அன்பு விசுவாசம் நன்றி... நாய்களின் உளவியல்தான் என்ன?!செல்லமே செல்லம்...

‘அதுக்கும் மேல’ என்ற ‘ஐ’ படத்தின் வசனத்தைப் போல மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே உள்ள உறவு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. வனாந்திரங்களில் தங்களின் வாழ்க்கையைத் தொடங்கிய மனித இனம், விலங்குகளுடன் உறவாடித்தான் தொடங்கியது.

விவசாயம் கற்று, நாகரிகமடைந்த பிறகு ஒரு சில விலங்குகள் மட்டுமே வீட்டுப்பிராணிகளாகவும் தங்கியது. அவற்றில் மனிதன் மீது அதீத அன்பும், விசுவாசமும் கொண்டவையாக நாய்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றன. இப்போதும் நன்றி, விசுவாசம் என்பதற்கு அடையாளமாகச் சொல்லப்படுபவையாகவே இருக்கின்றன நாய்களின் இனம்.

சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த தம்பதியினரின் நாய் ஒன்று தொலைந்துபோனதும், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுடன் சென்று சேர்ந்ததும் நெகிழ்ச்சியூட்டும் செய்தியாக ஊடகங்களில் வெளிவந்தது.

இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்... கண்டிருக்கிறோம்... அன்பு, விசுவாசம், நன்றி என்று மனிதர்களிடம் ஒட்டி உறவாடும் நாய்களின் உளவியல்தான் என்ன?உளவியல் மருத்துவர் லீனா ஜஸ்டினிடம் கேட்டோம்...

‘‘நாய்களின் அன்பினையும், விசுவாசத்தையும் நிரூபிக்கும் பல நிஜ நிகழ்வுகள் எண்ணற்றவை.ஜப்பான் நாட்டு டோக்கியோவில் ‘ஹச்சிகோ’ என்ற நாய்க்கு சிலை வைத்துள்ளார்கள். எதற்கு தெரியுமா?

எஜமானர் ஈஸாபூரோ யுனௌவை நாள்தோறும் அவர் வேலைக்கு செல்லும்போது கூடவே ரயில் நிலையம் வரை சென்று வழியனுப்பிவிட்டு, திரும்பவும் மதியம் அவர் வரும் நேரத்துக்கு சரியாகச் சென்று அழைத்து வருமாம். ஒரு நாள் பணியிடத்திலேயே தன் எஜமான் மாரடைப்பால் இறந்துவிட்டதை அறியாத ஹச்சிகோ, வழக்கமாக தன் எஜமானரை கூட்டிச்செல்ல வரும் நேரத்தில் ரயில் நிலையத்தில் காத்திருந்ததாம்.

அவர் வராததால் ஏமாற்றமடைந்து வீட்டுக்கு சென்றுவிட்டதாம். ஆனால், 10 வருடங்களாக தொடர்ந்து, அது இறக்கும் வரை ரயில்நிலையத்துக்கு காலையிலும், மாலையிலும் வந்து காத்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டதாம்.

ஹச்சிகோவின் விசுவாசத்தை உலகறியச் செய்வதற்காக ஜப்பான் அரசு டோக்கியோ ரயில் நிலையத்துக்கு அருகில் அதற்கு சிலை எழுப்பியுள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற ஹச்சிகோவின் கதை பல மொழிகளில் படமாக்கப்பட்டதோடு, டோக்கியோவில் அதற்காக ஒரு மியூசியமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஊர் விட்டு போகும்போது உடன் கூட்டிச்செல்ல இயலாததால் விட்டுச் செல்லப்பட்ட ஒரு நாய் பல கிலோமீட்டர்கள் ஓடி வந்தே தன் எஜமானனை கண்டுகொண்டது. ‘இறந்த தன் எஜமானனுக்காக விபத்து நடந்த இடத்தில் வருடக்கணக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு நாய்.’நாய்கள், மனிதனோடு தங்கள் வாழ்வை பகிர்ந்து கொள்ளத் துவங்கிவிட்ட அபூர்வ இயல்பை, 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித குடியேற்றங்களுக்கு அருகே அவற்றின் எலும்புகள் புதைக்கப்பட்டிருந்தை நிரூபிக்கும் தொல்பொருள் ஆய்வுச் சான்றுகள்
உணர்த்துகின்றன.

