காற்று மாசு காரணமாக விடுமுறை



செய்திகள் வாசிப்பது டாக்டர்

சுற்றுச்சூழல் மாசு எத்தனை விபரீதமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கான சமீபத்திய உதாரணம் இது. தமிழகத்தில் மழை வரும்போது பள்ளிக்கு விடுமுறை விடுவதுபோல, டெல்லியில் காற்று மாசு காரணமாக சமீபத்தில் 3 நாட்கள் விடுமுறை அளித்திருக்கிறார்கள்.

கடந்த நவம்பர் முதல் தேதியன்று காற்றின் தரக்குறியீட்டு எண் 500க்கு 448 என்ற மோசமான அளவில் இருந்தது. இதனால் பொது சுகாதார அவசர நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து டெல்லி அரசு உத்தரவிட்டது.

காற்றின் தரம் மிக மோசமான அளவை எட்டியுள்ளதால் மூச்சுத்திணறல் போன்ற சுவாசக் கோளாறு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக பள்ளிக்குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவும் வானிலை மையத்தின் தகவலை மேற்கோள்காட்டி இந்திய மருத்துவ கவுன்சிலும் எச்சரித்தது.

பொது மக்களையும் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனால் Air Mask, Air Purifier போன்ற பாதுகாப்பு உபகரணங்களின் விற்பனை 3 மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல ஆய்வறிக்கைகள் முன்பே தெரிவித்திருந்தன.

சென்னையிலும் தீபாவளியன்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாசு குறித்து பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், அதிகபட்சமாக சௌகார்பேட்டையில் 777 மைக்ரான் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக தெரிய வந்தது.

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லியிலும், சென்னையிலும் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியிருப்பதாக வெளியாகியிருக்கும் இந்த நிலை பெரும் கவலைக்குரியது. அரசு, பொதுமக்கள் இரண்டு தரப்பும் ஒருங்கிணைந்து காற்று மாசினைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசர, அபாய நேரம் இது.

- என்.ஹரிஹரன்