வாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்?



தண்ணீர்... தண்ணீர்...

இந்திய மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவிகிதம் பேருக்குதான் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலான மக்கள் நீரால் பரவும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரசு வழங்கும் குடிநீர் கிடைக்காத பெரும்பாலான இடங்களில், நிலத்தடி நீர் மற்றும் பிற நீராதாரங்களில் இருந்து கிடைக்கும் நீரை நேரடியாக பயன்படுத்தும் நிலைதான் உள்ளது.

அதிலும் தற்போது நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் மாசுபாடு பிரச்னைகளால், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதென்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மாசுபட்ட நீர் நோய்களை உருவாக்கும் முக்கியமான காரணியாக இருப்பதால், சுத்திகரிப்பு தொழில்நுட்ப முறைகளும் அதிகம் உருவாகி வருகிறது. இந்த சுத்திகரிப்பு முறைகளில் எது சிறந்தது? மக்கள் பயன்படுத்த எளிதானது எது? என்று உணவியல் நிபுணர் புவனேஸ்வரியிடம் கேட்டோம்...

‘உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல்வேறு வகையான தொழிற்சாலைக் கழிவுகளால், நம் நாட்டின் முக்கியமான குடிநீர் ஆதாரங்களாக உள்ள பெரிய நதிகளும் அதன் கிளை நதிகளும் அதிகளவு அசுத்தமடைந்து வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களை அதிகளவு பயன்படுத்துவதாலும் நிலத்தடி நீரும் அசுத்தமடைகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களாலேயேநீர் மாசுபாடு தற்போது அதிகரித்திருக்கிறது.

நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்படாத குழாய் நீரில் நமது உடல் நலனுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் பாராசைட்ஸ், குளோரின், ஃப்ளூரைடு மற்றும் டையாக்ஸின் போன்ற மாசுகள் கலந்திருக்கலாம். அசுத்தமான நீரில் களிமண், மணல், வைரஸ், பாக்டீரியா போன்ற மாசுகள் கலந்திருக்கலாம். மேலும் அதில் பூச்சிக்கொல்லிகள், ஆர்சனிக், ஃப்ளூரைடு மற்றும் காரீயம், மெர்க்குரி, காப்பர், காட்மியம் போன்ற கன உலோகங்கள் கரைந்திருக்கலாம்.

இதுபோன்ற கண்ணுக்குத் தெரியாத அசுத்தங்களால் காலரா, ஹெப்படைட்டிஸ் A மற்றும் B, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற தீவிர உடல்நல பிரச்னைகள் உண்டாகிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க மாசு கலந்த குடிநீரை சுத்திகரித்து குடிப்பது நல்லது.ஆனால், தற்போது இந்தியாவில் மிகவும் குறைந்த சதவிகிதத்தினரே அவரவருடைய பொருளாதார வசதிக்கேற்ப வீடுகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் தொழில்நுட்ப உதவியோடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்தும் சூழல் உள்ளது.

1970-களில் பலமுறை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி பாவோ அரோலா என்பவர் முதன் முதலில் எழுதிய விஷயமானது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ‘மாசு கலந்த நீரை சுத்தப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு சுத்திகரிப்பு முறையை மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பல தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட நீரில் அதிக அளவு தாதுச் சத்துக்கள் இழப்பு ஏற்படுகிறது.

இதுபோன்ற நீரைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு Osteoporosis, Osteoarthritis, Hypothyroidism, Coronory artery disease, High blood pressure மற்றும் இளமையிலேயே முதுமைநிலை ஏற்படுவது போன்ற பிரச்னைகள் உண்டாகிறது’ என்று சொல்லியிருக்கிறார்.சில வகை சுத்திகரிப்பான்களில் நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்பு சாதாரண, குளிர்ந்த மற்றும் சூடான நீர் என்று மூன்று வகைகளாக பிரித்து கொடுக்கும் வசதிகள் இருக்கிறது. நீரை சூடாக்கவும், குளிர்விக்கவும் தனித்தனியான காயில்கள் அல்லது அதற்கான சாதனங்கள் இந்த சுத்திகரிப்பான்களில் இருக்கிறது. அதிக குளிரான மற்றும் அதிக சூடான தண்ணீர் நமது உடலுக்கு உகந்ததல்ல. அதிகக் குளிரான நீரால் சளி, இருமல் போன்ற பிரச்னைகளும், அதிக சூடான நீரால் குடலில் புண் போன்ற பிரச்னைகளும் உண்டாகிறது.

இதைத் தடுப்பதற்கு உடலின் தேவைக்கேற்ப மட்டுமே மிதமான குளிர் அல்லது சூடான நீரை அருந்த வேண்டும். சூடான நீர் என்பது உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். குளிர்ந்த நீர் அதிக உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும். பெரும்பாலும் நமது உடல் வெப்பத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு சுத்தமான, சாதாரண தண்ணீரை அருந்தினாலே போதுமானது. அதுவே உடல்நலனுக்கும் உகந்தது. சரியான குடிநீர் சுத்திகரிப்பான்களை அமைத்து அதை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம்பாதுகாப்பான மற்றும் சுவையான நீரை நாம் பெறலாம்.

