தாய்ப்பாலில் அப்படி என்னதான் இருக்கிறது?!செப்டம்பர் 1 - 7 ஊட்டச்சத்து வாரம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு கருப்பொருளின் அடிப்படையில் இந்த கொண்டாட்டம் வருடாவருடம் அமைக்கப்படும். 2017-ம் வருடத்தின் கருப்பொருளாக, தாய்ப்பால் அமைந்திருக்கிறது. அதாவது, தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தாய்ப்பால் உணவு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜிடம் இந்த வருட ஊட்டச்சத்து வாரத்தின் கருப்பொருள் பற்றியும், தாய்ப்பாலின் மகத்துவம் பற்றியும் கேட்டோம்...

முதல் 6 மாதங்கள்

குழந்தைகளுக்கு முதல் 6 மாத காலம் வரையில் வெறும் தாய்ப்பாலே போதுமானது. 6 மாதக்காலத்தில் அவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கத் தேவையில்லை. அவர்களுக்குத் தேவையான அனைத்தும் தாய்ப்பாலிலேயே கிடைத்துவிடும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். அவர்களின் ஐக்யூ எனப்படும் Intelligence quotient அதிகரிக்கும். எடுப்பு பல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது. தாய்க்கும் குழந்தைக்குமான உறவு உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். நன்றாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியும் இருக்கும். நோய்த்தொற்று அல்லது உடல் நலக்குறைவானது அரிதாகவே ஏற்படும்.

தாய்ப்பாலின் மகத்துவம்

தாய்ப்பாலில் 20 மடங்கு அதிகப்படியான குளூட்டமைன் சத்து நிறைந்துள்ளது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. தாய்ப்பால் சரியாக கிடைக்காத குழந்தைகளுக்கு விரைவிலேயே உடல் பருமன், நீரிழிவு நோய், இருதய நோய் போன்றவை வர வாய்ப்புகளும் அதிகம். Arachidonic acid, Eicosapentaenoic acid, Docosahexaenoic போன்றவை மூளை, கண், உடல் திசு, தசை செயல்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது தாயிடமிருந்தே குழந்தைக்கு கிடைக்கும். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இது தாயிடமிருந்து சரிவர கிடைக்காது.

புரதச்சத்து ஆதாரம்

தாய்ப்பாலில் உள்ள லேக்டோஸ் கால்சியம் மற்றும் மினரல்ஸ் சத்துக்களை அதிகப்படுத்தும். குழந்தை பிறந்தவுடன் கிடைக்கும் தாய்ப்பாலில் 80 % புரதமும் 20 % கேசினும் உள்ளது. பவுடர் பாலில் புரதம் மிகக் குறைவு. தாய்ப்பாலின் புரதத்தில் Lactasari, Secretory Immunoglobulin a, Lysozyme இவைகள் உள்ளதால் உடலில் தோன்றும் தேவையற்ற பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும்.

DHA & HMO

தாய்ப்பாலில் DHA எனப்படும் Docosahexaenoic acid உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. பால்பவுடர்களிலும் DHA  இருந்தாலும் இயற்கையாக தாய்ப்பாலில் கிடைக்கும் அளவு சிறந்ததாக இருப்பதில்லை. தாய்ப்பாலிலிருந்து கிடைக்கும் DHA நரம்பு திசுக்கள் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.

HMO எனப்படும் Human milk oligosaccharides எனும் சத்து நிறைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றது. உணவுக்குழாயில் ஏற்படும் நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. Salmonella infection, Listeria infection போன்ற நோய்த்தொற்றிலிருந்து குழந்தைகளை காக்கிறது. தாய்ப்பாலில் தண்ணீர் - 75%, கொழுப்பு - 3.8%, புரோட்டீன் - 1%, லேக்டோஸ் - 7% உள்ளது. இது எளிதில் ஜீரணமாகக்கூடியது.

பால் பவுடர் வேண்டாமே...

தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு எந்த சத்துக்களும் கிடைப்பதில்லை. தாய்ப்பாலுக்கு பதில் அவர்களுக்கு கொடுக்கப்படும் பவுடர் பாலில் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துகள் கண்டிப்பாக இருப்பதில்லை. பால் பவுடர்கள் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, உப்பு, சர்க்கரை மற்றும் இதர சத்துக்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. தாய்ப்பாலின் நன்மையை ஈடுகட்ட பால் பவுடர்கள் முயற்சி செய்தாலும் தாய்ப்பாலுக்கு நிகரான ஒன்று கிடையாது. தாய்ப்பாலுக்கு நிகராக பசும்பாலை கருதுவதும் தவறு. தாய்ப்பால் ஒன்றே குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கக்கூடியது.

