தொழுநோயைப் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?



அழகே... என் ஆரோக்கியமே...

2000-ம் ஆண்டுக்குள் தொழுநோய் பாதிப்பை 10 ஆயிரத்தில் ஒருவருக்கு என்று குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதை கடந்த 2000-ம் ஆண்டு சாதித்தும் காட்டியது. ஆனால், அதன் பின்னரும், ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானவர்கள் உலகளவில் தொழுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 60 சதவீதத்தினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

ஏன் தொழுநோயைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்?Mycobacterium leprae என்ற பாக்டீரியா தொற்றால் தொழுநோய் உண்டாகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூக்கு மற்றும் வாயிலிருந்து வரக்கூடிய நீர்த்துளிகள் (Droplet infection) மூலமாக இது பரவும். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலோ, தும்மினாலோ இது பரவும்.

சின்னம்மை, வைரஸ் போல் அருகாமையில் இருப்பவரை ஒரு இரு தும்மலில் இது பாதிக்காது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவரின் அருகாமையில் பல நாட்கள் தொடர்ந்து இருப்பவரிடம் தொற்றிக் கொள்ளும். தொழுநோயை ஆரம்பத்திலேயே நாம் கண்டுபிடித்துவிட்டால் அதை முற்றிலுமாக குணப்படுத்திவிட முடியும்.

தொழுநோயின் அறிகுறி என்ன?

இந்த பாக்டீரியா மிக மெதுவாகத்தான் பெருகும். ஆகையால் பாக்டீரியா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டு நோயின் அறிகுறி முதன்முதலில் வெளியே தெரிவதற்கு வருடக்கணக்கில் கூட ஆகலாம்.

மூன்று அறிகுறிகள்

* தோலின் நிறம் குறைந்து இருப்பதுமற்றும் அவ்விடத்தில் தொடு உணர்ச்சி கம்மியாகத் தெரிவது.
* நரம்புகள் தடித்து அந்த நரம்பின் பாதையில் உணர்ச்சியில்லாமல் இருப்பது.
* தோல் பரிசோதனையின்போது, தொழுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருப்பது.

சரி, எல்லாருக்குமே தோல் நிறம் குறைந்துதான் காணப்படுமா என்றால் இல்லை. மாநிறம் மற்றும் கருத்த நிறமுடையவர்களுக்கு நிறம் குறையும்போது நன்றாகத் தெரியும். ஆனால், சிவந்த நிறமுடையவர்கள் தோல் பாதிக்கும்போது அவர்களது நிறமாறுதல் தெளிவாகத் தெரியாது.

தோலில் பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பது பாதிக்கப்பட்டவரின் எதிர்ப்பு சக்தியை பொறுத்து மாறுபடும். அந்த பாக்டீரியாவிற்கான நல்ல எதிர்ப்பு சக்தி உடம்பில் இருப்பவர்களுக்கு, ஒன்றிரண்டு இடங்களில் தோலின் நிறம் குறைந்து காணப்படும். ஆனால், எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்தவர்களுக்கு பெரும்பாலான தோலின் மேற்பகுதியிலும், உள்ளுறுப்புகளிலும் பாதிக்கப்படும்.

எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பவர்களுக்கு பாதிக்கப்பட்ட இடத்தின் விளிம்புகள் நன்றாகத் தெரியும். (Well defined margins) இந்த வகையைச் சார்ந்த நோயை Tuberculoid Leprosy என்று அழைப்போம்.தொழுநோயால் பாதிக்கப்பட்டவரை வகைப்படுத்த பொதுவாக Ridley - Jopling classification முறையை பயன்படுத்துவார்கள். அதன் அடிப்படையில், ஒருவரின் எதிர்ப்பு சக்தியை பொறுத்து Tuberculoid, Borderline Tuberculoid, Mid Borderline, Borderline Lepromatous மற்றும் Lepromatous Leprosy என்று வகைப்படுத்தப்படும்.

இதில் Lepromatous Leprosy வகையைச் சேர்ந்தவர்களுக்கு உள் உறுப்புகளும் பாதிக்கப்படும். இவர்களுக்கு கால் வீக்கம், மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், காது தடித்து இருத்தல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். தோல் பாதிப்பு உடம்பு முழுக்க இருந்தாலும் கூட துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு அந்த பாதிப்பே தெரியாது. அதுமட்டுமில்லாமல் கை மற்றும் கால்களில் தொடு உணர்ச்சி கம்மியாக இருக்கும்.

இந்தியாவில் நீரிழிவு நோயுள்ளவர்கள் அதிகம் பேர். அவர்களுக்கும் இதேபோல் கை மற்றும் கால்களில் தொடு உணர்ச்சி குறைவாக இருக்கும். இந்த இரு நோய் இருப்பவர்களுக்கும் கால்களில் புண் ஏற்படும். தொடு உணர்வு கம்மியாக இருப்பதால் சின்ன காயங்களினால் உண்டாகும் வலியையும் அவர்கள் உணர்வதில்லை. அதனால், கவனிக்கப்படாத சிறு புண் பெரும் புண்ணாக மாறிவிடும்.

தொழுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு குளிர்ந்த நீர் அல்லது சூடான நீர் அவர்களது மேலே ஊற்றும்போது அதை அவர்களால் உணர முடியாது. அதனால் சூடான பாத்திரங்களை எடுத்தால் நம்மைப்போல் அவர்கள் அதை உடனே கீழே வைக்க மாட்டார்கள். வெகு நேரம் சூடான பாத்திரங்களைத் தொடுவதால் கைகளிலும் புண்கள் ஏற்படலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம், அனைவருக்கும் தோலின் நிறம் குறையும் அறிகுறி இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில், உடலின் எதிர்ப்பு சக்திக்கும் அந்த பாக்டீரியாவுக்கும் நடக்கும் போராட்டத்தில் தோல் சிவந்தும் போகலாம். தோல்கூட உரிந்து செதில் செதிலாக இருக்கலாம்.
இவ்வாறு தோலின் மேல் மாற்றங்கள் வரும்போது, தேர்ந்த தோல் மருத்துவரால் கூட, சில நேரங்களில் ஆரம்ப நிலையில் தொழுநோயை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். அந்த நேரங்களில், தேவைப்பட்டால் தோலின் சிறு பகுதியை Biopsy செய்து பரிசோதனை செய்யலாம்.

ஒரு சிலருக்கு நரம்புகள் மட்டும் தடித்து தோலில் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலே போகலாம். அதற்கு Pure neuritic Leprosy என்று பெயர். அந்த நரம்பின் பாதையில் தொடு உணர்ச்சி குறைந்தோ அல்லது அந்த நரம்பு எந்த தசையை செயல்படுத்த வைக்குமோ அந்த தசை வலுவிழந்தோ போகலாம். விரல்கள் மடங்கி போகலாம். ஆரம்பத்திலேயே வைத்தியம் செய்தால் விரல்களின் பாதிப்பை சில பயிற்சிகள் செய்து சரிப்படுத்தலாம்.

ஆனால், பல நாட்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் விரல்கள் நிரந்தரமாக மடங்கி விடும். அதனால் சாதாரண வேலைகள் செய்வதுகூட சிரமமாகி விடும். ஒரு சிலருக்கு அவர்களது வேலையே போய்விடலாம்.

தொழுநோய்க்கான சிகிச்சைகள்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொழுநோயை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இலவசமாக வழங்குகிறார்கள். Rifampicin, Dapsone, Clofazimine போன்ற மாத்திரைகளை நோயின் வீரியத்தை பொறுத்து ஆறு மாதங்களோ, ஒரு வருடமோ நோயாளி உட்கொள்ள வேண்டியிருக்கலாம். பாக்டீரியா தாக்கம் உடலில் கொஞ்சமாக இருந்தால் Paucibacillary Muti Drug Therapy (PBMDT) தேவைப்படும். பாக்டீரியா அதிகமாக இருந்தால் Multi bacillary Multidrug therapy (MBMDT) தேவைப்படும்.

ஏன் தொழு நோயை பற்றிய விழிப்புணர்வு தேவை?

2016-ம் ஆண்டு 145 நாடுகளிலிருந்து 2 லட்சத்து 16 ஆயிரத்து நூற்று எட்டு  புதிய தொழுநோய் பாதித்தவர்களை கண்டுபிடித்துள்ளார்கள். அதில் 18 ஆயிரத்து நானூற்று எழுபத்திரண்டு போ் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது மிகவும் அவசியம்.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேவையான மருந்துகளை தேவையான காலம் எடுத்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். தொழுநோய் பாதிக்கப்பட்டவர் மருந்துகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே அவரிடமிருந்து நோய் மற்றவருக்கு பரவுவது நின்றுவிடும். அதனால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவரை அன்போடும் கரிசனத்துடனும் நடத்த வேண்டும். அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது.

உலகம் முழுவதும் மருந்து இலவசமாக கிடைத்தும், இந்த நோயை ஏன் எளிதாக கட்டுப்படுத்த முடியவில்லை?

* நோயின் அறிகுறி தெரிவதற்கு வருடக்கணக்கு ஆகிவிடுவது, சில நேரங்களில் நோயைக் கண்டுபிடிக்க தாமதமாவது மற்றும் மனிதர்கள் மட்டுமில்லாமல், மனித குரங்கு, எறும்பு திண்ணி போன்ற மிருகங்கள் பாதிக்கப்படுவதோடு, அவைகள் மூலமாகவும் நோய் பரவுவது மூலகாரணமாக இருப்பதால்.

மாத்திரையை எடுத்துக்கொண்டாலே எளிதாக சரியாகி விடுமா என்றால் சிலருக்கு இம்மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடலாம். அதனால், மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொள்வதோடு, மருத்துவரை மாதா மாதம் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஒவ்வாமையை ஆரம்பத்திலே கண்டுபிடித்து ஒவ்வாமையை ஏற்படுத்திய மாத்திரையை நிறுத்திவிட்டு, வேறு மாத்திரையை எடுத்துக்கொள்ள மருத்துவர் அறிவுறுத்துவார்.

அன்னை தெரசாவும், மகாத்மா காந்தியும் தொழுநோயாளிகளின் நலனுக்காக பாடுபட்டார்கள். ‘நாம் அனைவரும் உலகில் பெரிய விஷயங்களை செய்துவிட முடியாது. ஆனால், சின்ன விஷயங்களைக்கூட பெரிய அன்போடு செய்ய முடியும். தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதை கடவுளுக்கே சேவை செய்வதாக உணர்கிறேன்’ என்று அன்னை தெரசா கூறினார். ஆகையால், தொழுநோயாளிகளை ஒதுக்கிவிடாமல் அன்பாக நடத்தினால் அவர்களை அந்த நோயின் கோரப்பிடியிலிருந்து கண்டிப்பாக காப்பாற்ற முடியும்.

( ரசிக்கலாம்… பராமரிக்கலாம்… )