ஆயுளைக் கூட்டுமா கண்புரை சிகிச்சை?!



குழப்பம்

‘என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறியே’ என்கிற சத்யராஜ் மாதிரிதான் வாழ்க்கை பல நேரங்களில் குழப்பமாக இருக்கிறது. கண்புரை சிகிச்சை செய்து கொண்டால் பார்வைத்திறனுக்கு நல்லது என்பது புரிகிறது. ஆனால், அதுவே ஒருவரின் ஆயுளை நீட்டிக்கப் பயன்படும் என்றால் புரிகிறதா? அப்படித்தான் சமீபத்திய ஓர் ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவ துறை பேராசிரியர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவில், பார்வை குறைபாடுகளைச் சரி செய்வதற்காக, மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சை மூலமாக மனித இனத்தின் ஆயுள் நீடிப்பதாக கண்டறிந்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஸ்டெயின் ஐ இன்ஸ்டியூட்டில் பணியாற்றி வரும் டாக்டர் ஆனி எல். கோல்மேன் மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் பலர் கடந்த 20 வருடங்களாக மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.

இதற்காக, 65 வயதைக் கடந்த சுமார் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் எல்லோருக்கும் கண்புரை பாதிப்பு இருந்தது. இந்த மருத்துவ பரிசோதனைக்காக, தேர்வு செய்யப்பட்டவர்களில், கண் புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 40 ஆயிரம் பேருக்கு 60 சதவீதம் உயிரிழப்பு அபாயம் குறைவாக உள்ளதாகக் கண்டறியப்பட்டது.

‘‘கண்புரை என்பது எதிரே உள்ள நபர் மற்றும் பொருட்களைப் பார்க்க உதவும் கருவிழிகளில் மங்கலான தோற்றத்தையும், நிறமாற்றத்தையும் ஏற்படுத்தும். அது வெறுமனே பார்வை தொடர்பான பிரச்னையாக மட்டுமே அல்லாமல் ஆயுளை வளர்க்கவும் உதவுவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இதயநோய், பல நாளாக காணப்படும் நுரையீரல் அடைப்பு, நரம்பியல் கோளாறுகள் என்று பலவிதமான உயிரிழப்பு அபாயம் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்போது குறைகிறது.

உடல்நலக் கோளாறு ஒன்றை ஒன்று பாதிக்கக் கூடிய வலைப்பின்னல் போன்றது. அதனால், எந்தப் பிரச்னையையும் அலட்சி யமாக நினைக்கக் கூடாது’’ என்று கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.என்னமோ போடா மாதவா மொமண்ட்!

- வி.ஓவியா