தேர்வு காலத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளுங்கள்!



கவுன்சிலிங்

பொதுத்தேர்வுகளின் மாதமான மார்ச் வந்துவிட்டாலே எக்ஸாம் டென்ஷன் எல்லோருக்கும் வந்துவிடும். குழந்தை நன்றாகத் தேர்வு எழுத வேண்டுமே... நல்ல மார்க் எடுக்க வேண்டுமே என்று அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் விஷயமாகவே ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களின் தேர்வினைப் பார்க்கிறார்கள்.

இதனால் ஏற்கெனவே பதற்றத்தில் இருக்கிற மாணவர்களுக்கு இன்னும் குழப்பம் அதிகமாகும். இந்த தேர்வு கால மனப்பதற்றத்தை எப்படி கையாள்வது? எப்படி வெல்வது? மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த் பதிலளிக்கிறார்.

‘‘ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களில் 3 வகையானவர்கள் இருக்கிறார்கள். தேர்வுக்காக எந்தவொரு முன் தயாரிப்பும் இல்லாத மாணவர்கள் எந்தவிதமான பரபரப்பும் இன்றி, தேர்வைப் பற்றிய கவலையே இல்லாமல் கூலாக இருப்பார்கள். இது முதல் வகை. இன்னொரு வகையினர் தேர்வு தேதி அறிவிப்பு வெளியானதுமே, எவ்வளவுதான் தேர்வுக்குத் தயாராகி இருந்தாலும் ஒரு பதற்றம் இவர்களைத் தொற்றிக் கொள்ளும். இந்த இரண்டுக்கும் நடுவில் மூன்றாவது வகையினரும் இருக்கிறார்கள்.

பொதுவாகவே ‘தேர்வு பதற்றம்’ என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரக்கூடியதாக இருக்கிறது. போட்டிகள் நிறைந்த இந்த உலகம் என்பதால் பெற்றோர், பள்ளி நிர்வாகம், சமூகம் என அனைத்து தரப்பிலிருந்தும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் 75 சதவீதம் மார்க் எடுத்தாலே கொண்டாடப்பட்டு வந்தது. இப்போது 99, 100 எடுத்தாலும் 0.05 சதவீதத்தில் ஐ.ஐ.டி, எம்.பி.பி.எஸ் இடங்களை தவறவிடுவது சகஜமாகிவிட்டது.

தன் பிள்ளை ஐ.ஐ.டி-ல் படிக்கிறான், மருத்துவம் படிக்கிறான் என்று சொல்லிக் கொள்வதை பெற்றோர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். பொறியியல் படிப்புக்கான மதிப்பு குறைந்தாலும் கூட, முதல் தரமான கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் சேர்த்துவிடுவது பெற்றோர்களின் அடுத்தகட்ட இலக்காக இருக்கிறது.

அடுத்து, தன் பிள்ளை அதிக மதிப்பெண் பெற்றதை உறவினர்கள் மத்தியில் சொல்லிக் கொள்வதை பெருமையாக நினைக்கும் பெற்றோர், அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள். இதனால் மாணவர்களுக்குதான் அழுத்தம் அதிகமாகிறது. தாங்கள் குறைவாக மதிப்பெண் எடுத்தால் தங்கள் பெற்றோருக்கு அவமானமே என்று நினைத்து கவலை கொள்கிறார்கள்.
 
இந்த பொதுத் தேர்வு எழுதும் வயது மிகவும் குழப்பமான பதின்பருவத்தில் வேறு அமைந்துவிடுகிறது. உடலியல், உயிரியல் சார்ந்த ஹார்மோன் கோளாறுகளும் சேர்ந்துகொண்டு மாணவர்களை பாடாய் படுத்துகிறது. அந்தப் பருவத்துக்கான மன அழுத்தத்தோடு, படிப்பு சார்ந்த அழுத்தமும் சேர்ந்து மனநல பாதிப்புகளுக்கு உள்ளானவர்களும் உண்டு.

மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் இப்போது பதற்றம் அடைய ஆரம்பித்துவிட்டார்கள். 9-வது வகுப்பில் அடியெடுத்து வைத்தவுடனேயே அடுத்த வருடத்துக்கான தயாரிப்பில் இறங்கிவிடுகிறார்கள். பள்ளி முடிந்து வந்ததும் ஒவ்வொரு பாடத்துக்கும் சிறப்பு வகுப்புகள். சாதாரணமாக 90, 80 என மார்க் வாங்கிக் கொண்டிருந்த குழந்தைகளும்கூட பதற்றத்தால் 60, 70 என எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

போகப்போக தேர்ச்சி அடைந்தால் போதும் என்ற நிலை வந்துவிடுகிறது. ‘எப்படியாவது பாஸ் செய்துவிடு, இல்லையென்றால், என்னால் வெளியில் தலை காட்ட முடியாது’ என்று பிள்ளைகளிடம் புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால் தேர்வில் மார்க் குறைந்தாலோ, தேர்ச்சி பெறாவிட்டாலோ அப்பா, அம்மாவுக்கு அவமானம் என மனதுக்குள் மிகவும் பயந்து தற்கொலை எண்ணத்துக்குச் செல்ல முற்படுகிறார்கள்’’ என்கிறார்.

