அனிதாக்களை காப்பாற்றுங்கள்!



மனசு.காம்

உலகத்தைப் பற்றிய எதிர்மறையான பார்வை, எதிர்காலத்தைப் பற்றிய எதிர்மறையான பார்வை, நம்மைப் பற்றியே எதிர்மறையான நம்பிக்கையில்லாத எண்ணங்கள்... இந்த மூன்று எண்ண ஓட்டங்களும் அளவுக்கு அதிகமாகப் போகும்போது கடுமையான மனச்சோர்வு(Major depressive disorder) என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு அதன் உச்சகட்டமாகத் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்குப் பலரும் வருகிறார்கள்.

இந்த மூன்று விஷயங்கள் சேர்ந்த முக்கோணத்துக்கு Beck’s cognitive triad of depression என்று பெயர். அரியலூர் மாணவி அனிதாவின் துர்ப்பாக்கியமான தற்கொலையில் இவை மூன்றும் அளவுக்கு அதிகமாகி விட்டன.

சமூகமும் அரசியல் சூழலும் தனக்கு எதிராகிவிட்டன என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கி விட்டிருந்து இருக்கலாம். அரசின் கொள்கை, அதைத் தொடர்ந்த குழப்பங்கள். நியாயங்களைச் சொல்லிப் போராட பல வழிகள் இருக்கின்றன. அனிதாவும் அப்படித்தான் போராடியிருக்கிறார். ஆனாலும், ஒரு கட்டத்தில் இனி தனக்கு எதிர்காலமே இல்லை.

அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்ற நம்பிக்கையின்மையும், நான் மதிப்பிழந்து விட்டேன் என்ற சுயமதிப்பீட்டிழப்பு நிலையிலும்தான் பல அனிதாக்கள் தமக்கு அறியாமலேயே தவறுசெய்து விடுகிறார்கள்.

கல்லூரி வாயிலில் இருக்கும், பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் உளவியலை தீவிரமாக, மிகத் தீவிரமாக நாமனைவரும் அணுக வேண்டிய சூழ்நிலை இது. மதிப்பெண்களை உண்டாக்கும் தொழிற்கூடங்களாகப் பள்ளிகள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்நிலையில் மாற்றம் வேண்டும்.

ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி... மாணவி தற்கொலை… பள்ளியில் கூடுதல் தேர்வுகள்... மன அழுத்தம் தாங்காமல் மாணவர் மனநிலை பாதிப்பு... போன்ற செய்திகள் அதிகரித்து வருகின்றன. ப்ளஸ் டூ-வில் தோற்றால் வாழ்க்கையே போய் விட்டது.

தன்னுடைய கனவுப்படிப்பு படிக்க இடம் கிடைக்காவிட்டால் வாழவே வழியில்லாமல் போய் விடும் என்பன போன்ற சிந்தனைகளில் சிக்குண்டிருக்கும் மாணவர்களை உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தவும் வாழ்வின் விஸ்தீரணத்தை அவர்களுக்கு உணர்த்தி, பல்கிப் பெருகிய வாழும் வழிகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய போர்க்கால நெருக்கடியிலும்தான் இன்று நாம் இருக்கிறோம்.

தற்கொலை செய்துகொள்பவர்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதுஉண்மைதான். ஒரு புள்ளிவிபரம்... உலகம் முழுவதும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உலகின் மொத்த இறப்பு விகிதத்தில் 1.4 சதவிகிதம் இது. குறிப்பாக, வறுமையான மற்றும் மத்திய தர நாடுகளில் 75 சதவீதம் தற்கொலைகள் நடக்கின்றன.

இதில் இந்தியாவில் ஆண்டுக்கு 1,35,000 பேர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். தற்கொலை செய்துகொள்வோர் அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம்(12.5 %), இருக்கிறது. இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரம் (11.9 %), மூன்றாம் இடத்தில் மேற்கு வங்கம் (11 %) இருக்கிறது.

