பயணிகளின் கனிவான கவனத்துக்கு!



10-15 ஆண்டுகளுக்கு முன் விமானப் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இன்றோ, விமான பயணிகளின் கூட்டம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள பயணிகளின் கூட்டத்தை விட பன்மடங்கு அதிகரித்து விட்டது என்று கூறினால் அது மிகையாகாது!

நடிகர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், கார்பரேட் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அலுவலர்கள், அரசாங்க அலுவலர்கள், மருத்துவர்கள், இன்ஜினியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், விஞ்ஞானிகள், சுற்றுலா செல்லும் அனைத்து வர்க்க மக்கள் என விமானப் பயணம் செல்பவர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.இப்படிப் பயணம் செய்பவர்களை பார்ப்பவர்களுக்கு ஆதங்கமாகவும் பொறாமையாகவும் கூட இருக்கலாம்.

ஆனால், கண்டம் விட்டு கண்டமோ, உள்நாட்டிலோ அதிக விமானப் பயணம் செய்பவர்கள் எவ்வளவு களைப்பும் கஷ்டமும் அடைகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். முறையாக ஓய்வு எடுக்க முடியாமல், உறங்க முடியாமல், உண்ண முடியாமல், அதிக சுமைகளை தூக்கிக் கொண்டு அலைவது, புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புரியாத மொழிகள், அதிகாலை, உச்சி வெயில், நடுநிசி என கண்ட நேரங்களில் பயணம்... அதிலும் இரண்டு சீட்டுகளுக்கு இடையே நடு இருக்கை கிடைத்து விட்டால், அந்த கொடுமை
பற்றிச் சொல்லவே வேண்டாம்!

விமான களைப்பு (JET LAG)க்கு காரணம் என்ன?

*வெகுதூரப் பயணத்தின் போது வேறுபடும் நேர மாற்றம் நம் உடலையும் மனதையும் பெரிதளவில் பாதிக்கிறது.

*24 மணி நேரத்தில் உங்களின் உடல் வெப்பநிலை, உடல் வலிமையின் அளவு, ‘மன’ மற்றும் ‘உடல்’ திறனின் கூர்மை குறைகிறது.

*ஒரு நாட்டில் பகலில் புறப்பட்டு, வெகுநேர, வெகுதூர விமானப் பயணத்துக்கு பிறகு (இரவு வரக்கூடிய நிலையில்), மீண்டும் பகலிலேயே அடுத்த நாட்டில் இறங்குவதால், வழக்கத்துக்கு மாறாக உடல், மன நிலைகளை திடீரென மாற்ற வேண்டிய அவசியத்துக்கு தள்ளப்படுகிறது.

*அதிக சத்தம், கட்டாயமாகச் சாப்பிடப்படும் விமான உணவு, அதிக நேரம் கை, காலை இஷ்டம் போல நீட்ட முடியாதது...

*வறண்ட வானூர்தி அமைப்பு  (Dry Aircraft Environment)  உடலின் நீரின் தன்மையை குறைக்கிறது (திறீuவீபீ றீஷீss).

* தூக்கம் இல்லாத அவதி, அமர்ந்தே இருப்பதால் உண்டாகும் உடல் வலி மற்றும் மனக்களைப்பு என அனைத்தும் சேர்ந்து, அதிக எரிச்சல், கோபம் கொண்டு, மன, உடல், புத்திக் கூர்மை குறைந்து, செய்ய வேண்டிய நல்ல காரியத்தை கோட்டை விடவும் வாய்ப்புகள் அதிகம்.

அப்படியென்றால் விமானப் பயணம் செய்யக் கூடாதா என்ன? இந்தக் களைப்பு களை மிகவும் குறைக்கவோ, அறவே இல்லாமல் செய்யவோ கூட முடியும். அடுத்த விமானப் பயணம் இன்பமயமாக இருக்க, உற்சாகமாக அமைய, விமானத்தில் இருந்து இறங்கியவுடன் செய்ய வேண்டிய வேலையை எல்லோரும் அதிசயிக்கும்படி மிகச் சிறப்பாக செய்து முடிக்க பல சிறந்த வழிகள் உள்ளன!

விமான களைப்பைப் போக்க விவேகமான யுக்திகள்...

