செய்திகள் வாசிப்பது டாக்டர்



நோ பாப்பா நோ!

சோபாவை பற்றிக் கேட்டால் என்னவெல்லாம் நினைவுக்கு வரும்?

வரவேற்பறையின் ஹீரோ, ஹாயாக தொலைக்காட்சிகள் பார்க்க உதவும் நண்பன், பெட்ரூம் போரடிக்கும்போது தூங்க உதவும் பெஸ்ட் ரூம் என்று மனதுக்கு நெருக்கமான ஓர் இடமாகவே சோபாவைப் பற்றி தோன்றும். ஆனால், ‘குழந்தைகள் தூங்கக் கூடாத ஓர் அபாய இடம்’ என்கிறது The Journal of Pediatrics என்ற இதழ்.

குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வைத்து நடந்த ஓர் ஆய்வின் முடிவில்தான்  சராசரியாக 8 குழந்தைகளில் ஒருவரின் மரணத்துக்கு சோபாவில் தூங்குவது காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூக்கம் தொடர்பான 9 ஆயிரத்து 73 குழந்தை மரணங்களில், ஆயிரத்து 24 குழந்தைகள் சோபாவில் தூங்கியபோது உயிர் இழந்திருக்கிறார்கள்.

இதில் 3 வயது வரை உள்ள குழந்தைகளின் மரணம் மிகவும் அதிகம். கீழே தவறி விழுவது, பெரியவர்கள் நெருக்கமாக அணைத்துக்கொண்டு தூங்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகியவை முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன.

இந்த அபாயங்களைத் தவிர்க்க குப்புறப்படுத்து உறங்கப் பழக்குவது, தொட்டில் பயன்படுத்துவது, குழந்தைகளை அவர்களுக்கான பிரத்யேக இடத்தில் தூங்க வைப்பது போன்ற வழிமுறைகளைக் கையாளவும் பரிந்துரைக்கிறது இந்த ஆய்வு.ஆதலால், குட்டித்தூக்கமாக இருந்தாலும் குட்டிப் பாப்பாவுக்கு அது கூடாத இடம் என்பதை மறக்க வேண்டாம்!

கவனம் குண்டூஸ்!

‘‘உலக அளவில் பருமனில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பருமனால் ஏற்படும் நோய்களில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். இந்நிலை நீடித்தால், 2020ம் ஆண்டுக்குள் சர்க்கரை, ரத்த அழுத்த நோய்கள் கணக்கில்லாமல் வளர்ந்து விடும்’’ என்கிறார் கொழு உடல் மருத்துவவியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் பழனியப்பன்.

‘‘பருமனை ஒழிப்பதன் மூலம் நீரிழிவு, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்க மூச்சின்மை, குழந்தையின்மை, நாளமில்லா சுரப்பி பிரச்னைகள் போன்றவற்றையும் தவிர்க்க முடியும். தசை குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் இருப்பதுதான் இந்தியர்களுடைய உடல்வாகு. நமது உணவுமுறைகளில் ஏற்பட்ட மாற்றம், உடலில் அதிகக் கொழுப்பை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

பாடி மாஸ் இன்டக்ஸ் கணக்கிட்டுதான் பருமனை முடிவு செய்கிறோம். 22.5 புள்ளிகள் இருந்தால் சராசரி எடை, 27.5 புள்ளிகள் - அதிக எடை, 27.5 புள்ளிகளைத் தாண்டினாலே பருமன்தான். 32.5 புள்ளிகள் - மிதமான பருமன், 37.5 புள்ளிகள் - அதிக பருமன், 37.5க்கும் அதிகமானால் அபாயகரமான பருமனாகும்.

அதிக பருமனுக்கும் அபாயகரமான பருமனுக்கும் பேரியாட்ரிக் சிகிச்சை அவசியம். இதில் வயிற்றில் பசியின் அளவைக் குறைப்பதற்காக இரைப்பையின் அளவையும் சிறுகுடலின் செயல் நிலையையும் சுருக்கப்படும். இதன் பிறகு, குறைவான அளவு உணவு உட்கொண்டாலே வயிறு நிறைவதுடன், தேவையற்ற கொழுப்புகளும் உடலில் தங்காது’’ என்கிறார்.