எடையை குறைக்க வேண்டுமா? மரபணுக்களிடம் கேளுங்கள்…



டயட் டைரி

21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது உடல்பருமன். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஒரு சுமையாகவே உருவெடுத்திருக்கிறது. உடல்ரீதியான ஒரு தனிப்பட்ட சிக்கலாக மட்டுமல்லாமல் வேறு சில பிரச்னைகளை(Co-morbidities) அதிகரிக்கவும் பருமன் காரணமாகிறது என்பது கவலைக்குரிய செய்தி.

நீரிழிவு, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் மற்றும் சிலவகை புற்றுநோய்களை வரவழைக்கக்கூடிய காரணியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது பருமன். மாறி வரும் நம்முடைய வாழ்க்கை முறையானது உடல் பருமனை அதிகரிப்பதுடன், Obesogenic சூழலையும் உருவாக்கியுள்ளது.

சமீபத்திய ஆய்வுகளில், BMI(Body Mass Index)-ன் மாறுபாட்டுக்கும், நம்முடைய மரபணுவுக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. நம்முடைய மரபணுக்களைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம், எவ்வகையான உணவை உட்கொண்டால், உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம் என்பதை அறிந்துகொள்வதற்கும், மூலக்கூறு நெறிமுறைகளை சீர் செய்வதன் முறையை தெரிந்துகொள்வதற்கும் மரபணு அணுகுமுறைகள் வழிவகுக்கின்றன.

ஒல்லியான மற்றும் பருமனான தனி நபர்களுக்கிடையே மரபணுக்கள் வேறுபடுவது எப்படி என்பதை புரிந்து கொள்ளஇந்த மரபணு ஆய்வு உதவுகிறது.

குறிப்பாக, மூளைக்குள் இருக்கும் பல வழிகள், உணவு உட்கொள்ளல் மற்றும் உணவு கட்டுப்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை கடந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மரபியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. நம்முடைய மூளைப்பகுதியில் அமைந்திருக்கும் லெப்டின் - மெலனோகோர்டின் Signaling pathway நம்முடைய பசி மற்றும் நிறைவுத் தன்மைக்கு வழிவகுக்கிறது.

இந்த அமைப்பை MC4R, LEP போன்ற மரபணுக்கள் கட்டுப்படுத்துகிறது. ஆகையால், உங்கள் மரபணுக்களை தெரிந்துகொள்வதன் மூலம் நீங்கள் அதற்கேற்றவாறு உணவு உட்கொண்டால், உங்கள் பசித்தன்மையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.LEP GENE, LEPTIN ஹார்மோன் எவ்விதம் நம் எடையைக் கட்டுப்படுத்துகிறது என்றும் தெரிந்துகொள்வோம்...

லெப்டின் என்பது கொழுப்பு செல்களில் செய்யப்படும் ஒரு புரதம். இது ரத்த ஓட்டத்தின் மூலம் மூளைக்குச் செல்கிறது. லெப்டின் என்பது, உங்கள் கொழுப்பு செல்களில் போதுமான அளவு ஆற்றல் சரியாக இருக்கிறது என்று மூளைக்கு சொல்லும் ஒரு Messenger என்றும் புரிந்துகொள்ளலாம். இவ்வாறு சொல்லும்போது நாம் சரியான உணவு உண்டவுடன், நிறைவடைவதற்கான சமிக்ஞையை அனுப்புகிறது. ஆனால், ஒவ்வொருவடைய Leptin அளவும் மரபணு வித்தியாசங்களால் மாறுபடுகிறது.

உங்களில் பலருக்கு இந்த கேள்வி வரலாம். Leptin ஒரு தெர்மோஸ்டார்ட் போல் வேலை செய்தால் நாம் எடை கூடுவது ஏன்?

அதிக எடை கொண்டவர்களுக்கு லெப்டின் அதிகமாக இருக்கும், ஆனால், சாப்பிடுவதை நிறுத்துவதற்கான முக்கிய சிக்னலை அவர்களுடைய மூளை பெறுவதில்லை. இதை லெப்டின் எதிர்ப்பு(Leptin Resistance) என்று கூறுகிறோம்.

லெப்டின் எதிர்ப்பு என்பது...

பொதுவாக, உணவு அதிகம் உட்கொள்வதை லெப்டின் ஹார்மோன் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், நிறுத்தாத நிலையினாலேயே உணவு அதிகம் உட்கொள்கிறோம். இதுவே கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

இந்த அதிக கொழுப்பு செல்களிலிருந்து Leptin உருவானாலும் செயல்படுவதில்லை. இந்த Leptin resistance காரணமாக உணவு உட்கொள்வதை கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால், உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவே உடல்பருமனுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

லெப்டின் அளவை மேம்படுத்துவதற்கான உணவுகள் ஒமேகா-3 உள்ள மீன்கள், ஓட்ஸ், தயிர், க்ரீன் டீ, பாதாம், ப்ரோக்கோலி, முட்டை, பழங்கள் - தர்பூசணி, பெர்ரி வகைகள், ஆப்பிள், திராட்சை, பால், மஞ்சள், எள், சுருள்பாசி போன்றவை Leptin sensitivity-ஐ மேம்படுத்த உதவும்.
Leptin Gene போல் 300-க்கும் மேற்பட்ட மரபணுக்கள் நம் உடல் எடையை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகுக்கின்றன.

நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் இந்த உடல் பருமன் பிரச்னை இந்த அளவுக்கு இல்லையே! மிகக் குறைவாகவே காணப்பட்டது ஏன்? நம்முடைய உணவு முறைகள், வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக, மரபணுக்களின் செயல்பாடுகளும் மாறத் தொடங்கிவிட்டன. அப்படியா!உணவு பற்றாக்குறையை சமாளிக்கும் விதத்தில் நம் உடல் ஒரு செயல்பாட்டை உருவாக்கியுள்ளது.

உணவு ஏராளமாக இருக்கும்போது அதிக உணவை சாப்பிடுகிறோம். கூடுதல் கலோரிகள் கொழுப்பு வடிவத்தில் ஆற்றல் இருப்பாக சேமிக்கப்படுகின்றன. உணவு குறைவாக இருக்கும்போது குறைவாக சாப்பிடுகிறோம். நமது உடல், உயிரைக் காப்பாற்ற ஆற்றலுக்காக சேகரிக்கப்பட்ட கொழுப்பை எரிக்க ஆரம்பிக்கின்றன.

இந்த கொழுப்பு சேமிப்பு மற்றும் அணிதிரட்டல் செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள Thrifty Genes அல்லது சிக்கனமான மரபணுக்கள் என சுமார் 200 மரபணுக்கள் உள்ளன.இந்த மரபணுக்கள் முன்னர் உணவுப் பற்றாக்குறை பிரச்னைகளை சந்திக்க உதவுவதில் பரிணாம வளர்ச்சியாக இருந்தன. இருப்பினும் நவீன காலங்களில் அவை ஒரு சுமையாகி விட்டன. இன்றைய காலக்கட்டத்தில் உணவு பற்றாக்குறை என்பது அரிதாக காணப்படும் விஷயமாக மாறிவிட்டது.

நமக்கு அதிக அளவு உணவுகள் எளிதாக அணுகும் முறையில் இருக்கிறது. ஆகையால், நாம் அதிக கொழுப்புகளை நம் உடலில் சேகரிக்கத் தொடங்கிவிட்டோம். இதன் விளைவாக பலர் அதிக எடை மற்றும் பருமனாக மாறியுள்ளனர். இது டைப் 2 நீரிழிவு நோய் அதிகரிக்க வழி வகுத்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடல்பருமனால் வரும் ஆபத்தைக் குறைக்க உதவி செய்கிறது.

சில எளிய வழிமுறைகள்

*வயிறு முட்ட சாப்பிடுவது என்பது ஒரு தவறான உணவு முறை. சரியான நேரத்தில், சரியான அளவு உணவு உட்கொள்வதே முக்கியம்.

*சாப்பிடும்போது உணவை நன்கு மென்று உண்பது அவசியம். ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று உண்ணும்போது EP, Ghrelin போன்ற மரபணுக்கள் சிறப்பாக செயல்பட்டு உணவு செரிமானத்துக்கு உதவி புரிகிறது.

*கொழுப்பு மற்றும் எண்ணெய்களைத் தேர்வு செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும். FADS 1, APOA5 போன்ற மரபணுக்கேற்றவாறு எண்ணெய்களை தேர்வு செய்வது மிகச் சிறப்பாகும்.

*முட்டை, சோளம், ஆப்பிள், ப்ரோக்கோலி போன்ற உணவுகளில் காணப்படும் குரோமியம் (Chromium) இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்த உதவி புரிகிறது. இவை TCF7L2 ஜீன், இன்சுலின் செயல்பாட்டை கட்டுப்படுத்த உதவும் மரபணு. இவ்வாறு ஒரு வகையான TCF7L2 மரபணு கொண்டவர்கள் குரோமியம் உள்ள உணவுகளை உட்கொண்டால்
பயனடைவார்கள்.

*L-Arginine உள்ள உணவுகளான வேர்க்கடலை, வால்நட்ஸ், சூரியகாந்தி பூ விதைகள், கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுவதன் மூலம் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது.

மரபியல் என்பது பருமனைத் தடுக்கும் ஒரு சிறப்பான வழி. எனினும் சரியான அளவு, ஊட்டச்சத்துள்ள உணவுமுறைகள், உடற்பயிற்சி, நல்ல உறக்கம், பதற்றம் இல்லா வாழ்க்கை, ஹார்மோன் செயல்பாடு போன்ற பலவகை காரணிகள் நம் எடையை தீர்மானிக்கிறது.

இன்றைய நவீன காலகட்டத்தில் உங்கள் மரபணுக்களை பற்றி அறிய பல சோதனை முறைகள் வந்துவிட்டன. அவற்றை பயன்படுத்திக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம். உடல்பருமன் பிரச்னையிலிருந்தும் விடுபடலாம்.

(புரட்டுவோம்!)