எடையைக் குறைக்கும் உணவு விதிகள்!



மாத்தி யோசி

‘எடை குறைப்பு விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவே உங்கள் உணவையும், அதன் மூலம் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். உணவின் மீது வழக்கமாக நாம் வைத்திருக்கும் பழைய நம்பிக்கைகளை விடுத்து, புதிதாக மாற்றி சிந்திப்பதன் மூலம் விரைவில் எடையை குறைக்கலாம் என்று சில டிப்ஸ்களையும் முன் வைக்கிறார்கள்.

* ‘நான் இன்று கடுமையாக வேலை செய்திருக்கிறேன், இன்று நிறைய நடந்திருக்கிறேன் அல்லது இன்று சோகமாக இருக்கிறேன் அதனால் நிறைய சாப்பிட வேண்டும்’ என்று உங்களுக்குள் சமாதானப்படுத்திக்  கொண்டு ஒரு கட்டுக் கட்டாதீர்கள். மாறாக, ‘ஆரோக்கியமான உடலைப் பெற வேண்டுமென்பதற்காக என் உடலுக்கு நான் கொடுக்கும் பரிசு இந்த உணவு’ என யோசிக்கலாம்.

* ‘உணவை வீணாக்க வேண்டாம்... கொஞ்சம்தானே சாப்பிட்டு விடுவோம்’ என வயிறு நிறைந்திருந்தாலும், தட்டில் மிச்சம் வைக்காமல் சாப்பிடுபவர்கள் உண்டு. அதற்கு பதில், ‘என் வயிற்றில் இடமில்லை. இதற்குமேல் என்னால் சாப்பிட முடியாது’ என்று சொல்லிப் பழகுங்கள்.

* ‘இந்த உணவு கலோரி குறைந்தது; கொழுப்பில்லாதது; இனிப்பு குறைவானதுதானே...’ என நினைக்காமல், எவ்வளவுதான் கலோரி குறைவான உணவாக இருந்தாலும் அளவுக்குமீறி சாப்பிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* விரும்பும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதற்கேற்றார்போல் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம் என நினைப்பதும் தவறு. ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதையோ, அதிகமாக சாப்பிடுவதையோ உடற்பயிற்சியால் ஈடு செய்ய முடியாது.

* ‘என்னுடைய குடும்பத்தில் எல்லோருமே குண்டாகத்தான் இருக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?’ என்று சிந்திக்காமல், ‘என்னுடைய டி.என்.ஏவை மாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். அதற்குப் பதில் என்னை நான் மாற்றிக்கொண்டு சிறந்த
உடலைப் பெறுவேன்’ என சொல்லிக் கொள்ளுங்கள்.

* ஒரே ஒரு முறை மட்டும் இந்த சாக்லேட் கேக்கை சாப்பிடுவதால் தவறில்லை” என்று சமாதானம் சொல்லிக்கொண்டு சாப்பிடாமல், ‘இதை இப்போது சாப்பிட்டால், இதற்கு பதில், நல்ல சத்துள்ள ஆரோக்கிய உணவுகளை இன்று இழக்க நேரிடும்’ என்று சிந்திக்கலாம்.

- இந்துமதி