தினம் 4 முறையாவது கட்டிப் பிடியுங்கள்!



உலக கட்டிப்பிடி தினம் - ஜனவரி 21

இந்த வெளிநாட்டுக்காரர்களுக்கு வேறு வேலையே இல்லை. எது எதைத்தான் கொண்டாடுவது என்று விவஸ்தையும் இல்லை. ஆமாம்... ஜனவரி 21ம் தேதியை World hug day என்று கொண்டாடி வருகிறார்கள். நம் ஊரில் முத்தப் போராட்ட சர்ச்சைகள் ஓய்ந்திருக்கும் நேரத்தில், ‘கட்டிப்பிடிப்பதற்கு ஒரு தினமா’ என்று கேள்விப்பட்டதும் பதற்றத்தோடு, தொடு சிகிச்சை செய்து வரும் கீதாவிடம் விசாரித்தால் அவர் சொல்கிற மருத்துவப் பலன்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

‘‘முதலில் இந்த விஷயத்தில் ஒரு தெளிவுக்கு வந்துவிடலாம். இது காதலர்களோ, தம்பதிகளோ எதிர்பாலின ஈர்ப்பால் கட்டியணைத்துக் கொள்வது சம்பந்தமானது மட்டுமே அல்ல. ஆத்மார்த்தமான அன்போடு ஒருவருக்கொருவர் அரவணைத்துக் கொள்ளும்போது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் இருவருக்கும் கிடைக்கும் மருத்துவரீதியான லாபங்கள் பற்றியே இதில் பேசப் போகிறோம்.

நண்பர்கள், தோழிகள், பெற்றோரைக் கட்டியணைத்துக் கொள்ளும் குழந்தைகள், உறவுகளுக்குள் ஒருவருக்கொருவர் அன்பின் பெயரால் அணைத்துக் கொள்ளும்போது பல்வேறு நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. அதை பிரபலப்படுத்தும் வகையிலேயே கட்டிப்பிடி தினத்தைக் கொண்டாடி வருகிறார்கள். உண்மையில் மருத்துவத்தில் இதுவும் ஒரு சிகிச்சை’’ என்று அறிமுகம் கொடுக்கிறார் கீதா செல்லமுத்து.

‘‘Touch therapy எனும் தொடு சிகிச்சையில் அக்குபிரஷர், வர்மம், மசாஜ் போன்று நிறைய வகைகள் இருக்கின்றன. அந்த சிகிச்சைமுறைகளில் ஒன்றுதான் பிuரீ Therapy. ‘வசூல்ராஜா’ திரைப்படத்தில் கமல் செய்ததன் மூலம் கட்டிப்பிடி வைத்தியம் என்று பலருக்கும் பரிச்சயமாகியிருக்கிறது. அடிப்படையில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் ஆனது நம்முடைய உடல்.

இந்த ஐம்பெரும் சக்திகளை நம்முடைய கண், மூக்கு, காது, நாக்கு, தோல் என்ற ஐம்புலன்களில் இருக்கும் ஷிமீஸீsஷீக்ஷீ கிரகித்துக் கொள்கிறது. இந்த ஐம்புலன்களில் தோல் பகுதியின் மூலமே தொடு உணர்வை நாம் பெற்றுக் கொள்கிறோம்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நாக்கு சுவையை மட்டுமே உணரும், மூக்கு வாசனையை மட்டுமே உணரும், கண்ணால் காட்சிகளை மட்டுமே உணர முடியும். ஆனால், தோல் பகுதி வெளியிலிருந்து மொத்த உணர்வையும் தன்னுடைய சென்ஸாரால் கிரகித்துக் கொள்கிறது. இந்த தொடு உணர்வுதான் உடலுக்குத் தேவையான முக்கிய உணவு.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...தலைவலியோ, வயிற்றுவலியோ ஏற்பட்டால் நம் கைகளை அந்த இடங்களில் வைத்துக் கொள்கிறோம். உடலில் எங்காவது அடிபட்டுவிட்டால் உடனடியாக அங்கே தொட்டுப் பார்க்கிறோம். இந்த தொடு உணர்வு நமக்கு நல்ல உணர்வைத் தருகிறது. இது நமக்குத் தெரியாமலே நாம் செய்து வரும் ‘டச் தெரபி.’ அதேபோல, சிலுசிலுவென்ற காற்று உங்களைத் தழுவிச் செல்கிறது.

அப்போது உங்கள் மனது எப்படி இருக்கும்? ஒருவரை வார்த்தைகளால் அன்பு பொங்க வரவேற்பதை விட, இறுக்கமாகக் கைகுலுக்கியோ அல்லது அணைத்தோ வரவேற்பது எப்படி இருக்கும்? அந்த அணைப்பில் கிடைக்கும் ஆறுதலும் பரவச உணர்வும் முற்றிலும் வேறுதானே! இயற்கை நம்மை அப்படித்தான் வடிவமைத்திருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள மயோ கிளினிக்கில் நடந்த ஓர் ஆய்வின் மூலம் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். குறைப்பிரசவம் மூலம் பிறக்கும் குழந்தைகளை இரண்டு வகையாகப் பிரித்துக் கொண்டார்கள். ஒரு தரப்பு குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு இல்லாமல் தேவையான மருத்துவ சிகிச்சைகளை மட்டுமே கொடுத்தார்கள்.

