ஸ்ரீதேவியின் மரணம் கற்றுக் கொடுப்பது என்ன?!அஞ்சலி

வசீகர அழகு, அபார நடிப்பு, இனிய குணம் என்று எல்லோரின் இதயங்களிலும் இடம்பிடித்த ஸ்ரீதேவியைப் பற்றி, அப்படி ஓர் அதிர்ச்சி செய்தியோடு அந்த ஞாயிறு விடியும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

துபாய்க்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்த ஸ்ரீதேவி, தன்னுடைய ஹோட்டல் அறைக்குத் திரும்பிய நள்ளிரவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. அதிகம் ஃபிட்னஸ் கான்ஷியஸ் கொண்டவர் என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தவருக்கு மாரடைப்பா என்று எல்லோருமே குழம்பித்தான் போனார்கள்.

பவர் யோகா, கார்டியோ எக்ஸர்ஸைஸ், ஜாக்கிங், டென்னிஸ் என உடற்பயிற்சிகளில் தீவிரமாக இருந்தவர். உணவுக்கட்டுப்பாட்டிலும் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். 30 வருடங்களாக எண்ணெயில் பொரித்த உணவையே சாப்பிடுவதில்லை என்றும் கூறியிருந்தார் ஸ்ரீதேவி. அவருக்கா ஹார்ட் அட்டாக் என்று பலருக்கும் புரியவில்லை.

அன்று மாலையில் வந்த ரத்தப்பரிசோதனை முடிவில் அவர் ஆல்கஹால் அருந்தியிருந்தது தெரிய வந்தது. பார்ட்டி கலாசாரம் நிறைந்த பாலிவுட் உலகில் ஸ்ரீதேவி பற்றி அப்படி ஒரு தகவல் இதற்கு முன்பு வெளி உலகுக்குத் தெரிந்தது இல்லை. எனவே, மாரடைப்பால் உண்டான தடுமாற்றத்தில்தான் பாத்டப்பில் விழுந்து மரணமடைந்திருக்கக் கூடும் என்றுதான் ஸ்ரீதேவியின் தரப்பில் சொல்லப்படுகிறது.

சர்ச்சைகளையும், குழப்பங்களையும் தாண்டி ஆரோக்கியமான ஒருவருக்கு மாரடைப்பு சாத்தியமா என்று இதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜாய் தாமஸிடம் கேட்டோம்... ‘‘மாரடைப்பு யாருக்கும், எந்த நேரத்திலும் வரலாம்.

குறிப்பாக பரம்பரையில் யாருக்கேனும் இளவயதில் மாரடைப்பு ஏற்பட்டிருந்தாலும் வரக் கூடும். ஸ்ரீதேவிக்கு Sudden cardiac arrest ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன். Sudden cardiac arrest-ல் மூச்சுவிடுவது முற்றிலுமாக நின்றுபோகும். அதேநேரத்தில் சுயநினைவு தவறி, இதயம் எதிர்பாராமல் சட்டென்று செயலிழந்து போகும் நிலையும் உண்டாகும்.’’

விமானப் பயணமும் மாரடைப்புக்குக் காரணமாகுமா?!

‘‘நீண்ட தூர விமானப் பயணம் செய்பவர்கள் ஒரே நிலையில் உட்கார்ந்து இருப்பதால் காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு ஏற்படும். இதனை Deep Vein Thrombosis என்கிறோம்.

இந்த ரத்த உறைவினால் சிலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறு உண்டு. அந்த நேரத்தில் அறிகுறிகள் தெரியாவிட்டாலும், சிலநாட்கள் கழித்தும் ரத்த உறைவினால் கார்டியாக் அரஸ்ட் ஏற்படலாம். இதுதவிர நீண்ட நேர விமானப் பயணத்தின் காரணமாகவோ அல்லது ஆல்கஹால் உபயோகத்தினால் ஏற்படும் மூச்சுத்திணறல் காரணமாகவோ மாரடைப்பு ஏற்படலாம்.’’

ஸ்ரீதேவி எடுத்துக் கொண்ட அழகு சிகிச்சை காரணமாகவும் மாரடைப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறார்களே... அழகு சிகிச்சைக்கும் மாரடைப்புக்கும் சம்பந்தம் உண்டா?!‘‘கண்டிப்பாக உண்டு. ஏனெனில், இதுபோன்ற காஸ்மெட்டிக் அறுவைச் சிகிச்சையில் நரம்புகள் அறுபட வாய்ப்புகள் இருக்கிறது. அழகு சிகிச்சை நரம்புகளோடு சம்பந்தப்பட்டது என்பதால் வலியில் நோயாளிகள் கடுமையாக அவதிப்படுவார்கள். இவர்களுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக மனநிலை ஊக்கிகள்(Mood Elavators) கொடுக்கப்படுகிறது.

இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதும் மாரடைப்புக்கு ஒரு காரணமாகிறது.’’அழகு சிகிச்சைகள் செய்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார் தேவி என்று சொல்லலாமா?

‘‘மாடலிங், சினிமா போன்ற அழகு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு காஸ்மெட்டிக் சர்ஜரி அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், தற்போது நடுத்தர மக்களும் இதுபோன்ற அழகுக்கான அறுவை சிகிச்சைகளை செய்து கொள்வது சகஜமாகிவிட்டது. அந்தந்த வயதில் அந்தந்த வயதுக்கான இயல்புகளோடு இயற்கையாக இருப்பதே அழகு.

54 வயதில் 34 வயது போல் தோற்றமளிக்க வேண்டும் என்று இயற்கைக்கு எதிராக செய்யப்படும் எந்த ஒரு சிகிச்சையும் ஆபத்தானதே. எனவே, அழகு சிகிச்சைகள் மேற்கொள்கிறவர்கள் மிகுந்த கவனத்துடனும், பலத்த பரிசீலனைக்கும் பிறகு செய்துகொள்வதே நல்லது. அதன் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு விபரீத முயற்சிகளை கண்டிப்பாகத் தவிர்ப்பதே நல்லது.’’

- உஷா நாராயணன்