இனிப்பு... குளிர்ச்சி... ஆரோக்கியம்...



பதநீர்

*பனை மரத்தில் பிஞ்சாக இருக்கும் நுங்கு பகுதியின் ஓரத்தில் லேசாகக் கீறிவிட்டு, அதில் வரும் கள் வடிவதற்கேற்ப கூறாக சீவி அளவான சுண்ணாம்பு தடவிய மண் பானையை மரத்தில் கட்டி பதநீர் இறக்கப்படுகிறது. இந்த பதநீரினை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.

*குடிக்க ஏதுவான மண் பானையில் சுண்ணாம்பு கலந்ததால் பதநீர் ஆல்கஹால் இல்லாததாக இருக்கிறது. சுண்ணாம்பு பதநீரின் நொதித்தல் செயல்பாட்டை கட்டுப்படுத்தும்.

*பதநீர் இனிப்பு சுவையும் குளி்ர்ச்சி தன்மையும் உடையது. ஒவ்வொரு 500 மிலி பதநீரிலும் PH 7.7, 99.4 மி.கி புரதம், 57.68 மி.கி சர்க்கரை, 11 மி.கி இரும்புச்சத்து, 64.80 மி.கி பாஸ்பரஸ், 70.80 மி.கி கால்சியம், 24 மி.கி, அஸ்கார்பிக் அமிலம், 166.60 மி.கி தையாமின் மற்றும் 22 கலோரிகள் ஆகிய ஊட்டச்சத்து இருக்கிறது.

* பதநீர் அருந்துவதால் பற்கள், எலும்புகள் வலுவடைகின்றன. உடல் மிகுந்த குளிர்ச்சியை பெறுகிறது. உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்கிறது.

*பதநீர் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியடைய வைக்கும். கருவுற்ற மற்றும் மகப்பேறு பெண்களுக்கு ஏற்படுகிற மலச்சிக்கலை குணப்படுத்தும்.

* நீர்க்கட்டு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்கும். வயிற்றுப்புண் மற்றும் வயிற்றெரிச்சலைக் குறைக்கும். அம்மை நோய் மற்றும் கண் நோய் வராமல் தடுக்கும். மேக நோய் குணமாகும்.

*தமிழகத்தின் தட்ப வெப்பநிலை மற்றும் மண் வளத்துக்கு ஏற்ப பனை சார்ந்த உணவுகள் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. அதனால் பனை சார்ந்த உணவை பயன்படுத்துவதற்கும், தயாரிப்பதற்கும் அரசு ஊக்குவிக்க வேண்டும்.

- கவிபாரதி