Centre Spread Special



ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியமா?!

எடை குறைப்பு ஆசை எல்லோரையும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. அழகுணர்ச்சி காரணமாகவும், ஆரோக்கியம் காரணமாகவும் ஒல்லியாக எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். கடுமையாக முயற்சிக்கிறார்கள். என்னதான் உணவைக் குறைத்து, எத்தனையோ உடற்பயிற்சிகள் செய்தாலும் பலருக்கும் எடை குறைப்பு முயற்சி என்பது தோல்வியிலேயே முடிகிறது. அது இன்னும் கூடுதல் மன அழுத்தத்தையும் தந்துவிடுகிறது.
உண்மையில் ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியமா... மருத்துவம் என்ன சொல்கிறது? உடல் எடை பராமரிப்பு மற்றும் உணவியல் நிபுணர் திவ்யாவிடம் கேட்டோம்...

‘‘ஒருவர் ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இருப்பது என்பது மரபுரீதியாக தீர்மானிக்கப்படும் ஒரு காரணி. இந்த உடல் எடை அவரின் உயரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தோ அல்லது அதிகமாகவோ இருக்கும்போதுதான் அவர் ஆரோக்கியமற்றவராகவும், மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவராகவும் கருதப்படுவார்.

BMI என்று சொல்லப்படும் இந்த கணக்கை எளிதாகவே ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள முடியும். ஒருவர் உயரத்தில் 100 செ.மீட்டரை கழித்தால், மீதம் இருக்கும் அளவில் அவரது எடை இருக்க வேண்டும். அதாவது 165 செ.மீ உயரம் என்றால், அவர் 65 கிலோ இருக்கலாம். இதில் 5 கிலோ வரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

ஆரோக்கியத்தை அளவிடுவதிலும், உடல்பருமனை அளவிடுவதிலும் இந்த பி.எம்.ஐ-தான் முக்கியமானது. மாறாக ஒல்லியாகத் தெரிவது, பருமனாகத் தோற்றம் அளிப்பது மட்டுமே தீர்மானித்துவிடாது. அதேபோல் ஒருவரின் கொழுப்பு மற்றும் தசை சதவீதத்தையும் இதில் கணக்கில் கொள்ள வேண்டும். உடலில் கொழுப்பைவிட தசையின் சதவீதம் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தால் அதுவும் ஆரோக்கியமானதுதான்.

ஒல்லியாக காட்சியளிக்கும் ஒருவர் தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை கொண்டவராக இருந்தால் அவர் நிச்சயம் நோயாளிதான் அல்லது விரைவில் நோயாளியாகும் சாத்தியங்களும் அதிகம். அதேநேரத்தில் பருமனான தோற்றம் கொண்ட ஒருவர் சரியான உணவுப்பழக்கத்தையும், உடற்பயிற்சியையும், நல்ல மரபுரீதியான வரலாற்றையும் கொண்டவராக இருந்தால் அவர் நிச்சயம் ஆரோக்கியமானவர்தான்.
எனவே, எடையைப் பற்றி அதிகமாகக் கவலைப்படாமல் ஆரோக்கியமாக வாழ்வது பற்றி யோசியுங்கள். பருமனும் அழகுதான்... பருமனும் ஆரோக்கியம்தான்!

- க.இளஞ்சேரன்