ஓநாயின் பரிணாம வளர்ச்சியான நாயை, மனிதன் வீட்டுப் பிராணியாக வளர்க்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அவனுடனான அதன் விசுவாசம் ஆரம்பித்துவிட்டது. ‘இந்த இரண்டு இனங்களுக்கிடையேயான பிணைப்பு, வேறு எந்த உயிரினங்களிடமும் இல்லாத ஒன்று’ என்பதையும் ஆய்வாளர்கள் வலியுறுத்திச் சொல்கிறார்கள்.

‘நாய்கள், எப்படி மனிதனின் உடல்மொழி, வார்த்தைகள், முக பாவனைகளை உணர்கின்றனவோ, அதேபோல், மனிதனும் நாய் ஏற்படுத்தும் ஒலிகளை வைத்தே அதன் உணர்வுகளை கண்டுகொள்கிறான்’ என்கிறது மற்றொரு ஆய்வு.

தங்கள் உரிமையாளரின் வருகையை எதிர்பார்க்கும் குணத்தினை சுமார் ஆயிரம் நாய்களிடம், மேற்கொண்ட உயிரியலாளரான ரூபர்ட் ஷெல்ட்ராக்,  ‘ஒரே ஒரு நாயிடம் 100 முறை அதன் நடவடிக்கைகளை வீடியோக்களாக பதிவு செய்து பார்த்திருக்கிறார்.

அதன் எஜமானர் வீட்டுக்குக் கிளம்பத் தயாராகும் நொடியிலிருந்தே ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு அவரின் வருகையை எதிர்பார்க்கத் தொடங்கிவிடும். அந்த நாயை அவரின் சகோதரி வீட்டில் வைத்து சோதித்த போதும் அதேபோல காத்திருந்தது.

இந்த சோதனை மனிதனுக்கும், நாய்களுக்கும் இடையே வலுவாக இருக்கும் டெலிபதி உணர்வுகளை உணர்த்துகிறது. ‘மனிதனின் சுயநலம் மற்றும் தாராள மனதுக்குமான வேறுபாட்டை நாய்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுகின்றன.

எஜமான் தன் உறவுகளை எப்படி நடத்துகிறானோ அதே முன்னுரிமையை தன்னிடத்திலும் எதிர்பார்க்கின்றன. தன் வீட்டாரின் மகிழ்ச்சி, கோபம், சோகம் என அத்தனை உணர்வுகளையும் ஒரு மனிதனைப்போலவே நாய்கள் உணர்பவை’ என்கிறார் நாய்களின் மூளையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஆராய்ந்த
டாக்டர் ஸ்டான்லிகோரன்.

‘நாம் கொடுக்கும் எலும்புகளுக்காகவும், உணவுகளுக்காகவும்தான் நாய்கள் வாலை ஆட்டுவதாக நாம் நினைக்கிறோம். ஆனால், உண்மை அது இல்லை. நம்முடைய அன்புக்காக மட்டுமே அவை விசுவாசத்தை காட்டுகின்றன’ என்ற உண்மையை இந்த ஆய்வில் இவர் கண்டறிந்துள்ளார்.

மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையேயான புரிதல், ஒழுங்குமுறை, விசுவாசம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டிருப்பதை இதுபோல், தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் எண்ணற்ற ஆய்வு முடிவுகள் நிரூபித்து வருகின்றன.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, அமெரிக்க உளவியலாளரான ஜுலி அக்சல்ராட் ஆஸ்டின் நாய்களுடனான மனிதனின் பிணைப்பைப்பற்றி சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், ‘உறவின் பிரிவைக்காட்டிலும், தன்னுடைய செல்ல நாயின் பிரிவு மனிதனுக்கு வலி மிகுந்தது’ என்கிறார்.

