அனஸ்தீசியா அறிவோம் ஒரு மருத்துவரின் டைரிக்குறிப்புஉயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் வகையில் மருத்துவம் வளர்ச்சி பெற்றுள்ளது. இதில் வார்டு பாய் தொடங்கி, சிகிச்சை தரும் மருத்துவர் என பலரின் பங்களிப்பு அடங்கும். இந்தப் பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவர் அனஸ்தீசியா மருத்துவர்.

ஆனால், இது ஏனோ வெளியே அவ்வளவாகத் தெரிவது இல்லை. அதனால், மயக்க மருந்தின் முக்கியத்துவம், பயன்கள், அதை கையாளும் முறைகள் வெளியே தெரியாமல் போய்விடுகிறது. அவை பற்றியும், பணி அனுபவங்கள் பற்றியும் பேசுகிறார் முதன்மை மயக்க மருந்து நிபுணர் பேராசிரியர் வெள்ளியங்கிரி.

‘‘எந்த ஒரு அறுவை சிகிச்சை என்றாலும், முதலில் மயக்க மருந்து கொடுப்பது அவசியம். ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் தகுந்தாற்போல வேறுவேறு அனஸ்தீசியா மயக்கமருந்து மருத்துவரால் கொடுக்கப்படும்.

நோயாளியின் உடல்நிலை அடிப்படையிலும் மயக்க மருந்து அளவு வேறுபடும். உதாரணமாக, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு உடல் எடையைப் பொறுத்து அனஸ்தீசியா கொடுக்கப்படும். இந்த அறுவை சிகிச்சைக்கு இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளை மட்டும் உணர்வற்ற நிலைக்கு கொண்டு செல்வோம்.

இதற்காக, Regional aneshthesia பயன்படுத்துவோம். இதய அறுவை சிகிச்சை என்பது மருத்துவ உலகில் சவாலான விஷயம். எனவே, இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது, அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இதன் காரணமாக இதயத்துக்கு வருகிற கனெக்‌ஷனை எல்லாம் இதயம், நுரையீரல் மிஷின்(Heart - Lung machine) என்ற கருவிக்கு மாற்றுவோம்.

இந்த எந்திரம் இதயம் மற்றும் நுரையீரல் செய்கிற வேலைகளைச் செய்யும். பொதுவாக, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய 2 மணிநேரம் ஆகிறது என்றால், அதன்பின்னர் மெஷினுக்குக் கொடுக்கப்பட்ட கனெக்‌ஷனை இதயத்துக்கு மாற்றுவோம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகும் நோயாளிக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், நுரையீரல் நோய் இருக்கும்பட்சத்தில், அதற்கு ஏற்றார்போல மயக்க மருந்து செலுத்தப்படும்.

உடல் பருமனாக உள்ளவர்களுக்கும், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கும், அவர்களுடைய எடைக்குத் தகுந்த மாதிரி மயக்க மருந்து அளவு கொடுக்கப்படும். அறுவை சிகிச்சை செய்துகொள்ள வரும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அவர்களுக்கு தகுந்த மாதிரி மயக்க மருந்து அளவு கொடுக்கப்படும். குழந்தைகளுக்கு அவரவர் உடல் எடைக்கு தகுந்த மாதிரி முதுகு தண்டுவடம் வழியாக அனஸ்தீசியா செலுத்தலாம்.

இதனால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. முதியவர்களுக்கும் உடல் எடையை பொறுத்து மயக்க மருந்து கொடுக்கப்படும். 60 வயதைக் கடந்தவர்கள் என்றால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு மயக்க மருந்து கொடுப்போம். அதேவேளையில், இந்த பாதிப்புகளை குணப்படுத்திய பிறகுதான் அனஸ்தீசியா கொடுக்க வேண்டும்.

இல்லையெனில் மயக்க நிலையில் இருந்து சுய நினைவுக்குத் திரும்ப அதிக நேரம் ஆகும். கருவுற்ற தாய்மார்களுக்கு அனஸ்தீசியா செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தொப்புள் கொடியைக் கடந்து மயக்க மருந்து சிசுவுக்குப் போகாத அளவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். நோயாளிகளுக்கு மயக்கம் உண்டாக்க கையாளும் முறைகள், சில மயக்க மருந்துகள் சிசுவை தாக்கும் அபாயம் கொண்டவை, அதேவேளையில், பிரசவத்துக்காக அட்மிட் ஆகும்போது, அவர்களுக்கு மயக்க மருந்து தர வேண்டிய நிலை ஏற்பட்டால், சிசுவுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவாறு வேறு முறையைப் பயன்படுத்தி (முதுகுத்தண்டுவடம் மூலமாக செலுத்துதல்) அனஸ்தீசியா கொடுக்கலாம்.
அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

