குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்த பொறியியல் பட்டதாரிகள்!



* கண்டுபிடிப்பு

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி உலகையே கலங்கடித்து லட்சக்கணக்கான உயிர்பலி வாங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் கல்லூரி மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அந்தவகையில் கொரோனா சிகிச்சைக்கு உதவும் விதமாக நவீன தொழில்நுட்பம் கொண்ட மூன்றாம் தலைமுறை வென்டிலேட்டரை ஓசூரைச் சேர்ந்த அகிலேஷ் மற்றும் அவரது குழுவினர் குறைந்த விலையில் உருவாக்கியுள்ளனர்.



இந்த தானியங்கி வென்டிலேட்டரில் நோயாளிக்குச் செலுத்தப்படும் காற்றின் அளவு காற்றழுத்தம், மூச்சுச் சுழற்சி, காற்றின் ஈரப்பதம், வெப்பம் ஆகியவற்றை திரையில் கண்காணிக்கலாம். ஐஓடி தொழில்நுட்பமும் உண்டு. இந்த வென்டிலேட்டருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால் குறைந்த காலத்தில் நவீன வசதிகளுடன் வென்டிலேட்டர்களை தயாரித்துத் தரமுடியும் என்கிறார்கள் அகிலேஷ் குழுவினர். இதுகுறித்து அகிலேஷ் ஜோசப்பிடம் பேசியபோது, “காரைக்காலில் பிறந்த நான், ஓசூரில் வாழ்ந்து வருகிறேன். காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மெக்கானிக்கல் பிரிவிலும், பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் எம்.டெக் எம்பேடட் சிஸ்டம்ஸ் பிரிவிலும் பயின்றுள்ளேன்.

கடந்த 6 ஆண்டுகளாக, அதாவது பி.டெக் மூன்றாம் ஆண்டு பயிலும் நாள் முதலே, ஐஓடி மற்றும் எம்பேடட் சிஸ்டம் தொடர்பான பொருள் வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். தற்போது ஐஓடி (Internet of things - IoT) மற்றும் செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தில் பொருள் வடிவமைப்பு பணியை ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்காக செய்துவருகிறேன்.’’ என்றவர் வென்டிலேட்டர் தயாரிக்கும் யோசனை உருவான விதத்தை கூறினார்.  ‘‘நம் நாட்டில் கோவிட்-19 தொற்று ஏற்பட்ட நாள் முதல், இந்தியாவில் வென்டிலேட்டர் தேவை பெருகியுள்ளதாக ஊடகச் செய்திகளில் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன. வென்டிலேட்டர் தொழில்நுட்பம் தொடர்பான ஓர் ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. இதற்கிடையே பெரும் நிறுவனங்கள் முதல் மாணவர்கள் வரை பலரும் ஆம்பு பேக் (Ambu Bag) எனப்படும் முதலுதவிக் கருவியைப் பயன்படுத்தி மூச்சு விட அல்லல்படும் நோயாளிகளுக்கான தானியங்கி அடிப்படை கருவியை வடிவமைத்தது தொடர்பான பல காணொலிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதை கண்டேன்.

எனது மருத்துவ நண்பர்களிடம் கலந்து பேசியபோது, இத்தகைய ஆம்பு பேக் (Ambu Bag) பயன்படுத்தி உருவாக்கப்படும் கருவிகள் முதலுதவிக்கு மட்டுமே பயன்படும் என்றும், இந்தியாவில் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறை வென்டிலேட்டர் வடிவமைப்பது என்பது கடினம் என்றார்கள். உடனே என் மனதில் ‘நாம் உடனடியாக இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்’ என்கிற ஒரு முழுமையான ஈடுபாடு எனக்குள் ஏற்பட்டது. அன்று முதலே சிறந்த தொழில்நுட்பம் கொண்ட வென்டிலேட்டர் வடிவமைத்தே தீரவேண்டும் என்ற முனைப்புடன், வடிவமைப்பு வேலைகளை தொடங்கினேன்.



வடிவமைப்புப் பணிகள் முடிந்த நிலையில், சில பொறியியல் தொழிற்கூடங்களை, இந்த ஊரடங்கு நேரத்தில் திறந்து பணியாற்றினால்தான் செயல் வடிவ வென்டிலேட்டரை உருவாக்க முடியும் என்கிற கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் இ.ஆ.ப. அவர்களைத் தொடர்புகொண்டு அனுமதி கேட்டவுடன், அவர் எந்த மறு கேள்வியும் இன்றி, உடனடியாக அனுமதி அளித்தது மேலும் எனக்கு ஊக்கத்தை அளித்தது’’ என்றவர் வென்டிலேட்டர் உருவாக்கிய விதம் பற்றி விவரித்தார். ‘‘மூன்றாம் தலைமுறைத் தொழில்நுட்பம் கொண்ட வென்டிலேட்டர் ஒன்றை  மூன்று நாட்களில் வடிவமைத்து, அதைத் தொழிற்கூடங்களின் உதவியுடன் மேலும் நான்கு நாட்களில் ஒரு செயல் வடிவ மாதிரியை உருவாக்கி, அதன் செயல் விளக்கத்தை, எனக்கு உதவிய தொழிற்கூட அன்பர்களுடன் சேர்ந்து ஓசூர் விஜய் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் காட்டினோம்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் கருவி மாதிரியை இந்திய மருத்துவக் கழகத்தின் ஓசூர் பிரிவு மருத்துவர், மயக்கவியல் மருத்துவர் விஜி அவர்களிடம், ஓசூர் குணம் மருத்துவமனையில் செயல்விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்டதன்படி, அவரிடம் செயல்விளக்கம் காட்டப்பட்டது.மருத்துவர் விஜி மற்றும் மருத்துவர் ராஜேஷ், சில மாற்றங்களை நான் வடிவமைத்து உருவாக்கிய வென்டிலேட்டர் கருவியில் மாற்றி அமைக்க கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தற்போது மாற்றங்களுடன்கூடிய வென்டிலேட்டர் வடிவமைக்கப்பட்டு வருகிறது.இந்த வடிவமைப்புப் பணியில்கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பை நல்கி வருகிறது என்பதை கட்டாயமாக இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். தேவையான தொழிற்கூடங்களை திறப்பதாக இருந்தாலும் சரி, தேவையான உதிரிப் பாகங்களை பெறுவதாக இருந்தாலும் சரி, மாவட்ட நிர்வாகம் தம்மாலான அனைத்து உதவிகளையும் எனக்கு செய்துவருவதால் மட்டுமே மாதிரி வடிவ வென்டிலேட்டர் கருவியை ஓசூரிலேயே வடிவமைத்து உருவாக்க முடிந்தது.



இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள வென்டிலேட்டர், சுமார் 40,000 ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. இது மூன்றாம் தலைமுறை வென்டிலேட்டரைவிடவும் தொழில்நுட்பத்தில் சிறப்புடையதாகவும், கோவிட்- 19 மருத்துவத் தேவையின்போது உயிர் காப்பதில் பெரிதும் பயன்தரத்தக்கதாகவும், பிற நேரங்களில் தீவிர மருத்துவப் பிரிவில் (ICU), ஓர் உயிர் காக்கும் கருவியாகவும் செயல்படும் திறன் கொண்டதாகவும் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த 10 இன்ச் அளவுள்ள தொடுதிரையில் வரைகலை பயனர் இடைமுகம் (கிராபிக் யூசர் இன்டெர்ஃபேஸ்  GUI) கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி இயங்க மிகக் குறைந்த அளவே மின்சாரம் தேவை.இந்த வென்டிலேட்டர் கருவியில் ஐஓடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால், உலகின் எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும் இந்தக் கருவியின் செயல்பாட்டை மருத்துவர் ஒருவர் முழுமையாக கட்டுப்படுத்தலாம். அந்த வகையில் இந்த வென்டிலேட்டர் மருத்துவக் கருவி தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஒரு முன்னோடியாக இருக்கும்’’ என்கிறார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘இந்த வென்டிலேட்டர் கொண்டு, 50 மில்லி லிட்டர் முதல் 2 லிட்டர் அளவிற்கும் கூடுதலான உயிரிக்காற்று மற்றும் காற்றின் கலவையை மூச்சு விடுவதற்காக ஒரே நேரத்தில் தேவைக்கு ஏற்ப இறைக்கலாம். மூச்சு உள் இழுக்கும் உயிரிக்காற்று மற்றும் காற்றின் அளவு, அழுத்தம் மற்றும் நேரம், மூச்சு வெளிவிடும் காற்றின் அழுத்தம் மற்றும் நேரம், காற்றின் ஈரப்பதம், நிமிடத்திற்கான மூச்சுச் சுழற்சி, மருத்துவர்கள் எளிதாக தேர்ந்தெடுக்கக்கூடிய விரைவு கட்டுப்பாட்டு தேர்வு முறைகள், மூச்சு உள்ளிழுக்கப்படும் காற்றிலுள்ள உயிரிக்காற்றின் அளவு தகவல் என பல தொழில்நுட்பம் இந்த வென்டிலேட்டரில் அடங்கியுள்ளது. மேலும் வென்டிலேட்டர் கருவி இயங்கும்போது நோயாளி தாமாக மூச்சுவிட முயற்சி செய்தால், அதற்கு ஏற்ப இந்தக் கருவி தன் செயல்பாடுகளை மாற்றிக்கொள்வது மட்டுமல்லாது மருத்துவருக்கும் எச்சரிக்கை ஒலி தரும். கருவி சரிவர செயல்படவில்லையென்றாலும் எச்சரிக்கை ஒலி ஏற்படுத்தும். நோயாளி பெருமூச்சு விடுதல், நுரையீரலில் அடிப்படையாக ஒரு காற்றழுத்தத்தை நிறுவி வைத்தல் என மருத்துவரின் அனைத்து மருத்துவப் பயன்பாடு தேவைகளுக்கும் இந்தக் கருவி துணைபுரியும்.

இறக்குமதி செய்யப்பட்ட இதற்கு ஈடான வென்டிலேட்டர் கருவிகள் சந்தையில் ரூ.7.5 லட்சத்துக்கு மேல் விற்கப்படுகின்றன. இந்திய நாட்டின் மருத்துவத் தேவைக்கு மிகக் குறைந்த விலையில் இந்த வென்டிலேட்டர் கருவிகளை ஓசூரிலுள்ள தொழிற்கூடங்களிலேயே முழுக்க முழுக்க உற்பத்தி செய்து விற்பனை செய்வது மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.இந்த புதிய சிறு முயற்சி, கண்டிப்பாக உயர் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவக் கருவி உற்பத்தியில் இந்தியாவில் பலரையும் ஊக்கப்படுத்தும் என்பதால், இதைவிட மேலான கருவிகளை இந்தியாவில் இந்தியர்களே வடிவமைத்து, இந்தியாவை மருத்துவக் கருவி ஏற்றுமதி நாடாக உயர்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்கிறார் அகிலேஷ்.
- தோ.திருத்துவராஜ்.