தூக்கமின்மையும் மதுப்பழக்கமும் ஒன்றுதான்...



அதிர்ச்சி

மதுப்பழக்கம் எத்தனை தீங்கானது என்பது நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதே அளவுக்கான தீங்கினை சமீபகாலமாக அதிகரித்துவரும் தூக்கமின்மையும் உண்டாக்கிவருகிறது என்று அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தூக்கமின்மைக் கோளாறு உடல் மற்றும் மனரீதியாக என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். அதில்தான் இந்த பகீர் உண்மை தெரிய வந்துள்ளது. மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்புக்கு சமமான அளவிலேயே தூக்கக் குறைவாலும் பிரச்னைகள் ஏற்படுவதாக அந்த ஆய்வில் மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மேலும் இதன் மூலம் தூக்கப் பற்றாக்குறை அதிகம் உள்ளோர் விழித்திருக்கும்போது, மூளையின் சில பகுதிகள் மட்டும் தூக்கத்தில் ஆழ்ந்துவிடமற்ற பகுதிகள் விழித்திருக்கும் முரண்பாடான நிலையும் மூளையில் நிகழ்வதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான Nature இதழில் வெளியாகியுள்ளது.

அதனால், குடிகாரர்கள் மட்டுமே ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதாக நினைக்க வேண்டாம். தொடர்ச்சியாகத் தூக்கம் தொலைக்கும் ஒவ்வொருவருமே அதற்கு இணையான சீர்கேட்டைத்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். எனவே... ஒழுங்காக தூங்குங்க மக்களே..!

- கௌதம்