இதில் பெற்றோருக்கான அறிவுரை என்ன?
‘‘படிப்பு ஒன்றுதான் வாழ்க்கை, மதிப்பெண் எடுத்தால்தான் எதிர்காலம் என்று சொல்வதை விட்டு, தன் பிள்ளைகளிடம் இருக்கும் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை அந்த வழியில் நடத்த வேண்டும். சாதாரணமாக அவனை படிக்க விட்டாலே ஓரளவு மதிப்பெண்
பெறுவார்கள்.

உதாரணமாக, வண்டி ஓட்டுபவரின் பின்னால் அமர்ந்திருப்பவர் இப்படி ஓட்டு, அப்படி ஓட்டு என்று சொல்லிக்கொண்டே வந்தால், பதற்றத்தில் முன்னால் வரும் வண்டிமீது இடித்துவிடுவார். அதுபோலத்தான் பிள்ளைகளும். முக்கியமாக மற்ற பிள்ளைகளோடு ஒப்பீடு செய்து பேசுவது தவறு. உன்னால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவு படித்தால் போதும் என்று ஊக்கப்படுத்துங்கள். டாக்டர், இன்ஜினியர் தவிர, இன்று புதிது புதிதான
பல்வேறு வேலை வாய்ப்பு நிறைந்த படிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

உங்கள் குழந்தைக்கேற்ற துறையில் படிக்க வைத்து முன்னேற்றலாம். படிப்பை மதிப்பெண் எடுப்பதற்கான ஒன்றாக பார்க்காமல் வாழ்க்கைக்கான படிப்பினையாக அறிவுறுத்துங்கள். இசை, நடனம், விளையாட்டில் வித்தியாசமானவற்றை கற்றுக் கொடுக்கலாம். அதை
விடுத்து, நீங்களும், உங்கள் பிள்ளைகளும் மதிப்பெண் பந்தயத்தில் ஓடவேண்டியதில்லை.’’மாணவர்கள் செய்யும் தவறுகள் என்?

‘‘வருடம் முழுவதும் படிக்காமல், கடைசி ஸ்டடி ஹாலிடேஸில் படித்துக் கொள்ளலாம் என்று மெத்தனமாக சிலர் இருக்கிறார்கள். இது தவறு. அதேபோல் தங்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்க வேண்டும் என்று குறைந்த மதிப்பெண்கள் வாங்குவது, பிடிவாதத்தை வெளிப்படுத்துவது எனவும் மாறிவிடுகிறார்கள்.

தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ளாதவருக்கே தேர்வு பயம் வரும். தேர்வு அறைக்குச் செல்லும் வரை படிப்பது, விடிய, விடிய படிப்பது, குரூப் ஸ்டடி என்ற பெயரில் அரட்டை போன்றவை. சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது, சிப்ஸ், ஜங்க் ஃபுட் என சாப்பாட்டு விஷயத்திலும் நிறைய தவறுகள் செய்கிறார்கள்.’’

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

‘‘ஆண்டு தொடக்கத்திலிருந்தே அனைத்து பாடங்களையும் அட்டவணை போட்டு படிக்க ஆரம்பித்து விடவேண்டும். தள்ளிப்போடாமல் அன்று நடத்திய பாடங்களை அன்றே படித்து விடுவது நல்லது.

சரியான தூக்கம் மிக அவசியம். தேர்வுக்கு முந்திய நாள் இரவில் கண்விழித்து படிப்பதால் தூக்கம் கெடும். தூக்கம் கெட்டாலே பதற்றம் அதிகரிக்கும். கடைசி நிமிடத்தில் பதற்றத்தோடு படிப்பது, படித்த அனைத்தையும் மறக்கச் செய்துவிடும். ஒரு பாடத்தில் தேர்வு முடிந்தவுடன் அதைப்பற்றி கலந்தாலோசிப்பதால் தேவையற்ற பயம் ஏற்பட்டு அடுத்த நாள் தேர்வு
எழுதுவதை பாதிக்கும்.

இடைவிடாது, தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால் மனச்சோர்வு ஏற்படும் என்பதால் தேர்வு சமயங்களில் எளிதான உடற்பயிற்சிகள், யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வதால் பதற்றத்தை குறைத்துக் கொள்ள முடியும். வினாத்தாளை பார்த்தவுடன் பயப்படுவதும் தவறு. முதலில் தெரிந்த வினாக்களுக்கு பதில் எழுத ஆரம்பித்துவிடுங்கள். எழுத, எழுத அனைத்து வினாக்களுக்கும் பதில் நினைவுக்கு வர ஆரம்பித்துவிடும். இறுதியாக...

மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அவர்கள் அனைவருமே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக இருப்பதில்லை. அதனால், தேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை. அதைத்தாண்டி எத்தனையோ சாதிக்க இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெற்றி உங்களுடையது!’’

- உஷா நாராயணன்