குறிப்பாக, தாங்க முடியாத மன அழுத்தத்தில் நிறைய மாணவர்கள் இருப்பது தற்கொலைக்கு முக்கியக் காரணம். ஒருபக்கம் பெற்றோர் அளிக்கும் அழுத்தம், மறுபக்கம் ஆசிரியர்களின் அழுத்தம் என்று எல்லா பக்கமும் அவர்களை ஓட ஓட விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இளம் பருவ வயதில் இருக்கும் அவர்களுக்கு இருக்கும் உளவியல் ரீதியான உபாதைகள் என்ன என்பதை உட்கார்ந்து கேட்கும் பொறுமை யாருக்குமே இல்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னை சந்திக்க வந்திருந்தார் பத்திரிகை நண்பர் ஒருவர்.

கல்லூரியின் கழிப்பறை விட்டத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவனின் படத்தை தன்னுடைய மொபைலில் இருந்து காட்டி மிகவும் மனம் உடைந்து பேசினார்.

அந்த மாணவனின் பெற்றோரின் கனவு எல்லாமே கயிற்றில் தொங்கி இறந்துவிட்டன. இந்தியாவின் வருங்கால தூண்களில் ஒன்று ஒன்றுமில்லாமல் போய்விட்டது. ஒரு காதலியின் முன்னாள் காதலனாக இருந்தவர் இன்று உயிரோடு இல்லை. ஆம், வழக்கம்போல் இதற்குக் காரணம் காதல் தோல்விதான்.

இருவரும் வெவ்வேறு சாதியினர். வீட்டில் பேசியிருக்கிறார்கள். சரிப்பட்டு வரவில்லை. பெண் வீட்டில் உடனடியாக மாப்பிள்ளை பார்த்து இரு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து அனுப்பி வைத்துவிட்டார்கள். இரண்டு நாட்களாவே அந்த மாணவர் கடும் மனச்சோர்வில் இருந்திருக்கிறார். ஒருவேளை தகுந்த கவுன்சிலிங் கொடுத்திருந்தால் நிச்சயம் காப்பாற்றி இருக்கலாம்.

பதின்ம வயதில் காதல் தோல்வி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி அதிகபட்ச மன அழுத்தம் தரக்கூடிய ஒன்றுதான். உலகமே நம் முன்னால் வெறுமையாகிப் போனது போலத்தான் இருக்கும். தாங்க முடியாத ஒருவித சோகம் தாக்கி தற்கொலை எண்ணங்கள் சர்வ சாதாரணமாகத் தோன்றும். சரியான நேரத்தில் அந்த மாணவருக்கு உளவியல் ஆலோசனை கிடைத்திருக்க வேண்டும்... என்ன செய்ய?

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு மனப் பிணிகளை எப்படிக் கண்டறிவது என்பது பற்றிய பயிற்சி வகுப்புகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும். வெறுமனே பாடம் சொல்லி கொடுப்பதோடு ஆசிரியர்களின் கடமை முடிந்துவிடக் கூடாது.

படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவர்களை தனியாக அழைத்து விசாரித்து உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய முயல வேண்டும். பல மாணவ, மாணவியர் தகுந்த வழிகாட்டுதலின்றி வீட்டு பிரச்சினைகள் முதலான பல பிரச்னைகளால் ஏகப்பட்ட மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

நியாயமாகப் பார்த்தால் ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் உளவியல் ஆலோசகரை நியமனம் செய்ய வேண்டும். செயல்திறன் மந்தமாக இருக்கும் மாணவர்கள் வகுப்பாசிரியர்களால் அடையாளம் காணப்பட வேண்டும்.

அவர்களுக்கு உளவியல் ஆலோசகரின் கவுன்சிலிங் தேவை. அந்த மாணவரை முழுவதுமாக விசாரித்து விஷயத்தின் அடிவேர் வரை சென்று பார்த்தால்தான் அவரது மனச்சோர்வு, மனப்பதற்றம் இவற்றுக்கான  காரணங்கள் புரியும்.

 பெரும்பாலான சமயங்களில் படிப்படியான கவுன்சிலிங்கே இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க உதவும். அப்படியும் முடியாவிட்டால் மன நல மருத்துவரிடம் அனுப்பி வைக்கலாம். வாரந்தோறும் உளவியல் ஆலோசகரால் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி என்பது குறித்து Stress management வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும்.

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க ஓர் உளவியல் மருத்துவராக என்னுடைய ஆலோசனைகள் இவை. மாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சி.

*எட்டாம் வகுப்பு முதலே மாணவர்களின் மனநலனைக் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டும்.

