பாலுணர்வைக் குறைக்கும் உடற் பயிற்சிகள்



அதிர்ச்சி

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’தான் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. கடுமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்பவர்களுக்கு பால் உணர்வைத் தூண்டும் மன எழுச்சி குறைவாக காணப்படுகிறது என தெரிய வந்திருக்கிறது.

இளைஞர்கள் கட்டுகோப்பான உடல் அமைப்பை பெறுவதற்கும், விளையாட்டு வீரர்கள் பந்தயங்களில் வெற்றிக்கனியை பறிப்பதற்காகவும் பலமணி நேரம் தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

இப்பயிற்சிகள் அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியாளராக உலா வருவதற்கும் வேண்டுமானால் உதவலாம். ஆனால், இப்படி மணிக்கணக்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதால் ஆண்மைத்தன்மை குறைவதாகவும், பாலுணர்வு குறைவதாகவும் நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தின் Medicine and Science in Sports and excercise துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றின் முடிவில் கூறியுள்ளார்கள்.

‘தாம்பத்தியம் பற்றி அடிக்கடி நினைப்பவரா? ஈடுபடுவது எப்போது?’ போன்ற வினாக்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் கேட்கப்பட்டன. இதனோடு, உடற்பயிற்சி செய்யும் வழக்கம், உடல்நலத்தோடு தொடர்புடைய பொது விஷயங்கள் மற்றும் மெடிக்கல் ஹிஸ்ட்ரி பற்றியும் தனியே கேள்விகள் இடம் பெற்றிருந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் அளித்த பதில்களில் இருந்தே கடுமையான உடற்பயிற்சிகள் பாலுணர்வை குறைப்பதாக தெரிய வந்திருக்கிறது.

‘உடற்பயிற்சிக்குப்பிறகு ஆண்கள் உடலில் ஏற்படும் களைப்பு டெஸ்டோஸ்டிரான் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேசமயம் ஒருவர் தன்னுடைய உடற்பயிற்சி தாம்பத்திய வாழ்க்கையை குறைப்பதாக அறிந்தால் சற்று குறைத்துக் கொள்வது நல்லது’ என்றும் ஆலோசனை கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

- விஜயகுமார்