வைட்டமின் ஏ-வுக்கும் வந்தாச்சு சொட்டு மருந்து!



சர்ப்ரைஸ்

போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைப் போலவே, வைட்டமின் ஏ-வுக்கும் சொட்டு மருந்து சமீபகாலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. இது அவசியமா என்று குழந்தைகள் நல மருத்துவர் லஷ்மி பிரசாந்த்திடம் கேட்டோம்...

‘‘குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால், அவர்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்புசக்தி, குறை இல்லாத பார்வைத்திறன் ஆகியன இச்சத்தின் மூலமே கிடைக்கிறது. மேலும், குழந்தைகள் உயரமாக வளர்வதற்கும் வைட்டமின் ஏ உதவுகிறது. குழந்தைப் பருவத்தில் வருகிற பார்வை குறைபாட்டை நீக்குவதற்கு வைட்டமின்-ஏ உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ குறைபாடு உள்ளதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையிலேயே வைட்டமின் ஏ-வுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அதனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களைக் கொண்ட பெற்றோர் இது போன்ற சொட்டு மருந்து முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை பெற்றும் சொட்டு மருந்து கொடுக்கலாம். இதற்கான கால வரையறை 6 மாதம் முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இதில் 6 முதல் 12 மாதம் உள்ள குழந்தைகளுக்கு மாதத்துக்கு ஒரு முறை, ஒரு லட்சம் யூனிட் தர வேண்டும். 12 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒரு தடவை 2 லட்சம் யூனிட் வரை வைட்டமின்-ஏ டிராப் கொடுத்து வர வேண்டும் என்ற கணக்கும் இருக்கிறது.

- வி.ஓவியா