அசுத்தமான குடிநீரை அருந்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பல வகையான குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை நாம் பயன்படுத்துகிறோம். இந்தக் கருவிகள் அவற்றின் தொழில்நுட்ப வசதிகளின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது’’ என்பவர் அதன் வகைகளைப் பட்டியலிடுகிறார்.

Reverse Osmosis

உடல் நலத்துக்குத் தீங்கு உண்டாக்கும் அனைத்து வகையான மாசுகளை நீக்கும் திறன் மற்றும் துர்நாற்றத்தைக் குறைக்கும் திறனுடையது என்பதால் இந்த சுத்திகரிப்பு முறை மிகவும் பிரபலமாக உள்ளது.

Activated Carbon Filters

நீரிலுள்ள களிமண் மற்றும் வண்டல் போன்ற பெரிய அளவிலுள்ளதுகள்களை அகற்றுவதற்கு கார்பன் வடிகட்டிகள் உதவுகிறது. இதிலுள்ள கார்பன் நீரிலுள்ள மணல் போன்ற துகள்களை தன்பக்கம் கவர்ந்து உறிஞ்சிக் கொள்கிறது. பின்னர் இதுபோன்ற அசுத்தங்களை வடிகட்டிய நீரை குழாய்களின் வழியே வெளியேற்றுகிறது. இந்த செயல்படுத்தப்பட்ட கார்பன் வடிகட்டியானது நீரின் துர்நாற்றத்தைக் குறைப்பதோடு, அதிலுள்ள குளோரின் போன்ற பிற மாசுகளை குறைக்க உதவுகிறது. இதனால்தான் அந்த நீர் சுவையுடையதாக, அருந்துவதற்கு உகந்ததாக இருக்கிறது.  

Alkaline/ Water Ionizers

இதில் மின்னாற்பகுப்பு முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அல்கலைன் என்கிற காரம் ஒரு தகடிலும் மற்றொரு தகடில் அமிலமும் இருக்கு
மாறு இதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தகடுகளுக்கு இடையே செல்லும் நீரானது மின்னாற்பகுப்பு முறை மூலமாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் சுத்திகரிக்கப்படும் நீரானது மென்மையானதாக, அமிலத்தன்மை குறைவானதாக இருப்பதால் நமது சரும நலனுக்கு உகந்ததாக இருக்கிறது. 

UV Filters

இது தற்போது மிகவும் புதியதொரு தொழில்நுட்ப முறை வடிகட்டியாக உள்ளது. இதில் புற ஊதாக் கதிர்வீச்சு முறை மூலமாக நீரானது சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இது நமது உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறனுடையது. இதற்கு எந்த விதமான வேதிப்பொருளோ அல்லது கூடுதல் வெப்பமோ தேவையில்லை என்பதால் மற்ற சுத்திகரிப்பு முறைகளைக் காட்டிலும், இந்த முறை சுற்றுச்சூழலோடு நட்பு பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

Infrared Filters

அல்கலைன் வடிகட்டிகளைப் போலவே அகச்சிவப்பு தொழில்நுட்ப வடிகட்டி முறையும் கடினமான தன்மையில் உள்ள தண்ணீரை மென்மையாக்க உதவுகிறது. இந்த முறையில் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் பயன்படுத்தி சுத்திகரிப்புசெய்யப்படுவதால் நீரானது மென்மையாக இருப்பதுபோன்றஉணர்வைத் தருகிறது.

Candle filter purifier

இந்த வகை வடிகட்டிகள் மிகவும் அடிப்படையான தொழில்நுட்ப செயல்முறையை உடையது. இதிலுள்ள கேண்டில்கள் மிகச்சிறிய துளைகளை உடையது. இந்த துளைகளைவிட பெரிய அளவிலுள்ள பொருட்கள் இதன் மூலம் வடிகட்டப்படுகிறது. இதற்கு மின்சக்தி எதுவும் தேவையில்லை. நீரிலுள்ள உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை நீக்குவதற்கு இந்த முறை உதவுவதில்லை.

இதனால் இதிலிருந்து கிடைக்கும் நீரை சூடாக்கி, ஆறிய பின்பு அருந்த வேண்டும். இதிலுள்ள கேண்டில்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டியது அவசியம். இது நீரை வடிகட்டும் இந்த தொழில்நுட்பத்தின் செயல்திறன் குறையாமல் இருக்க உதவியாக இருக்கும்.இந்த வகைகளில் உங்களுக்கு எது சரியாக இருக்கும் என்று உணர்கிறீர்களோ, அதை ஒரு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!

- க.கதிரவன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்