சுறுசுறுப்புக்கு ஒரு சிகிச்சை!



லேட்டஸ்ட்

64 வயதிலும் ரஜினி எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று ஆச்சரியப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஃபுல் எனர்ஜியோடு இப்படிப் பரபரப்பாக இயங்குவதற்குக் காரணம் ழிகிஞி என்கிறது அறிவியல்!

வயது மேலாண்மை மற்றும் அழகுஅறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜெய ப்ரகாஷிடம் இது பற்றிக் கேட்டோம்...‘‘நாம் சுவாசிக்கும் காற்றும் உண்ணும் உணவும்தான் செல்லுக்குள் சென்று சக்தியாக மாறுகின்றன. இந்த சக்தியை அடையும் முன், காற்றில் இருக்கும் ஆக்சிஜனும் உணவில் இருக்கும் சர்க்கரையும் சில வேதிமாற்றங்களை அடைகின்றன. இந்த வேதிமாற்றங்களிலிருந்து தான் சக்தியை உருவாக்கும் வேலையை NAD (Nicotinamide Adenine Dinucleotide) என்சைம் செய்கிறது.

இந்த என்சைம் நம் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இருந்துகொண்டு மைட்டோகாண் டிரியா பகுதியில் சக்தியை உருவாக்குவதாக, 1905ம் ஆண்டு 4 விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். அதற்காக, அவர்களுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆரோக்கிய வாழ்க்கைமுறையின் மூலம் சக்தி கிடைக்காதவர்களுக்கு, இந்த என்சைம் சிகிச்சையின் மூலம் அளிக்க முடியுமா என்றும் தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டிருந்தார்கள். மாத்திரை மூலம் அளிப்பதில் 20 சதவிகிதம்தான் பலன் கிடைத்தது.

வாய்வழி மருந்தாக அளிப்பது அதிக உற்சாகம் தரும் போதைமருந்தாக மாறியது. அதனால், ட்ரிப்ஸ் மூலம் என்.ஏ.டி. என்சைமை செலுத்துவது சிறந்த முறை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை, சமீபத்தில் இந்தியாவுக்கும் வந்திருக்கிறது. இளவயதில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கைமுறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தாலே போதும்... உணவு, தூக்கம், உடற்பயிற்சி போன்ற விஷயங்களை சரியாகப் பின்பற்ற முடியாதவர்களுக்குத்தான் இந்த என்.ஏ.டி. சிகிச்சை பயன்படும்.

வயதானவர்கள், உடல் சோர்வு, ஞாபக மறதி, தூக்கமின்மை, வயதான தோற்றம், நீரிழிவு, மூளை வளர்ச்சி குறைவு, பருமன், புற்றுநோய், ரத்த அழுத்தம், போதை மருந்துக்கு அடிமையானவர்கள் ஆகியோருக்கு இந்த சிகிச்சை பெரிதும் உதவும்’’ என்கிறார் ஜெயப்ரகாஷ். ஆரோக்கிய வாழ்க்கை முறையின் மூலம் சக்தி கிடைக்காதவர்களுக்கு என்சைம் சிகிச்சை பலன் அளிக்கும்!

எஸ்.கே.பார்த்தசாரதி