உண்ணும் முறையும் முக்கியம் மக்களே!



உணவியலும் உளவியலும்

‘‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்துள்ள உணவுகள் அவசியம் என்பதைப் போலவே, அந்த உணவுகளை சாப்பிடும் முறையிலும் அக்கறை செலுத்துவது அவசியம். அப்போதுதான் அதன் பலன்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்’’ என்கிறார் மனநல ஆலோசகர் சங்கீதா.

‘‘உணவை நம் குடும்பத்தாரோ, நண்பரோ பரிமாறி சாப்பிடுவது நம்முடைய பண்பாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. உணவை ஒருவர் பரிமாற, இன்னொருவர் சாப்பிடும் போது பரிமாறுவோருக்கும், உண்பவருக்கும் இடையில் பரஸ்பர அன்பு அதிகரிப்பதோடு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அந்த உணவு முழுமையாக  பலனைத் தந்தது.அதனால் உணவு பரிமாறும்போது ஏதேனும் பிரச்னைகளைப் பற்றி வாதம் செய்யாமல் அன்புடன் பரிமாறிப் பழகுங்கள். அப்போது அதன் பலன்இரட்டிப்பாகக் கிடைக்கும்.

அதேபோல, உணவை தனியாக சாப்பிடுவதைவிட குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவதும் நல்ல மாற்றங்களை உண்டாக்கும். நேர நெருக்கடியில் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தாலும் தினமும் ஒருவேளை உணவையாவது எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பரிமாறி எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.

 குறிப்பாக, உணவுவேளைகளின்போது செல்போன், கணினி, தொலைக்காட்சி போன்ற சாதனங்களை அணைத்துவிடுங்கள். உணவின் ருசியை ரசித்தபடி உட்கொள்ள அதுதான் சரியான வழி. சாப்பிடுபவரும் அந்த நேரத்தில் அனைத்து வித பிரச்னைகளையும் யோசித்துக் கொண்டிராமல் உணவை மகிழ்ச்சியோடு உட்கொள்ள வேண்டும். சிலர் போகிற போக்கில் அவசர கதியில் சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடும் உணவால் உடலுக்கு எந்த பயனும் கிடையாது.

‘சாப்பிடும்போது பேசக்கூடாது’ என்பார்கள். ஆனால், அவ்வாறு இருப்பது அவசியம் இல்லை. சாப்பிடும்போது நேர்மறையான விஷயங்களைப் பேசுவதால் தவறு ஒன்றும் இல்லை. சாப்பிடும் இடத்தின் சூழல் சுத்தமாகவும் காற்றோட்டமாகவும், அமைதியாகவும் இருப்பதும் அவசியம்.’’

- க.இளஞ்சேரன்
படம்: ஆர்.கோபால்