ஆண் குழந்தைகளைக் குறிவைக்கும் கோளாறுகள்விழியே கதை எழுது

விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்


சில விழித்திரை பிரச்னைகள் வழிவழியே பாரம்பரியமாக வரும். முக்கியமாக, சொந்தத்தில் திருமணம் செய்வதால் விழித்திரை பிரச்னைகள் அதிகம் வரும். அவற்றில் முக்கியமானது மாலைக்கண் நோய்.

மாலைக்கண் நோயை ரெட்டினைட்டிஸ் பிக்மென்ட்டோஸா(Retinitis pigmentosa) என்று சொல்கிறோம். சுருக்கமாக ஆர்.பி. இரவில் பார்வை மங்குதல், பக்கவாட்டுப் பார்வை மங்குதல், மத்தியப் பார்வை மங்குதல் போன்றவை இதன் அறிகுறிகள்.

இந்த பிரச்னை இருக்கும் குழந்தைகள் இருளில் வெளியே செல்லும்போது பயப்படுவார்கள். ரெட்டினைட்டிஸ் பிக்மென்ட்டோஸா பிரச்னையால் பார்வைத் திறன் குறைவும், தீவிரமானால் பார்வை இழப்பும் ஏற்படும் என்பதால் அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டியது அவசியம்.

மாலைக்கண் நோய் 100 பேருக்கு இருந்தால் அவர்களில் 30 பேருக்கு விழித்திரையின் மையப்பகுதியில் தண்ணீர் சேர்கிற பிரச்னை இருக்கும். விழித்திரையில் தண்ணீர் சேரும் இந்த பிரச்னைக்கு சிஸ்டாயிட் மேகுலாபதி (Cystoid maculopathy) என்று பெயர்.

சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும். இல்லாவிட்டால் OCT என்கிற ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராஃபி (Optical coherence tomography) பரிசோதனை செய்ய வேண்டும்.

அது மட்டும்தான் அந்தப் பிரச்னைக்கான தீர்வு. இல்லாவிட்டால் விழித்திரையின் மையப்பகுதி அழிய ஆரம்பித்துவிடும். அதற்கு சிகிச்சை கிடையாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால், சாதாரண கண்ணாடிகளின் மூலம் சரி செய்ய முடியாத பிரச்னையை Low visual aids எனப்படுகிற மேக்னிஃபையிங் லென்ஸ் வைத்து சரி செய்யலாம் என்பது
கொஞ்சம் ஆறுதலான செய்தி.

பெரும்பாலும் வயதான பிறகு ஆரம்பித்து காலப் போக்கில் பார்வை இழப்பில் கொண்டு போய் விடுகிறது மாலைக்கண். வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுப் பழக்கம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டால் பி  என்கிறார்கள் ஆய்வாளர்கள்.ஆனால், வைட்டமின் குறைபாடு தவிர்த்த மற்ற காரணங்களால் வரும் மாலைக்கண் நோயை அப்படி எளிதாக குணப்படுத்திவிட முடியாது.

இந்த விழித்திரை பிரச்னைகளுடன் Flex என்கிற பிரச்னையும் கண்களில் வரலாம். விழித்திரையின் பக்கவாட்டில் மஞ்சள் நிற புண்கள் வருவதிலிருந்து இந்த ஃப்ளெக்ஸை அடையாளம் கண்டுகொள்ளலாம். இது தவிர்த்து ஸ்டாகார்ட்ஸ் மேகுலர் டிஸ்ட்ரோபி என்ற பிரச்னை காரணமாகவும் விழித்திரையின் மையப்பகுதியில் பார்வை குறைகிறது.

ஓ.சி.டி முறை மூலம் சிகிச்சை அளிக்கும்போது விழித்திரையின் மையப்
பகுதியில் மெம்ப்ரேன் வளர்வதன் பரிமாணங்களைப் பார்த்துவிட்டுத்தான் சிகிச்சை அளிக்க வேண்டும். விழித்திரையின் மையப்பகுதியில் இந்த மெம்ப்ரேன் காரணமாக துளை வரலாம் என்பதால் மருத்துவர்கள் கவனமாகக் கையாள்வது அவசியம்.

இவை தவிர இருளில் பார்வை சரியாகத் தெரியாததற்கு Congenital stationary night blindness(CSNB) என்கிற நிலை முக்கிய காரணமாக இருக்கிறது.வழக்கமாக இளம் சிறுவர்களை மட்டுமே பாதிக்கக் கூடியது இந்த CSNB பிரச்னை. அதிலும் Juvenile retinoschisis என்கிற நிலை ஆண் குழந்தைகளை மட்டும் பாதிக்கும். ஆண் வழி சொந்தங்களான அப்பா, மாமா போன்றவர்களையும் பாதிக்கும். CSNB பிரச்னையில் பார்வைக் கோளாறு இருக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Congenital red, Green color blindness போன்ற பிரச்னைகளும் ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. பெண்களைத் தாக்குவதில்லை. இதற்கு என்ன காரணம் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த Congenital red மற்றும் Green color blindness பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் கிடையாது.

இந்தக் குழந்தைகளுக்கு எல்லாமே கிரே நிறமாகத்தான் தெரியும். சிவப்பு, பச்சை, நீலம் என்றெல்லாம் வித்தியாசம் தெரியாது. இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் ரயில் ஓட்டுநர், போக்குவரத்து காவலர், மருத்துவர், கப்பல் வேலை போன்றவற்றைத் தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மாலைக்கண் நோய் வினோதம்

உலக அளவில் 4 ஆயிரம் பேர்களில் ஒருவருக்கு மாலைக்கண் பிரச்னை இருக்கிறது. ரெட்டினைட்டிஸ் பிக்மென்ட்டோஸா பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்தபோது குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மாலைக்கண் ஏற்படுவதில்லை என்பது வினோதமான ஒரு தகவல்.

நிறக்குருடும் ஆண்களுக்கே அதிகம்

நிறக்குருடு பிரச்னை ஆண்கள், பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் இந்த பிரச்னையும் ஆண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் கூட இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்தான். அதனால்தான் அவர் ஃபேஸ்புக் லோகோவை நீல நிறத்தில் வடிவமைத்தாராம்.

பரம்பரையாகத் தொடரும் பிரச்னை என்றாலும் இது முதுமை, விழித்திரை பாதிப்பு மற்றும் கண் நோய்களின் காரணமாகவும் வரலாம். நிறக்குருடு பிரச்னை உள்ள ஒரு ரயில் ஓட்டுநரால் 1875-ல் ரயில் விபத்தொன்று நடந்து, 9 பேர் பலியானார்கள்.

அதன் பிறகு ரயில்ரோடு ஊழியர்களுக்கு நிறக்குருட்டுக்கான பரிசோதனை அவசியமாக்கப்பட்டதாம். இதேபோல் ரெட் - கிரீன் கலர் பிளைண்ட்னெஸ் உள்ளவர்களால் சமையலில் நிபுணர்களாக முடிவதில்லை. நிறத்தைப் பிரித்தறிகிற திறன் குறைவால் உணவு சமைக்கப்பட்ட சரியான பதத்தை அவர்களால் கணிக்க முடியாததே காரணம்.

(காண்போம்!)

- எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி