்கள் பார்ப்பது, குழந்தைகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவது என இது பலவிதமாகத் தொடர்கிறது. சரியான வழிகாட்டுதல் இல்லாத இளைஞர்கள் இதுபோன்ற விஷயங்களில் குற்றச்
செயல்கள் வரை செல்கின்றனர்.

குற்றங்கள் நடக்கும்போது மட்டுமே இது பற்றி விவாதிக்கிற நாம் மற்ற நேரங்களில் அமைதியாக இருந்து விடுகிறோம். பாலியல் பிரச்னைகள் தொடர்பாக நாம் உரத்துப் பேச வேண்டிய தேவை உள்ளது. தொடர்ந்து பேசி பாலியல் தொடர்பான பயம், வெட்கம் இரண்டையும் உடைப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

இதுபோன்ற போலி விளம்பரங்கள் பற்றியும், செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறும் மருத்துவர்களிடம் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் காமம் பற்றிய தவறான புரிதலை உண்டாக்கும் நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பப்படுகிறது.

காமத்தை விற்பனைப் பொருளாக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு மனதளவில் இருக்கும் பலவீனத்தைப் புரிந்துகொண்டு அதைப் பணமாக மாற்றும் கும்பல்கள் அவை. இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்த்தால் இளைஞர்களுக்கு காமம் பற்றிய பயம் தொற்றிக் கொள்ளும்.

தொலைக்காட்சியில் பேசும் போலி மருத்துவர்களின் உரையாடலை தெய்வ வாக்காக நினைத்துக் கொண்டு அவர்களைத் தேடி ஓடுகின்றனர். தனது குமுறலைக் கொட்டுவதோடு பணத்தையும் இழக்கும் இளைஞர்கள் அதிகம். பாலியல் விஷயங்கள் பற்றிய தவறான பயங்களை அவர்களது மூளையில் திணிக்கின்றனர்.

இவர்களின் விளம்பர உக்தியும் மிகத் தீவிரமானது. பேருந்து நிலையம், தெருவோரங்கள், செய்தித்தாள்களில் வரி விளம்பரங்களிலும் இவர்கள் விளம்பரம் கொடுக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் ஒவ்வொரு ஊரிலும் இதற்கான முகாம்கள் நடப்பதாக விளம்பரப்படுத்தி தனிக்கட்டணம் வசூலிக்கின்றனர்.

திருமணத்துக்குப் பின் சிறிய அளவில் பாலியல் குறைபாடுகள் உள்ளவர்களே இவர்களை அதிகம் நம்பிப் போகின்றனர். இவர்கள் தங்களது சிறு குறையை பெரிய பிரச்னையாக பாவித்து மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இப்படி ஆலோசனைகள் சொல்லிப் போலி மருந்துகளை விற்கும் இவர்கள் தனக்குத் தானே செக்ஸ் மருத்துவர்கள் என்று பட்டம் சூட்டிக்கொள்கின்றனர்.

ஆண்மைக் குறைபாடுகள் அத்தனையும் தங்களால் தீர்க்க முடியும் என்று வாக்களித்து இவர்கள் தங்களது பிசினஸை மேம்படுத்திக் கொள்ள அத்தனை வகையான விளம்பரங்களையும் செய்கின்றனர். எனவே, விளம்பரங்களை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

பாலியல் குறைபாடுகளை முதலில் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் சார்ந்த குறைபாடுகளில் 90  சதவீதம் மனம் சார்ந்த தொந்தரவுகளே. மீதமிருக்கும் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. உடல் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் வேறு பிரச்னைகள் கூடப் பாலியல் குறைபாட்டுக்குக் காரணம் ஆகலாம்.

வீரியமின்மை, விந்து விரைவாக வெளியேறுதல், விந்தணுக்களின் தரமும் எண்ணிக்கையும் குறைதல் ஆகியவற்றை முறையான மருத்துவர்களிடம் விவாதிப்பது முக்கியம். பயிற்சி, அனுபவம் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனை மூலம் பாலியல் குறைபாடுகளை சரி செய்துவிடலாம்.

பாலியல் பிரச்னைக்கு மன ரீதியான காரணங்கள் இல்லாமல் உடல் ரீதியான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை ஆய்ந்து அறிவது மருத்துவரின் கடமை. காரணம் தெரியாமல் குத்துமதிப்பாக சில மருந்துகளை சாப்பிடச் சொல்லும் போலி மருத்துவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது.

பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படைத் தன்மையுடன் பேசமுடியாத சூழலே போலிகள் உருவாவதற்கு முக்கியக் காரணமாகவும் உள்ளது.

காதல், காமம் இரண்டையும் ‘அடச்சீ’ என்று பார்க்கும் மனப்பான்மையை தகர்த்தெரியும் சூழலை உருவாக்க வேண்டும். செக்ஸ் என்ற சொல்லே இங்கு கெட்ட வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது. செக்ஸ் என்பதும் இயல்பான செயல்பாடே என்பதைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது.

குழந்தையின்றித் தவிக்கும் பெண்களை இந்த சமுதாயம் பலவிதமாகவும் வசை பாடுகிறது. இந்தச் சூழ்நிலையை வைத்தே வணிகம் செய்து பணம் சம்பாதிக்கும் ஆசாமிகள் இங்கு அதிகம் உள்ளனர். குழந்தைக்காக ஏங்கும் கணவனின் கடினமான மனநிலையும், மனைவியின் மன அழுத்தத்தையும் பணமாக மாற்றும் வித்தையை போலி மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பாலியல் கல்வி என்பது இன்றின் அவசியத் தேவையாக உள்ளது. பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வில்லாத காரணத்தால் வடக்கில் நிர்பயா, தெற்கில் ஹாசினி போன்ற கொடூரங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பாலியல் மருத்துவத்தில் போலிகளைத் தேடி அலையும் கூட்டம் அதிகரிப்பதும் நடக்கிறது.

பாலியல் குறைபாடுகளுக்கு நிச்சயமாக இயற்கை மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உண்டு. ஆனால், சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பதிவு பெற்ற அல்லது பாரம்பரிய முறைப்படி நெடுநாளாக மருத்துவம் பார்த்து வரும் தகுதி வாய்ந்த மருத்துவர்களைத் தேர்வு செய்வது அவசியம்.

மாதம் ஒரு முறை லாட்ஜிலோ, வாரம் ஒரு முறை சமுதாயக் கூடத்திலோ ‘பாலியல் தொந்தரவுகளுக்கு மருத்துவம் பார்க்கிறேன்’ என மிகப்பெரிய அளவில் விளம்பரம் கொடுப்பவர்கள் உண்மையான மருத்துவர்கள்தானா என்பதை ஆராய்வது முக்கியம்.

அதிக பணம் செலவழித்து விளம்பரம் தேடும் போலி மருத்துவர்களை எந்தக் காரணம் கொண்டும் நம்ப வேண்டாம், விளம்பரத்துக்காக செலவழித்த பணத்தை உங்களிடம்தான் வசூலிக்கப் போகிறார்கள்.

ஐந்து ரூபாய் மதிப்புள்ள மருந்தை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் வித்தகர்கள் இங்கு அதிகம். பாலியல் சார்ந்த குறைபாடுகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நிவர்த்தி செய்யக் கூடிய கொடிய வியாதியல்ல. செலவில்லாமல் செய்யக் கூடிய மனமாற்றம் மட்டுமே. பாலியல் பற்றிய சந்தேகங்களை வெளிப்படையாக விவாதியுங்கள்.

பள்ளிப் பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும் பாலியல் தொடர்பான சந்தேகங்களை பேசிப் புரிந்து கொள்ள சரியான மருத்துவரிடம் ஆலோசனை பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். திருமண வாழ்வில் கணவன் மனைவி இடையில் அன்புப் பரிமாற்றத்தில் மனத்தடைகள் இன்றி இருங்கள்.

ஒருவரது குறையை மற்றவர் பெரிது படுத்தத் தேவையில்லை. பாலியல் தொடர்பான சிறு பிரச்னைகளுக்கு உங்கள் குடும்ப மருத்துவரிடம் விவாதிக்கலாம். தேவைப்பட்டால் அதற்கான சிறப்பு மருத்துவரை அணுகலாம். பாரம்பரிய உணவு, உடலுழைப்பு, மனமகிழ்ச்சியும் ஆரோக்கியமான தாம்பத்யத்துக்கு வழிவகுக்கும்’’ என்கிறார் விக்ரம்குமார்.

செக்ஸ் குறைபாடுகளைக் குறிவைத்து நடக்கும் விளம்பர மோசடிகளைக் கட்டுப்படுத்த சட்டத்தில் இடமில்லையா என்ற நம் கேள்விக்கு பதிலளிக்கிறார் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான வழக்கறிஞர் அசோகன்.

‘‘உலகிலேயே அதிக சட்டங்கள் இயற்றப்பட்ட நாடு இந்தியா. குற்றங்கள் பெருகும்போது அதைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. ஏமாற்றுவோரின் எண்ணிக்கையும் காலம் தோறும் அதிகரித்து வருகிறது.

பாலியல் இயலாமை, பாலியல் இன்பத்துக்கான திறனை மேம்படுத்த அல்லது பராமரித்தல் தொடர்பாக பலவிதமான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் சர்வ சாதாரணமாக விளம்பரம் செய்யப்படுகிறது. இதுபோன்ற போலி விளம்பரங்களைப் பார்த்து மக்கள் அதிகப்படியான கட்டணத்தைச் செலவழித்து ஏமாற்றம் அடைகின்றனர்.

இதுபோன்ற விளம்பரங்களைத் தடுப்பதற்காக 1954-ம் ஆண்டு மருந்துகள் மற்றும் மாயாஜால சிகிச்சைகள் (ஆட்சேபணைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் 54 வகையான நோய்கள் குறித்து சிகிச்சை அளிப்பதற்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அப்பட்டியலில் 45-ம் இலக்கமாக பாலியல் இயலாமை குறித்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு விளம்பரங்களில் பாலியல் இயலாமையைப் போக்குவதாகக் கூறிக் கொண்டு ‘வாலிப வயோதிக அன்பர்களே...’ போன்ற விளம்பரங்கள் மூலம் இயற்கையில் ஏற்படும் சாதாரண விஷயங்களை பெரிதுபடுத்தி தவறான விளம்பரங்கள் மூலம் பணம் பறிக்கும் செயலில் ஒரு சில மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சட்டத்தின்படி தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கும் பிரிவும் உள்ளது. இரண்டாவது முறை தவறு செய்யும் பட்சத்தில் அத்தண்டனை ஓராண்டு வரை நீட்டித்தும் அபராதம் விதிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து இதுபோன்ற தவறான விளம்பரங்கள் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு
வருகிறது.

இதுபோன்ற குற்றச் செயல்களை தடுக்கவும், அதனால் பாதிக்கப்பட்டோர் நிவாரணம் பெறுவதற்காகவும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 1986-ல் குறிப்பாக தடுக்கப்பட்ட மற்றும் நேர்மையற்ற வணிக நடைமுறைகள் குறித்த பிரிவுகளில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

நேர்மையற்ற வணிக நடைமுறை என்பது ஒரு பொருளின் அல்லது சேவையின் விற்பனை, உபயோகப்படுத்துதல், விநியோகம் இவற்றை அதிகப்படுத்திக் கொள்வதற்காக எந்த விதமான நியாயமற்ற ஏமாற்றுத்தனமான வழிகளைக் கடைபிடிப்பதாகும். அதன்படி ஒரு பொருள் அல்லது சேவைக்கு இல்லாத தரத்தை இருப்பதாகப் போலியாக விளம்பரப்படுத்துவது அதன்படி இன்றைக்கு பல்வேறு விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

எங்கள் சிகிச்சையில் உடல் பருமன் குறையும், எங்கள் சிகிச்சையில் உடல் உயரம் அதிகரிக்கும், எங்கள் சிகிச்சையில் பாலியல் இன்பத்துக்கான திறன் மேம்படும், எங்கள் சிகிச்சையில் காந்த சிகிச்சை, காந்த இடுப்புப்பட்டை மூலம் பாலியல் உணர்வு அதிகரிக்கும், எங்கள் சிகிச்சையில் மலட்டுத்தன்மை போக்கப்படும் என்பது போன்ற விளம்பரங்கள் மூலம் பொதுமக்கள் பெரிதும் ஏமாற்றப்படுகின்றனர்.

இதனைத் தடுக்க மருந்துகள் மற்றும் மாயாஜால சிகிச்சைகள் சட்டம் 1954 மற்றும் இந்திய தண்டனைச்சட்டம், ஆபத்தான மருந்துகள் சட்டம் 1930, மருந்துகள் ஒப்பனைப் பொருட்கள் சட்டம் 1940 ஆகியவற்றின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் அதுபோன்ற தவறான விளம்பரங்களைக் கண்டு பாதிக்கப்பட்ட நுகர்வோர், நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு 2(1)r நேர்மையற்ற வணிக நடைமுறை பிரிவின் கீழ் மனு செய்து உரிய நிவாரணம் பெறலாம்’’ என்கிறார் வழக்கறிஞர் அசோகன்.

( Keep in touch..!)

எழுத்து வடிவம் : கே.கீதா