நாய்கள் தன்னிடம் காட்டும் அன்பையும், விசுவாசத்தையும் மனிதன் மிகவும் விரும்புகிறான், தனது சிறிய உதவிக்கு அந்த வாயில்லா பிராணி காட்டும் அங்கீகாரத்தை மனிதனின் மனம் மிகவும் ரசிக்கிறது. ஏன் மனிதர்களுக்கு நாம் செய்யும் உதவிக்கு அவர்கள் நன்றி காட்டுவதில்லையா என நினைக்கலாம். பாம்பின் கால் பாம்பறியும் என்பதை போல நம்மிடம் உதவி பெற்றவர்கள் மனநிலையை நாம் கணித்து விடுவதுடன், பிரதியுபகாரம் எதிர்பார்த்தே நாம் ஒன்றை செய்வோம்.

தானம் செய்யும்போதும் மறுமையின் பயனைத்தானே எதிர்பார்க்கிறோம். செல்ல பிராணிகளிடம் காட்டும் அன்பு அப்படியானதல்ல. நம் உணர்வுகளின் வடிகால் அது. பொதுவாகவே நாய்களின் சுபாவத்தில் கலந்துவிட்ட உணர்வுதான் இந்த விசுவாசம் என்பதை நாம் அறிவோம் என்றாலும் இதன் பின் உள்ள உளவியல் மிகவும் சுவாரஸ்யமானதாகவே உள்ளது.

நாய்களின் மேல் அவ்வளவு விருப்பம் இல்லாதவர்களும் கூட அதன் அன்பை, தன் எஜமானர்களின் மேல் அது காட்டும் விசுவாசத்தை மறுக்க மாட்டார்கள். எவ்வளவு வெறுப்பைக் காட்டினாலும் கொஞ்சம் செல்லமாக அழைத்தால், வாலைக் குழைத்து கொண்டு அவை நம் மேல் தாவி கொள்ளும்.

நமக்கு இது தான் வேண்டும். நம் கோபத்துக்கு எதிர் கோபம் காட்டாத உறவு வேண்டும். எனவேதான் காலங்காலமாக இந்த நாய்கள் நமக்கு செல்ல பிராணிகளாக மாறிப்போனது. நாய்களுக்கும் மனிதனுடைய இந்த பரிவும், பராமரிப்பும் கிடைக்காத ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு நாயிடம் இன்னொரு நாய் மனிதனைப் போல் பரிவு காட்டுவதில்லை. உணவிடுவதில்லை. மாறாக ஒருவித போட்டி மனப்பான்மையுடன் அவை தம் இருப்பிடத்தை, இணையை, இரையை மையமாக வைத்து சண்டையிட்டுக் கொள்கின்றன.

தன் இனம் சாராத ஒருவராயினும் வேலைக்கு உணவிடுவதும், பராமரிப்பதுமாக இருக்கும் மனிதனை இனம் தாண்டி நேசிப்பதற்குப் பின் உள்ள மிக முக்கிய உளவியல் காரணம் அவன் சக நாய்களை போலொத்த குணாதிசயத்துடன் இல்லை என்பதுதான்.

மனிதன் மட்டுமென்ன அவனுக்கும் இதுதான் நாய்களை பிடித்து போக காரணம். அவை மனிதனை போலன்றி ஏதும் எதிர்பார்ப்பின்றி நேசிக்கிறது. அன்பு மட்டுமல்ல தன் எஜமானருக்காக உயிரையும் கூட தருவதற்கு அவை துணிகிறதே அந்த விசுவாசம் உண்மையில் மனித இனத்தில் இன்று இல்லாத ஒன்றுதான்!’’

- என்.ஹரிஹரன்