2018 கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்2018-ம் ஆண்டில் கவனம் பெறப் போகும் சில விஷயங்களைப் போலவே, கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன என்பதை வலியுறுத்தும் வகையில் நான்கு முக்கிய பிரச்னைகளை இங்கே குறிப்பிடுகிறார் வாழ்வியல் மேலாண்மை நிபுணர் கௌசல்யா நாதன்.

மனநலம்

என்னைப் பொறுத்தவரை வரும் ஆண்டுகளில் உடல்நலத்துக்கு கொடுக்கும் அனைத்து அக்கறைகளையும் மனநலத்துக்கும் கொடுக்க வேண்டும்.பணிசார்ந்த மன அழுத்தம், மனப்பதற்றம், தன் உருவத்தின் மீது வரக்கூடிய மன அழுத்தம், உணவு சீர்குலைவு போன்றவற்றால் தற்போது அதிகம்பேர் பாதிக்கப்படுகின்றனர்.

தவிர, கடந்த 10 வருடங்களாக சென்னை போன்ற இடங்களில் அடிக்கடி நிகழும் இயற்கைப் பேரிடர்களால் காரணமாகவும் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மக்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. இதில் சுற்றுச்சூழல் மாசும் முக்கிய காரணியாகிறது.

தனிக்குடும்ப முறையில் ஒரே குழந்தையாக வளரும் வீடுகளில் அந்த குழந்தை மீதே பெற்றோர் அதிக கவனம் செலுத்துகின்றனர். தன்னுடைய உடமைகளை பங்கிட்டுக் கொள்ள துணை இல்லாமல் வளரும் இந்தக் குழந்தைகள் பருவ வயதில் ஹார்மோன் மாற்றத்தினால் உடலளவிலும், உள்ளத்தளவிலும் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். தன்னம்பிக்கையை இழந்து, சமூகத்தின் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.

எனவே கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மனநலத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவது முக்கியம். வேலையாட்களின் பணிச்சுமையால் ஏற்படும் மனச்சோர்வுகளைப் போக்க ஓய்வு அறைகள், ஆரோக்கிய கல்வி மற்றும் மனநல மருத்துவர்களின் ஆலோசனை போன்ற ஆரோக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம்.

தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ வசதிகள், இலவச மருத்துவ காப்பீடுகளை வழங்கலாம். அடிப்படை சுகாதாரத்துக்கும் வழியில்லாத அல்லது தெரியாத கடைநிலை ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்காக மருத்துவ முகாம்களை நடத்தலாம். உலக சுகாதார மையத்தின் அறிவுரைப்படி, பல நாடுகள் ஏற்கனவே பணியிட ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

வளர்சிதை மாற்றம் பொதுவாக உடல்பருமனுக்கு நம்முடைய மெதுவான வளர்சிதை மாற்றத்தின் மீது பழி சொல்கிறோம். இது ஓரளவு உண்மைதான் எனினும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுக்கேற்ப, உடல்ரீதியிலான செயல்பாடுகளை செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் எடையைத் தீர்மானிக்கிறது.

ஒருவருக்கு உடல்பருமன், ரத்தக்கொழுப்பு, கெட்ட கொழுப்பு அதிகரிப்பு (LDL Cholesterol), உயர் ரத்த அழுத்தம் மற்றும் தொப்பை இந்த ஐந்துமோ அல்லது ஐந்தில் 2-க்கும் அதிகமாக இருந்தால் அதை வளர்சிதைமாற்ற சீர்குலைவு(Metabolic syndrome) என்கிறோம். காய்கறி, பழங்கள் குறைவாக எடுத்துக் கொள்வது, போதிய நீர் அருந்தாமை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது போன்ற பழக்கங்களே இந்த வளர்சிதைமாற்ற சீர்குலைவுக்கு முக்கிய காரணம்.

பெரும்பாலும் உடல் எடையை குறைப்பதற்காகவே ஜிம்முக்குச் செல்கிறோம் அல்லது உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். இது தவறான அணுகுமுறை. உடல் தசைகள், எலும்புகளுக்கு வலுவேற்றும் உடற்பயிற்சிகளில் (Strengthening exercises) அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கடுமையான உடற்பயிற்சிகளின் முழு பலன்களையும் பெறவேண்டுமானால் அதற்குப்பின்னான தளர்வு பயிற்சி களையும் கவனமாக செய்ய வேண்டும்.
குடல் ஆரோக்கியம்என்னதான் உடற்பயிற்சி, உணவு ஆகியவற்றின் மூலம் நாம் உடல் எடையை குறைக்க முயன்றாலும், பெருங்குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் அங்கு நச்சுப்பொருட்கள்(Toxins) தங்கிவிடும்.

செரிமான மண்டலத்தில் மிக முக்கிய உறுப்பு பெருங்குடல். குப்பை உணவுகள், புகை, மது போன்ற கெட்ட பழக்கங்களால் குடலில் விஷப்பொருட்கள் தங்கி, இன்று பெரும்பாலானவர்கள் மலச்சிக்கல், செரிமானமின்மை, குடலியக்கப் பிரச்னைகளுக்குள்ளாவதை பார்க்கலாம்.

குடலை சுத்தம் செய்யும் புரோபயாடிக் உணவுகள், பழச்சாறுகள், கீரைகள், முளைவிட்ட தானியங்கள், எலுமிச்சை, க்ரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளிலும், பழக்கங்களிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல்கூடிய வரை பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தேக்கத்தால் மனிதனுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அதனால் ஏற்படும்  நோய்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, அவற்றின் உபயோகத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அரசாங்கமும் முழு முயற்சியில் இறங்கியுள்ளது.

சுற்றுப்புறத்தூய்மை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் நடவடிக்கைகளிலும் இந்த அமைப்புகள் செயல்படுகின்றன. வாகனப்புகையால் ஏற்படும் காற்று மாசைத் தடுக்க பல்வேறு நாடுகள் வாகன உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகின்றன. டெல்லியில் ஏற்கனவே அபாய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை போன்ற பெரு நகரங்களும் அதுபோன்ற சூழலை எட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.

கொசு உற்பத்தியால் மலேரியா, டெங்கு நோய் பரவுவதை தடுக்க அரசாங்கமே அபராதத் தொகை வசூலிக்கிறது. இது ஒரு நல்ல முன்னுதாரணம். இந்த விஷயத்தில் மக்களும் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். சுற்றுப்புறத் தூய்மையில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய ஆண்டாகவும் 2018 இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும்.

- என்.ஹரிஹரன்