சமூகத்தின் பொறுப்பு

தாய்ப்பால் கொடுக்க நினைக்கும் தாய்மார்களுக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம். சமுதாயம், குடும்ப நபர்கள் கொடுக்கும் ஆதரவும் முக்கியம். பஸ் நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், விமான நிலையம் போன்ற இடங்களில் தாய்ப்பால் கொடுக்க அவர்களுக்கென்று தனிஇடம் ஒதுக்குவது போன்ற அத்தியாவசிய வசதிகள் அவசியமாகிறது.

முன்பால்... பின்பால்...

தாய்ப்பாலில் முன்பால், பின்பால் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. பால் கொடுக்கத் தொடங்கியவுடன் குழந்தைகள் முன்பாலை குடித்து பின்பு பின்பாலை குடிக்கத் தொடங்குவர். இதில்தான் குழந்தைகளுக்குத் தேவையான சத்துகள் மற்றும் நல்ல கொழுப்புகள் கிடைக்கும். இந்த பின்பால் குடித்து முடித்தவுடன்தான் குழந்தைகளுக்கு வயிறு நிறைகிறது. சரியாக தாய்ப்பால் கொடுக்காமல் பாட்டில் பால் கொடுத்தால் பின்பாலில் உள்ள கொழுப்பு குழந்தைகளுக்கு கிடைக்காது. அவர்களுக்கு வயிறும் நிறையாது. மேலும் பின்பாலில் உள்ள கொழுப்பு அப்படியே தங்கி விடும் அல்லது பால் கட்டத் துவங்கிவிடும்.

பால் கட்டிக் கொண்டால்...

தனக்கு பால் கட்டிவிட்டது, அதனால் பால் கொடுக்க முடியாது என நினைப்பவர்களுக்கு சுடுதண்ணீரில் முதுகில் ஒத்தடம் கொடுக்கும்போது பால் கரைந்து வெளி வர ஆரம்பிக்கும். பால் சரியாக கொடுக்காதவர்களுக்கே பால் கட்டும். சரியான அளவு இடைவெளியில் பால் கொடுக்கும்போது இந்தப் பிரச்னைக்கே இடமிருக்காது. கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல் பருமன் தாய்ப்பால் கொடுக்கும்போது உடலில் உள்ள கொழுப்பு கரைந்து எடை குறைய ஆரம்பிக்கும்.

தாய்ப்பாலிலும் குறைகள் உண்டு

தாய்ப்பாலில் வைட்டமின் கே, டி மற்றும் சி குறைவாகக் காணப்படும். இதை சரிசெய்ய குழந்தைகளுக்கு உடலில் எண்ணெய் தடவி சிறிது நேரம் வெயிலில் காட்டுவதால் அவர்களுக்கு வைட்டமின் டி கிடைக்கும். 6 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கப்படும் காய்கறி சூப்புகள், பழங்கள், பழச்சாறுகள் மற்றும் உணவு வகைகளில் அவர்களுக்கு வைட்டமின் கே மற்றும் சி கிடைக்கும்.

தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களின் கவனத்துக்கு....

தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்கள் முதலில் செய்ய வேண்டியது தனக்கு தாய்ப்பால் சுரக்கும், தம்மால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும் என நம்ப வேண்டும். தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தாய்மார்கள் தாய்ப்பாலை அதிகப்படுத்த அதிகமாக தண்ணீர் அருந்துவது, பால் அருந்துவது, சோம்பு, சீரகம், எள், பூண்டு, முளை கட்டிய வெந்தயம், Chia seeds, Garden cress seeds, நட்ஸ் வகைகள், சுண்டல் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமும் தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யலாம்.

வசதி... எளிமை... சுத்தம்...

ஆரோக்கியம் என்ற கோணம் மட்டும் அல்லாமல் தாய்ப்பால் கொடுப்பதில் பல மறைமுகமான நன்மைகள் இருக்கின்றன. தாய்ப்பால் கொடுப்பது எளிதானது, வசதியானது, சுத்தமானது, ஆரோக்கியமானது, செலவில்லாதது, உயர்தரமானது, எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. இதன் நன்மை குறைந்த காலத்துக்கு மட்டுமல்லாமல் நம் ஆயுட்காலம் முழுவதுக்கும் நன்மை உண்டாக்கக்கூடியது.

- மித்ரா