ஹெல்த் காலண்டர்



சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...

மனவிறுக்கப் பெருமை தினம் - ஜூன் 18

ஆட்டிசம் என்பது அவமானகரமான ஒரு நிலையல்ல. மனித சமூகத்துக்கு ஏற்படும் வழக்கமான நோய்களில் அதுவும் ஒன்றுதான். எனவே, ஆட்டிசம் பாதிக்கப்பட்டிருப்பதைப் பெருமையாகவும் நினைக்கலாம் என்று தன்னம்பிக்கை தரும் விதமாக அனுசரிக்கப்படும் தினமே சர்வதேச மனவிறுக்கப் பெருமை தினம்  (Autistic Pride Day).

மனவிறுக்கமானது மனவிறுக்கத் தொகுதிக் குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது. இது குறிப்பாக மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய, சிக்கலான நரம்பு வளர்ச்சிக் கோளாறுகளை உள்ளடக்கி உள்ளது. குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளில் இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுகிறது. சிறுமிகளைவிட சிறுவர்களிடமே இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது.

கூடி வாழ்வதில் சிக்கல், தொடர்பு பிரச்னைகள், இறுக்கமான, ஒரே மாதிரியான நடத்தை போன்றவை இந்நோயின் இயல்புகளாக உள்ளது. பொதுவாக பிறந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஏற்படும் இந்நிலை வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. இந்நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால், இது மரபியல் மற்றும் சூழலியல் காரணிகளோடு தொடர்புடையது என்று அறியப்படுகிறது.

உலகில் 68-ல் ஒரு குழந்தைக்கு மனவிறுக்கம் உள்ளது என்கிறது நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புமையத்தின் 2014 ஆம் ஆண்டு அறிக்கை. இந்தியாவில் மனவிறுக்கம் கொண்டவர்களின் எண்ணிக்கை 1.8 கோடி என்கிறது இந்த அறிக்கை. மிகவும் பொதுவான வளர்ச்சிக் கோளாறு
களில் மூன்றாவது இடத்தில் ஆட்டிசம் உள்ளது.

நாட்டில் மனவிறுக்கம் கொண்டவர்களுக்காகப் பல பள்ளிகள் உள்ளன. குழந்தைகளுக்கு சமூக, நடத்தை மற்றும் மொழித் திறன்களை அவரவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப உருவாக்குவதற்கு இந்தப் பள்ளிகள் உதவுகின்றன. இக்கோளாறுகளுக்கு மருத்துவக் கண்டறிதல் இல்லை. குழந்தையின் நடத்தை மற்றும் வளர்ச்சியின் மூலமாகவே இந்நோயின் தன்மைகள் கணிக்கப்படுகிறது. நடத்தை, பேச்சு, கல்வி சார்ந்த சிகிச்சைகளே இதற்கான சிறப்பு மருத்துவமாக உள்ளது.  

சர்வதேச யோகா தினம் (International Day of Yoga, June 21)

நோய்த்தடுப்பு, உடல்நல மேம்பாடு, தற்போதைய பல்வேறு வாழ்க்கைமுறை கோளாறுகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும்ஜூன் 21-ம் நாள் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இணை அல்லது சேர் என்று பொருள் தரும் யுஜ் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து உருவானதே யோகா என்று சொல்லப்படுகிறது.

யோகா ஒருவரின் உடல், மனம், உணர்வு, ஆற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான கருத்துருவாக உள்ளது. இதன் அடிப்படையில் யோகா பின்வரும் நான்கு பெரும் வகைகளாக பிரிக்கப்படுகிறது. கர்ம யோகாவில் உடலைப் பயன்படுத்துகிறோம். ஞான யோகாவில் மனதைப் பயன்படுத்துகிறோம். பக்தி யோகாவில் உணர்வையும் கிரியா யோகாவில் ஆற்றலையும் பயன்படுத்துகிறோம்.

பதஞ்சலி என்கிற ஞானி யோக அறிவியலை குறியீடாக்கி அதன் எட்டு பிரிவுகளை அஷ்டாங்க யோகா என்று அழைத்துள்ளார். அவை யமா, நியமா, ஆசனா, பிராணயாமா, பிரத்யாகரா, தாரணா, தியானா மற்றும் சமாதி என்று பிரிக்கப்பட்டுள்ளது.

யோகாவின் பொதுவான வடிவம் பல்வேறு ஆசனங்களாக உள்ளது. அவை உடலுக்கும் உள்ளத்துக்கும் நிலைத்தன்மையைக் கொண்டு வருகின்றன. ஒவ்வோர் ஆசனமும் வெவ்வேறு பலன்களைத் தருகிறது. இந்த ஆசனங்களை அவரவர் திறனுக்கு ஏற்றபடி ஒரு யோகா குருவின் வழிகாட்டுதல்படி பயிற்சி செய்வது நல்லது.

உடல் பருமன், நீரிழிவு, மிகை ரத்த அழுத்தம், மனக்கலக்கம், வாழ்க்கைமுறை குறைபாடுகள் போன்ற ஆரோக்கியப் பிரச்னைகள் பரவலாக இருக்கும் தற்போதைய சூழலில் யோகா ஒரு முழுமையான சுகாதார நடைமுறையாக உள்ளது.

உடற்தகுதி, தசை-எலும்பு செயல்பாடு, இதய-ரத்தக்குழல் ஆரோக்கியம், சுவாசக் கோளாறுகள், மனஅழுத்தம், களைப்பு, மனக்கவலை போன்ற உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு யோகா பயிற்சிகள் உதவியாக இருக்கிறது.

