இந்தியர்களிடம் அதிகரிக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு



இந்தியர்களில் 15 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் பி 12 வைட்டமின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேற்கத்திய உணவு கலாசாரத்தால் நார்ச்சத்துள்ள பொருட்களின் நுகர்வு பெருமளவு குறைந்திருப்பதும், அதிக அளவு மதுப்பழக்கமும் இதற்கு முக்கிய காரணம்’ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

டி.என்.ஏ., நரம்பு மற்றும் ரத்த அணுக்கள் உருவாக உதவுகிற அதிகார மையமாக உள்ளது வைட்டமின் பி12. இது மூளை, நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும்போது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து அனீமியா என்கிற ரத்தசோகை ஏற்பட வழிவகுக்கிறது. மேலும் நரம்பு செல்கள் மற்றும் அதன் செயல்திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேலானவர்களுக்கு செரிமான பிரச்னைகள் ஏற்படுகிறது.

வளர்கிற குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு மண்டலத்திலும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது பி12 குறைபாடு. இந்த சத்து குறைபாட்டை முட்டை, பால், இறைச்சி போன்ற பிற விலங்கு சார்ந்த உணவுப் பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தவிர்க்கலாம். மதுப்பழக்கமும், துரித உணவுக்கலாசாரமும் உணவிலிருக்கும் வைட்டமின் பி 12 நமக்குக் கிடைப்பதைத் தடை செய்கின்றன என்பதால் அவற்றைத் தவிர்ப்பதும் அவசியம்.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் ஊசிகள், மாத்திரைகள் அல்லது கூடுதல் சிகிச்சைகள் போன்றவற்றின் மூலமும் சரிசெய்து கொள்ளலாம். பி12 குறைபாடு கொண்டவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

- க.கதிரவன்