*மனப்பாடம் செய்து ஒப்புவித்து மதிப்பெண்கள் பெறும் முறையை ஊக்குவிக்காமல் புரிந்து படித்து தர்க்க ரீதியாக பாடங்களை அணுகித் தேர்வை சந்திக்கத் தயார் படுத்த வேண்டும்.

*போட்டித்தேர்வுகளை அணுகும் முறை வேறாகவும் பள்ளிகளில் போதிக்கப்படும் முறை வேறாகவும் இருப்பதுவும் மாணவர்களின் சிரமத்துக்குக் காரணமாக இருக்கலாம். இதை சீரமைக்க ஆவண செய்ய வேண்டும்.

*அடுத்தவரைப் பார்த்து விருப்பப்பாடங்களைத் தேர்வு செய்வதையும் மற்ற மாணவர்களோடு ஒப்பீடு செய்து மன உளைச்சலுக்கு ஆளாவதையும் பெற்றோரும் சரி மாணவர்களும் சரி உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

*அடுத்தவரது சட்டையும் காலணியும் உங்களுக்குச் சரி வராது என்ற எளிமையான உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

*ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான திறமை உண்டு. இந்த உலகத்தில் உங்கள் கைரேகை வேறு யாருடைய ரேகையோடும் ஒத்துப் போகாது. உங்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு தனித்திறமை உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது.

அந்தத் திறமையைக் கண்டறிந்து அதில் நம்மை முழுக்க ஈடுபடுத்திக் கொள்ளும்போது வெற்றியின் உச்சங்களை லாவகமாகத் தொடலாம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக வாழ்க்கையில் பாதியைக் கடக்கும் வரையில் நமக்கே நம் திறமை பிடி படாமலேயே போய் விடுகிறது.

*தனித்திறமையை வளர்த்தெடுக்க பெற்றோரும் மற்றோரும் முன்வரும்போது அசாத்தியமான ஒரு  போட்டிச் சூழல்  குறையய்ப்புள்ளது.போட்டிகள் அதிகமாகத் தானே அதிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்வுகளும் அதுசார்ந்த உத்திகளும் கடினமாகிக் கொண்டே வருகின்றன.

*அரதப் பழசான வரலாற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் கொஞ்சமாவது மாணவர்களின் சுயமுன்னேற்றம் சார்ந்த படிப்பினைகளுக்குத் தர வேண்டும். வெற்றியின் உண்மையான அழகையும் அந்த வெற்றிக்கான பாதையில் பயணம் செய்வது எவ்வளவு சுவாரசியமாகவும் ஆத்ம திருப்தி அளிப்பதாகவும் இருக்கும் என்பதையும், வெற்றியாளர்களின் வரலாற்றைச் சொல்லியும், அவர்களையே பயிற்று விக்க அழைப்பதுமான காரியங்களைப் பள்ளிகள் செய்ய வேண்டும்.

*நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள் எண்ணற்ற நூல்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. இவற்றில் முக்கியமான சில புத்தகங்களையாவது மாணவர்கள் வாசித்தறியும் வாய்ப்பை நாம் தான் ஏற்படுத்தித் தர வேண்டும்.

*பரந்து விரிந்த உலகத்தைப் படித்து வெற்றிக்கொடி கட்டுவது என்பது வேறு. பாடப்புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கி மூச்சு முட்டிக்கொண்டிருப்பது வேறு என்ற வித்தியாசத்தை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

*ஒரு மாணவருக்கு உளவியல் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எள்ளளவு ஆசிரியர்களுக்கு வந்தாலும் அம்மாணவரை உடனே தகுந்த மனநலப் பரிசோதனைக்கு ஆட்படுத்த வேண்டும். ஏராளமான அளவு பிரச்னைகள் ஆரம்பத்திலேயே கோளாறு கண்டறியப்பட்டால் சரியாக்கி விடக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம்.

மெல்ல, மிக மெல்லமாகத்தான் மனச்சோர்வு ஒருவரை ஆக்கிரமித்துப் பின் கொல்லும். அதற்கு முன்பாக அவரை மீட்டெடுக்க நிறைய அவகாசம் உள்ளது, அவற்றை பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம் என அனைவருமே நன்கு பயன்படுத்திக் கொண்டால் வருங்காலமேனும்  மாணவச்  செல்வங்களுக்குவலியற்ற ஒன்றாக அமையும்.

(Processing... Please wait...)