வெற்றி வேண்டுமா... வெளியே வா! ‘



'மக்கள் எப்போதும் புதிய விஷயங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். மாற்றங்கள் பாதுகாப்பற்றதாக இருக்குமென்று கற்பனை செய்துகொள்கிறார்கள். சராசரி மனோநிலை கொண்டவர்கள் சொகுசான வட்டத்தை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. ஆனால், வெற்றியாளர்கள் இதற்கு நேர்மாறாக அறியாத பாதையில் பயணிக்கும் சாகசத்தையே தேடுகிறார்கள். அதுதான் புத்திசாலித்தனத்தை வளர்க்கும்; கூர்மையடையச் செய்யும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.’ ஓஷோ சொன்ன மந்திர வார்த்தைகள் இவை. நவீன உளவியலாளர்களும் இதையே Break out of your comfort zone என்று வெற்றி பெற விரும்புகிறவர்களுக்கான ஆலோசனைகளாக வழிகாட்டுகிறார்கள். வட்டத்தைத் தாண்டுவது எப்படி? பார்ப்போம்...

முதல் அத்தியாயம்
‘இது எனக்கு சௌகரியமாக இருக்கிறது, மிகவும் பிடித்திருக்கிறது, இதுவே போதும் என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே வளைய வருபவர்களுக்கு வாழ்வில் அடுத்த கட்டம் என்ற ஒன்று கிடையாது. ‘ரிஸ்க்கெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி’ என்று தைரியமாக வட்டத்தைத் தாண்ட வேண்டும் என்ற எண்ணம்தான் இதன் முதல் படி. 

சவாலை சந்தியுங்கள்
பொதுவாக சங்கடமான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதையே பலரும் விரும்புகிறார்கள். நம்மால் செய்ய முடியும் என்று நம்பினாலும், அதை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இதனால், ‘எதற்குத் தேவையில்லாமல் நாமாக சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்து பல அருமையான வாய்ப்புகளையும் தவற விட்டுவிடுவோம். எண்ணங்களில் சுய சந்தேகமோ, பயமோ ஏற்பட்டால் அதுவே தடைக்கற்களாகிவிடும். ஒவ்வொரு சூழ்நிலையும் நமக்கு சாதகமாகவே இருக்கும் என்று காத்திராமல், அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பை எதிர்பார்த்து, அதற்கேற்றவாறு தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

வெற்றிக்கான விதிகள்
முக்கியமாக, பெரும்பாலான வெற்றியாளர்கள் கடைபிடிக்கும் 3 விதிகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாசித்தல், பிரதிபலித்தல் மற்றும் பரிசோதித்தல் இந்த மூன்றுதான் வெற்றிக்கான விதிகள். ஒருநாளில் ஒரு மணி நேரம் படிப்பதற்காக மட்டுமே ஒதுக்கலாம். படித்தவற்றைச் சிந்திப்பது, சிந்தனையில் உதிக்கும் கருத்துகளை அலசுவது, அந்த கருத்துக்களை ஒரு தாளில் எழுதுவது அல்லது சிந்தனைகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றலாம். இதன்மூலம் உங்களுடைய திறமைகளை கண்டறிந்து அதை உங்கள் வேலை சார்ந்த  நடவடிக்கைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். தொடர்ச்சியான கற்றலே துறைசார்ந்த வெற்றிக்கு வித்திடும்.

வேட்கையோடு தேடல்
எல்லா இடங்களிலும் அகத்தூண்டுதலை தேடுங்கள். வலைதளங்களுக்குள் பெரும்பாலான நேரத்தை எல்லோருமே கழித்துக் கொண்டிருக்கும் சூழலில், உத்வேகத்தைத் தூண்டக்கூடிய கட்டுரைகள், சொற்பொழிவுகள், காணொலிகள் எல்லாம் நம் உள்ளங்கையிலேயே அடங்கியிருக்கிறது. எது உங்களுக்கு ஊக்க மளிக்கிறதோ அதை தேடித்தேடி கண்டுபிடியுங்கள். அது இயற்கையோடு இயைந்த ஒரு நடைபயிற்சியில்கூட கிடைக்கலாம்; ஒருவரோடு காஃபி அருந்தும் தருணத்திலும் தோன்றலாம். அது ஏதோ ஒரு புள்ளியில் மின்னலாக மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும். குதிரைக்கு போட்ட கடிவாளம் போல் நேரான பார்வை செலுத்தாமல், நம்மைச் சுற்றிலும் நிகழும் நிகழ்வுகளிலேயே நமக்கான உந்துதலை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். தேடலில் கிடைக்கும் உந்துதல், உங்களுடைய வட்டத்திலிருந்து வெளிவருவதற்கான துணிவையும், உறுதியையும் பெற்றுத்தரும். யார் கண்டார்? வெற்றிபெற்ற நீங்கள், ஒருநாள் மற்றவர்களுக்கு ரோல் மாடலாகவும் ஆகிவிடலாம்.

துறைசார்ந்த ஆய்வுகள்
நீங்கள் ஈடுபட்டிருக்கும் வேலை சார்ந்த ஆய்வுகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். போட்டி நிறுவனங்களின் சந்தை நிலவரம், செயல்பாடுகள், வெற்றிகள் மற்றும் கொள்கைகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். வெற்றி நிறுவனங்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய ஃபார்முலாவை நீங்களும் கடைபிடிக்கலாமே.

விடுமுறையைக் கொண்டாடுங்கள்

சிலர் வார விடுமுறைகளை, சாதாரண நாட்களைப் போலவே கடந்து விடுவார்கள். வார இறுதி நாட்கள் நமக்கானவை. வாரம் முழுவதும் இயந்திரத்தனமாய் வேலை செய்யும் நாம், ஓய்வெடுக்கலாம்; அன்று குடும்பத்தினரோடு வெளியே செல்லலாம்; நண்பர்களோடு கொண்டாடலாம் அல்லது நமக்குப் பிடித்த எந்த வேலையையும் செய்யலாம். அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, உற்சாகம் மூளைக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். உற்சாகமாகத் தொடங்கும் வாரத்தின் முதல் நாள், உங்கள் மூளையில் புத்தம்புதிதான சிந்தனைகள் பிறக்கவும் வழி செய்யும்!
So, Break out of your comfort zone !

- என்.ஹரிஹரன்