பழங்கால இந்திய மரபின் விலை மதிக்க முடியாத ஒரு பரிசுதான் யோகா. அது மனதுக்கும் உடலுக்கும் இடையில் ஒன்றிணைந்த ஓர் இயைபை உருவாக்க உதவுகிறது. உள்ளம் மற்றும் உணர்ச்சிக் கோளாறுகளைக் கட்டுப்படுத்துவதில் அது மிகவும் உதவிகரமாக உள்ளது.

இதனால் இன்று உலகம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக யோகா திகழ்கிறது. சுகாதாரம் மற்றும் நல்வாழ்க்கைக்கான இந்த அணுகுமுறை, நிலையான வளர்ச்சியையும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையையும் நோக்கி நகரும் மனிதகுல முயற்சி வெற்றி பெற நேரடியான மற்றும் பயனுள்ள பங்களிப்பை வழங்குகிறது.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் - ஜூன் 26

சட்ட விரோத போதைப்பொருள் பயன்பாட்டையும் கடத்தலையும் எதிர்த்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26ம் நாள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1987-ம் ஆண்டு இந்த சிறப்பு தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.

போதைப்பொருள் பயன்பாடு உலகம் முழுவதும் 2.30 கோடி மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 32,200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான போதைப்பொருள் வணிகம் நடைபெற்று வருவதாக 2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை மற்றும் மனநிலை மாற்றப் பொருட்களைத் தடுக்க இந்திய அரசு 1988-ம் ஆண்டு ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. இருந்தபோதும் போதைப்பொருள் கேடு பரவலாகத் தொடர்ந்து வருகிறது. பஞ்சாபில் ஏறத்தாழ 75% இளைஞர்கள் ஏதோ ஒரு வகையான போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனர்.

மாநகரங்களில் சிகரெட், மது போன்ற பிற போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களிடத்தில் மட்டுமல்லாமல் பெண்களிடத்திலும்கூட அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய கலாச்சாரம், மாறிவரும் குடும்ப உணர்வு, நண்பர்களின் வற்புறுத்தல் போன்றவை போதைப்பழக்கம் ஏற்படுவதற்கான சில காரணங்களாக இருக்கிறது.

போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்னைகள் தற்போது போதைப்பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. உடல் நலத்தைச் சீர்கெடச் செய்வதோடு, பொருளாதார இழப்பு, திருட்டு, வன்முறை, தீவிரவாதம், குற்றச்செயல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளையும், சமூக ஒதுக்கம், ஒட்டுமொத்த சமூக வீழ்ச்சி போன்ற பக்க விளைவுகளையும் உண்டாக்குகிறது.

போதைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருள் எடுக்காத போதும் பாதிப்படைகின்றனர். ஹெராயின் அல்லது போதை தரும் மயக்க மருந்துகள் தூக்கக் கிறக்கம், குறை சுவாசம் போன்ற பிரச்னைகளை உண்டாக்குகின்றன.

கொக்கைன் வேகமான மூச்சையும், மது நடுக்கம் மற்றும் வலிப்பையும் உண்டாக்குகின்றன. கடும் மனநிலை ஊசலாட்டங்கள், மனச்சோர்வு, மனக்கலக்கம், அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபாடு இழத்தல், மன நோயால் ஏற்படும் பிரச்னைகள், போதைப் பொருட்களுக்கு அடிமையாகி அதை அதிகளவில் உட்கொள்ளும் நாட்டம் ஏற்படுதல், ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடும் விருப்பம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கு இப்பழக்கம் காரணமாகிறது.  

போதைப்பழக்கத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

போதைப்பழக்கத்தை ஒரு பிரச்னையாக அங்கீகரிப்பதே அதற்குரிய சிகிச்சைக்கான முதல் படி. இரண்டாவது படி உரிய உதவியைப் பெறுவது. டெல்லியில் 500-க்கும் மேற்பட்ட மறுவாழ்வு மையங்கள் போதைக்கு அடிமையானவர்களை மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் திருப்பிக் கொண்டுவர ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இதுபோல செயல்பட்டுவரும் பல அரசு மற்றும் தனியார் போதை மீட்பு மையங்களைத் தொடர்பு கொண்டு அதற்கான உதவியைப் பெறலாம்.

நோயாளி தம்மைப் போலவே பிரச்னை உள்ளவர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் இந்தப் பிரச்னைகளில் இருந்து வெளிவருவதற்கான உத்வேகம் கிடைக்கிறது. நோயாளியின் உடலில் இருந்து விரைவில் போதை தரும் பொருட்களை அகற்ற வேண்டும். சில சமயம் போதைப்பொருளின் சிறு அளவைப் படிப்படியாக குறைத்துக் கொடுத்து வருவதும் உண்டு.

சில நோயாளிகளுக்குப் பதில் பொருட்கள் கொடுக்கப்படும். சூழ்நிலைக்கு ஏற்ப மருத்துவர் உள் அல்லது வெளி நோயாளியாக பிரித்து சிகிச்சைகளை பரிந்துரை செய்வார். நோயாளியின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து இந்த சிகிச்சையில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது.

சமநிலை உணவு, யோகா, தியானப்பயிற்சிகள், உடல்பயிற்சி, தகுந்த ஓய்வு, பொழுதுபோக்கு ஆகியவற்றால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குதல், ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளை உருவாக்குதல், நேர் சிந்தனைகள், சமுதாய செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவை புகைபிடித்தல், மது, போதைப்பழக்கம் போன்றவற்றைத் தடுக்க உதவுகின்றன.

தொகுப்பு : க.கதிரவன்