தாய்மை அடைந்த பெண்களுக்கு முதல் 3 மாதங்கள் வரை மயக்க மருந்து கொடுப்பதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. 3 மாதங்களுக்குப் பிறகு, பிரசவ காலம் வரை அனஸ்தீசியா ஸ்பெஷலிஸ்ட் அறிவுரைப்படி அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கலாம். அறுவை சிகிச்சை செய்துகொள்ள வரும் நோயாளிகள், மயக்க மருந்து செலுத்துவதற்கு முன்னர் உணவு விஷயத்திலும் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

சிறுவர், சிறுமியர் என்றால், சிகிச்சை ஆரம்பிப்பதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னால் திட, திரவ உணவு வகைகளை சாப்பிடக் கூடாது. பெரியவர்கள் 6 மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். ஒருவேளை இவர்கள் ஏதாவது சாப்பிட்டு இருந்தால், அனஸ்தீசியா செலுத்திய சிறிது நேரத்திலேயே உடலில் செலுத்தப்பட்ட மயக்க மருந்தால் வாந்தி ஏற்படும். இதனால் புரையேறுதல் ஏற்பட்டு மூச்சுக்குழாய் உள்ளே வாந்தி போகும். இதன் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உடலின் ஆக்சிஜன் அளவு குறையும். 
 
அதேபோல், அறுவை சிகிச்சை முடிந்த உடனும் நோயாளிகளுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கக் கூடாது. ஏனென்றால், மயக்க மருந்தின் தாக்கம் உடலில் இருக்கும். எனவே, அறுவை சிகிச்சை முடிந்த உடனே எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். எனவே 6 மணி நேரம் கழித்து திட, திரவ உணவுகளை உட்கொள்ளலாம்.

அறுவை சிகிச்சை செய்து கொள்ள வரும் நோயாளிகள் எப்பொழுது சாப்பிட்டார்கள் என்பதில் ஆரம்பித்து, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளதா என்பது போன்ற விஷயங்களை ஒளிவுமறைவு இல்லாமல் மருத்துவர்களிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் மயக்க மருந்து கொடுப்பதால் ஏற்படுகிற பக்க விளைவுகளை சமாளிக்க முடியும்.

இதற்கு முன்னர், குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது அனஸ்தீசியா கொடுத்தபோது ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தாலும் தெரிவிக்க வேண்டும். மயக்க மருந்து கொடுப்பதற்கு முன், என்ன வகையான மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துவோம்’’ என்றவரிடம், மறக்க முடியாத அனுபவம் பற்றிக் கேட்டோம்...‘‘மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய இருக்கிறது. 1993-ம் வருடம் ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில், பார்வை இழந்த தேசம்மாள் என்ற பெண் பிரசவத்துக்காக வந்தார்.

நிலைமை மோசமாக இருந்ததால் சிசேரியன் பண்ணித்தான் குழந்தையையும் தாயையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. எனவே, மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருக்கும்போது, திடீரென அந்த பெண்ணின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது. CPR என்னும் உயிர் பிழைக்க வைக்க கூடிய செய்முறை செய்து இதயத்தை அழுத்தித் துடிக்க செய்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றினோம்.

அதேபோல், கடந்த 2004-ம் வருடம் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். சுனாமி வந்த நேரம் அது. வட சென்னையில் இருந்து சுனாமியில் பாதிக்கப்பட்ட 50 பேரை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்சில் கொண்டு வந்து சேர்த்தார்கள். அவர்களில் 30 பேரைப் போராடி காப்பாற்றினோம்.

சமீபத்தில் 6 மாதங்களுக்கு முன்பு 21 வயதுடைய பெண்ணுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. ஆனால், அந்தப் பெண்ணின் ரத்த வகையில் சேர்ந்த இதயம் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. நாங்களும் பல இடங்களில் முயற்சி செய்து வந்தோம். அதிர்ஷ்டவசமாக அதே ரத்தவகையைச் சேர்ந்த மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் தானமாகக் கிடைத்தது. உடனடியாக, அதிகாலை 6 மணிக்குத் தொடங்கிய அறுவை சிகிச்சை, மறுநாள் மாலை 4 மணிக்கு வெற்றிகரமாக முடிந்தது. இன்றும் அந்தப் பெண் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். இதுபோல் எத்தனையோ அனுபவங்கள் உண்டு’’ என்று புன்னகைக்கிறார்.

- விஜயகுமார், படம் : ஆர்.கோபால்