இந்த பிரச்னையையும் கொஞ்சம் கவனிங்க!Toilet hygiene

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது மனித வளம், பல துறைகளின் வளர்ச்சி என்பதையே ஆதாரமாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இதில் தனி மனித சுகாதாரமும் அவசியம் இடம் பெற வேண்டும். ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏனோ இதில் பெரிய கவனக் குறைபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு, தண்ணீர் மாசுபடுதல், காற்று மற்றும் ஈக்கள் மூலம் நோய்கள் பரவுதல், அதன் காரணமாக உயிரிழப்புஎன பலவிதமான பாதிப்புகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதற்கு, திறந்தவெளி இடங்களைக் கழிவறையாகப் பயன்படுத்துதல், பயன்பாட்டில் உள்ள கழிப்பிடங்களை முறையாக பயன்படுத்தாமை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இது பற்றிய விழிப்புணர்வை பெண்கள், பள்ளி மாணவ, மாணவியரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இயங்கி வரும் யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா தலைமைப் பொறுப்பு அலுவலரான ஜாப் சக்காரியாவிடம் இதுபற்றிப் பேசினோம்...

‘‘சுகாதாரமான கழிவறைகளை அமைக்கவும், அவற்றை முறையாக பயன்படுத்தவும் தெரிந்துகொண்டால் நோய்கள் ஏற்படுவதையும், குழந்தை இறப்பையும் தடுக்க முடியும். தமிழகத்தில் முதல் பிறந்தநாள் வருவதற்கு முன்னரே சுமார் 20 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. இந்திய அளவில் இந்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு லட்சம் குழந்தைகள் என்பது மிகப்பெரிய துயரம்.

சுகாதாரமான கழிவறைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டும்தான் உதவும் என்று இல்லை. ஆனால், பல ஆச்சரியகரமான பலன்களும் இதனால் கிடைப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகள் கூறியிருக்கின்றன.

சுகாதாரமான கழிவறைப் பயன்பாடு ஒருவரின் ஐ.க்யூ திறனை அதிகரிப்பதாகவும், படைப்பாற்றலை மேம்படுத்துவதாகவும், குழந்தைகளின் வளர்ச்சி குறைபாட்டை சரி செய்வதாகவும் ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்கள்.

சாதாரணமாகவே, நமது கையில் ஏற்கனவே 100 கோடி கிருமிகள் ஒட்டிக்கொண்டு உள்ளன. இதுதவிர, நமக்குத் தெரியாமலேயே தினமும் 3 கிராம் மலம் வயிற்றின் உள்ளே செல்கிறது. இந்த அளவையும் தாண்டி மலம் வயிற்றுக்குள்சென்றால்தான் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும் வகையில் Biogas Toilet, Twin leach pit toilet, Eco San Toilet, Bio-digester toilet என பலவகையான கழிவறைகள் உள்ளன. Eco san toilet-ல் மலம், தண்ணீர் ஒன்று சேராது. ஆனால், இதை பயன்படுத்த பயிற்சி வேண்டும். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் இந்த டாய்லெட்டை கட்ட 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம்வரை செலவாகும். இதில் கழிவை வெளியேற்ற தண்ணீர் தேவைப்படாது. சாம்பல் மூலம் அதனை வெளியேற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு உபயோகப் பொருட்களில் டாய்லெட்தான் கடைசி இடத்தில் உள்ளது. பணம், இடம், தண்ணீர் ஆகிய மூன்றும் டாய்லெட் கட்டுவதற்கு மிகவும் அவசியம். ஆனால், இவற்றைவிட, மனம்தான் அடிப்படையானது.

ஏனென்றால், பணம், இடம், தண்ணீர்  போன்றவை தப்பிப்பதற்கான வழிகள். சோப்பு பயன்பாடு என்பது கழிவறை மருத்துவத்தில் நவீன கண்டுபிடிப்பு. கழிவறைக்குச் சென்று வந்த பின்னர், சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும் என குழந்தைகள் வலியுறுத்தினால், பெற்றோர்கள் கேட்பார்கள். அதனால், குழந்தைகளுக்குக் கற்பிப்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.’’

- விஜயகுமார்