மற்றொரு தரப்பு குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகளுடன் தாயின் அரவணைப்பும் கொடுக்கப்பட்டது. இவர்களில் தாயின் அரவணைப்பில்லாத குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சியைவிட தாயின் அரவணைப்போடு வளர்க்கப்பட்ட குழந்தைகள் விரைவில் முழு வளர்ச்சி அடைந்து வீடு திரும்பினார்கள்.

அதன்பிறகுதான் சக மனிதர்களின் தொடு உணர்வு ஏற்படுத்தும் மாயாஜாலங்கள் பற்றி உலகம் முழுவதும் ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள். எல்லா நோய்களுக்கும் உடலில் ஏதாவது ஒரு சமன்நிலை குறைவதுதான் காரணமாக இருக்கிறது. உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சக்திநிலையில் ஏதோ ஒரு தடை ஏற்படுகிறது.

ஆத்மார்த்தமாக ஒருவருக்கொருவர் அணைத்துக் கொள்வதன் மூலம் இந்த தடை அகற்றப்படுகிறது என்பதை ஆய்வில் உறுதிப்படுத்தினார்கள். அதனால்தான், இந்த கட்டிப்பிடி வைத்தியத்துக்கு ‘எனர்ஜி தெரபி’, ‘காம்ப்ளிமென்டரி தெரபி’ என்று வேறு பெயர்களும் உள்ளன’’ என்கிறார்.

அதெல்லாம் சரி... எங்களுக்கு எதுவும் ஸ்பெஷல் தகவல் இல்லையா என்று கேட்கும் தம்பதியருக்காக இந்த கடைசி பத்தி...அதே அமெரிக்காவில் ‘ஹக் தெரபி’ தொடர்பாக நடந்த ஆய்வில் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களில், ஒருநாளைக்கு 4 முறையாவது கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கிடையே அன்பும் அன்யோன்யமும் இருந்தது. மற்றவர்கள் சண்டைக்கோழிகளாக இருந்தார்கள். ஆகவே மக்களே... Get in touch!

அமெரிக்காவில் ஓரிகான் மாகாணத்தில் வசித்து வரும் சமந்தா, இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை ஒரு சிகிச்சைபோல பலருக்கும் செய்து வருகிறார். சமந்தாவின் இந்த முயற்சிக்கு பலதரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.

ஆனால், சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது சமந்தாவின் கிளினிக். ஒரு வாரத்துக்கு முன்பே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும். சுத்தமான ஆடைகள் அணிந்திருக்க வேண்டும், தவறான எண்ணங்கள் கூடாது. ஒரு நிமிடத்துக்கு இத்தனை டாலர் ஆகியவை இந்த விதிகளில் முக்கியமானவை!

ஹக் தெரபியில் அதன் நேரத்தை வைத்தும் ஓர் ஆய்வு நடந்திருக்கிறது. பொதுவாக, இருவர் சந்தித்துக் கொள்ளும்போதோ, விடைபெறும்போதோ தங்களுக்குள் கட்டியணைத்துக் கொள்கிற நேரம் சராசரியாக 3 வினாடிகள்.

ஆனால், 20 வினாடிகள் கட்டியணைத்துக் கொள்வது தெரபி அளிப்பதுபோல உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளைத் தருவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். உண்மையான அன்போடு கட்டியணைத்துக் கொள்ளும்போது ஒருவர் மீது அன்பை உருவாக்கும் Oxytocin என்ற ஹார்மோன் உடலில் அதிகமாக சுரக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மன அமைதி, நமக்காக ஒருவர் இருக்கிறார் என்ற பாதுகாப்பான உணர்வு, பயத்தைப் போக்கி தைரியம் அளிப்பது என பல நன்மைகளைத் தருகிறதாம் ஆக்ஸிடோஸின். இதேபோல, மன அழுத்தத்தை உருவாக்கும் Cortisol என்ற ஹார்மோன் சுரப்பும் கட்டுப்படுவதை ஆய்வில் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

எல்லா நோய்களுக்கும் உடலில் ஏதாவது ஒரு சமன்நிலை குறைவதுதான் காரணமாக இருக்கிறது. உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சக்திநிலையில் ஏதோ ஒரு தடை ஏற்படுகிறது. ஆத்மார்த்தமாக ஒருவருக்கொருவர் அணைத்துக் கொள்வதன் மூலம் இந்த தடை அகற்றப்படுகிறது!

ஞானதேசிகன்
படங்கள்: ஆர்.கோபால்