1. பயணத்துக்கு முன் (BEFORE YOU FLY)

*பயணம் செய்வதற்கு முன்பு இரவு நன்றாக உறங்க வேண்டும்.
*மது அருந்த  வேண்டாம்.
*விமானப் பயணத்துக்கு முன்பதிவு செய்யும் போதே வெளிப்புற இருக்கையை கேட்டுப் பெறுங்கள். கைகள், கால்களை சற்று நீட்டி, மடக்க உதவும்.
*கொழுப்பு குறைந்த, அதிக கார்போஹைட்ரேட் உணவை கேட்டு உண்ணவும்.
*விமானத்துக்குள் அனுமதிக்கப்படும் கைப்பையில்   (Hand Baggage)   சக்தி தரக்கூடிய சிறிய உணவு வகைகள், இதமாகவும் உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள நல்ல புத்தகங்கள், பிடித்த இசை கேட்க, பார்க்க வேண்டிய வசதிகளோடு செல்வது சிறப்பாகும்.

2. விமானத்துக்கு உள்ளே (ON THE PLANE)

*நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

*உங்கள் தாகத்தை அதிகப்படுத்தக்கூடிய காபி, டீ, குளிர்பானங்கள், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

*அதிகமாக சாப்பிட்டு வயிற்றுக்குத் தொந்தரவு தர கூடாது.

*கிடைக்கும் போது எல்லாம் பூனையைப் போல குட்டி குட்டி  (Cat Nap)   தூக்கம் போடுவது மிகவும் அவசியம்.

*போக வேண்டிய நாட்டின் நேரத்தை கைக்கடிகாரத்தில் சரி செய்து, அதன்படியே உணவு, உறக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

*கைகள், கால்களை, இணைப்புகளை, தசைகளை நீட்டி, மடக்குவது முக்கியம். அனுமதிக்கப்படும் வேளைகளில் சிறிது நடப்பது ரத்த ஓட்டம் சீராக இருக்க ஏதுவாக அமையும்.

*உடலை இறுக்கும், காற்றுபுக முடியாத உடைகளை அணியாமல், உங்களின் உடலை மிக வசதியான முறையில் நீட்டி-மடக்க வசதியான உடைகளை அணிவது அவசியம்.

*விமானப் பயண கழுத்து வலி (Airplane Neck)யைப் போக்கி, நிம்மதியாக உறங்க... கண்களை மூடும் பட்டை (Eye Shields), கழுத்துப் பகுதிக்கு சிறிய தலையணை (Neck Pillows), காது அடைப்பான் (Ear Plugs) என தேவையானவற்றை எடுத்துச் செல்வது முக்கியம்.

*எந்த மாத்திரைகள் சாப்பிடக்கூடியவராக இருந்தாலும் மருத்துவர் அறிவுரைப்படியே எடுத்தாக வேண்டும்.

3. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் (On Arrival)

*இறங்கிய நாட்டின் இடத்துக்கு ஏற்ப உணவையும் உறக்கத்தையும் அந்த நேரத்துக்குத் தகுந்தவாறே ஆரம்பிக்க வேண்டும்.

*இயற்கையான சூரிய வெளிச்சம் மிகவும் நல்லது.

*ஒரு சிறிய நடைப்பயிற்சி உடலுக்கு உகந்தது.

*உடன் மதிய உறக்கம் தவிர்க்கவும்.

*சோர்வை அண்டவிடாமல், பயணப்பெட்டிகளை திறந்து, துணிமணிகளை அடுக்கி வையுங்கள், நடைப்பயிற்சி, சிறிய ஓட்டம், நீந்துதல், சிறிய உடற்பயிற்சிகள் செய்து, குளித்து விட்டு அங்குள்ள நண்பர்களையும், சந்திக்க வேண்டிய நபர்களை மேலும் மற்றவர்களோடும் பேசிப் பழக (BE SOCIAL) ஆரம்பிக்கும் போது, புதிய இடம் என்பது மறந்து, உடனே அந்த வாழ்க்கைமுறைக்கு மாற வழி வகுக்கும்.

ஒரு கண்டம் விட்டு அடுத்த கண்டம் பிரயாணம் செய்கிறவர்கள் மட்டுமல்ல... உள்நாட்டிலேயே கூட அதிக விமானப் பயணம் செய்யும் அனைவரும் எவ்வளவு களைப்பும் கஷ்டமும் அடைகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்!

(ஆரோக்கியம் தொடரும்!)

முனைவர்
மு.ஸ்டாலின் நாகராஜன்