SGOT SGPT என்பது என்னவென்று தெரியுமா?!



டிக்‌ஷ்னரி

மதுப்பழக்கம் மற்றும் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் ரத்தப்பரிசோதனையில் SGOT, SGPT counts என்று குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். இதன் பொருள் என்ன?இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை நிபுணரான கணேஷிடம் கேட்டோம்...

‘‘ரத்தத்தில் காணப்படும் என்சைம்களையே SGOT, SGPT என்று குறிப்பிடுகிறார்கள். இது கல்லீரல் நோயால் பாதிப்படைந்த ஒரு நோயாளிக்கு மேற்கொள்ளப்படும் ரத்தப்பரிசோதனையில், அவரது நோயை உறுதிப்படுத்தக்கூடிய என்சைம்களாக இருக்கிறது.

ரத்தத்தில் காணப்படும் பல்வேறு கல்லீரல் என்சைம்களின் அளவின் வாயிலாக, ஆரம்பத்திலேயே கல்லீரல் சேதத்தின் அளவீடைக் கண்டறிந்துவிடலாம். Alanine aminotransferase மற்றும் Asparatge aminotransferase என்ற இந்த இரண்டு வகை என்சைம்களின் அளவுகளே பரிசோதனையில் கணக்கிடப்படுகின்றன. இந்த என்சைம்கள்தான் கல்லீரல் செல்களின் முக்கிய அங்கமாகின்றன.

கல்லீரல் செல்கள் சேதமடைந்தாலோ அல்லது காயமடைந்தாலோ, ரத்த ஓட்டத்தில் இந்த என்சைம்களின் அளவு அதிகரிக்க ஆரம்பித்துவிடும். இதுதான் கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறி. பொதுவாக, ரத்தத்தில் காணப்படும் அலனைன் அமினோ டிரான்ஸ்ஃபெரேசஸ் (Alanine aminotransferases) எனப்படும் என்சைம்களின் அளவுகளே கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான பாதிப்பை உணர்த்திவிடும்.’’SGOT, SGPT என்சைம்கள் உடலில் எந்தப்பகுதியில் இருக்கிறது?

‘‘SGOT என்பது தற்போது AST(Amino transaminases) என்று அழைக்கப்படுகிறது. SGPT(Serum glutamic pyruvic transaminase)-ன் தற்போதைய பெயர் ALT(Alanine aminotransferase). பொதுவாக, SGOT என்சைம்கள் இதயம், கல்லீரல், மூளை, உடல் தசைகள் மற்றும் சிறுநீரக சவ்வுகளில் காணப்படுகின்றன. இந்த உறுப்புகளின் திசுக்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் போது, ரத்த ஓட்டத்தில் SGOT என்சைம்கள் வெளிப்படும். உதாரணமாக, உடல் தசைகளில் காயம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் நேரங்களில் ரத்தத்தில் SGOT  நிலை அதிகரிக்கிறது. இதை வைத்து கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது.

இதற்கு மாறாக, ரத்தத்தில் SGPT என்சைம்களின் நிலை அதிகரிக்குமானால், கண்டிப்பாக அங்கே கல்லீரல் பாதிப்படைவதின் முக்கியமான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் காணப்படும் இந்த இரண்டு என்சைம்களின் அளவுகள் கல்லீரலின் செயல்பாட்டை குறிக்காது. கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் வைரஸ் தொற்று மற்றும் வீக்கம் போன்றவற்றை எடுத்துக் காண்பிக்கும் அறிகுறியாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.’’
SGOT, SGPT என்சைம்களின் இயல்பான நிலை என்ன?

‘‘சாதாரணமாக SGOT(AST) அளவுகள் லிட்டருக்கு 5 முதல் 40 யூனிட்கள் வரையிலும், SGPT(ALT) அளவுகள் லிட்டருக்கு 7 முதல் 56 யூனிட்கள் வரையிலும் இருக்க வேண்டும். இந்த அளவுகளிலிருந்து சற்று ஏறக்குறைய இருக்கலாம்.ஒருவருக்கு நோய்த்தொற்றினாலோ, வேறெதேனும் காரணத்தாலோ இந்த என்சைம்களின் அளவு அதிகரித்து காணப்பட்டால், அந்த நோய் சரியானவுடன் தானாகவே குறைந்துவிடும். ஆனால் மதுவினால் ஒருவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டிருந்தால் ரத்தத்தில் அதிகரிக்கும் SGOT, SGPT என்சைம்களின் அளவு குறையவே குறையாது.’’

- இந்துமதி