TNPSC Group-2 தேர்வுமுறை மாற்றம்… சரியா? தவறா?



சர்ச்சை

தமிழக அரசில் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் முதல் அதிகாரி பணி வரை அனைத்துப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசுப்  பணியாளர்கள் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்துவருகிறது. அந்தவகையில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான  தேர்வையும் (Group-2) நடத்துகிறது. இந்தத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்ட நடைமுறைகளுக்குப் பிறகுதான் தேர்ச்சி பெற முடியும்.

இதில், முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவை இடம்பெறும். இந்த நிலையில், மேற்கண்ட  மொழிப்பாடங்கள் இனி இடம்பெறாது என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மாற்றங்களைக் கண்டு தேர்வு  ஆர்வலர்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்று சொல்லும் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சியாளர் மற்றும் 'மொழிப்பாடங்களை நீக்கி, மற்ற மாநிலத்தவர்களுக்கு  வாய்ப்பு வழங்கும் நடவடிக்கை’ என்று குற்றம்சாட்டும் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்.

ஜே.லியோனல் மேன்லி, ஐ.பி.டி. இன்ஸ்டிடியூட் (டி.என்.பி.எஸ்.சி. கோச்சிங் சென்டர்), சென்னை.

 பட்டப்படிப்புக்குப் பின்னர் தமிழ்நாடு அரசில் வேலை பெறுவதற்கான பொதுப் போட்டித் தேர்வு ஒவ்வொரு தரநிலைக்கும் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.  இவை குரூப்1 மற்றும் குரூப்2 ஆகும். குரூப் 2 தேர்வில் இரண்டு வகை உள்ளது. ஒன்று இன்டர்வியூ போஸ்ட் இருநிலைத் தேர்வாகும், மற்றொன்று குரூப்  2Aவில் இண்டர்வியூ இல்லாத தேர்வு என இருந்துவந்தது. இதனால் பட்டதாரி மாணவர்களுக்கு வருடத்துக்கு மூன்று தேர்வு எழுதக்கூடிய வாய்ப்பு இருந்தது. இதில் நேர்காணலைத் தவிர்க்க நினைக்கும் பட்டதாரிகளுக்கு ஒரே ஒரு தேர்வு எழுதி வேலை பெறும் வாய்ப்பு இருந்தது.

இந்தப் புதுமுறையில் பட்டதாரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு தேர்வுகள் (குரூப்1 மற்றும் குரூப்2/2A) உள்ளன. குரூப் 2Aவுக்கான வேலை பெற  முயலும் மாணவர்களுக்கு இரண்டு நிலைத் தேர்வு (பிரிலிம்ஸ் மற்று மெயின்ஸ்) எழுதும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்னர். இந்த தேர்வு முறை 1990களில்  நடைமுறையில் இருந்தது, பிறகு நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையின்படி இரண்டுநிலைத் தேர்வுகளில் மொழிப்பாடம்  இருக்காது. ஆதலால் இந்த புது மாற்றத்தில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது.

முன்பாக குரூப் 2A தேர்வில் மொழிப்பாடம் 100 வினாக்கள் மற்றும் இதரப் பாடத்தில் 100 வினாக்கள் கேட்கப்பட்டன. ஆனால், இந்த புதுத் தேர்வு முறையில்  மாணவர்கள் மொழிக்கான பாடத்தைப் படிக்க அவசியம் இல்லை. இந்தப் புதிய முறையில் பாதிப்பு என்பது யாருக்கும் இருக்காது. ஏனெனில், நம் தமிழ்நாட்டு  மாணவர்கள் மொழிப் பாடத்துக்குக் கொடுக்கும் ஆர்வத்தை போன்றே மற்ற பாடங்களுக்கும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், சென்ற தேர்வு முறையில் கணிதம்  - 25 வினாக்களும், பொது அறிவுப் பாடங்களுக்கு மீதம் 75 வினாக்களும் என வரையறுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மாணவர்கள் அப்பாடத்திலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பொதுஅறிவுப் பாடங்களைப் படித்துவந்தனர். இந்தப் புதுப் பாடத்திட்டத்தில்  தமிழர் புராணம், திருக்குறள், விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பெரிதாகத் தேர்வு  ஆர்வலர்களைப் பாதிக்காது என்பது அவர்களின் கருத்து. தேர்வுக்கு தயாராகும் முறையில் மாற்றம் இல்லை. ஆனால், குரூப்2A தேர்வு மட்டும் எழுதும்  மாணவர்கள் இருநிலைத் தேர்வு எழுதவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

அதில் மெயின் தேர்வில் பகுதி ‘ஏ’ மற்றும் பகுதி ‘பி’ என்று இரண்டு பகுதியாகப் பிரித்துள்ளனர். பார்ட் ‘ஏ’-வில் தேர்ச்சி பெற்றவர்களின் வினாத்தாள்கள்  மட்டும் பார்ட் ‘பி’ திருத்தத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பார்ட் ‘ஏ’ 100 மதிப்பெண்களுக்கும் பார்ட் ‘பி’ 200  மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். பார்ட்‘ஏ’-வில் தேர்ச்சி பெறக் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். இது தமிழிலிருந்து  ஆங்கிலத்துக்கும் பிறகு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி மாற்றம் செய்வதே.

இந்த மாற்றம் எந்த பொது நுழைவுத் தேர்வுகளிலும் இல்லாதது. இது முழுக்க முழுக்க தமிழ்மொழியிலேயே பட்டப்படிப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு பெரும்  சவாலாக இருக்கக்கூடும். அதேசமயம் பார்ட்-பி  எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பார்ட்‘பி’-ல் வரும் வினாக்கள் முறையான பயிற்சி  எடுத்தாலே மிக எளிதாக மதிப்பெண் எடுக்கக்கூடிய வகையில் உள்ளது. இந்த மாற்றங்களைக் கண்டு தேர்வு ஆர்வலர்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை.  இம்முறை தேர்வின் மூலம் திறமையான தமிழக மாணவர்களே தேர்ச்சி பெறும் வகையில் உள்ளதாக தேர்வு ஆணையம் நம்புகிறது.

ம.சிவகுருநாதன், கல்வியாளர்

பொதுவாகப் போட்டித் தேர்வுகள் தொடர்புடைய பணிக்கான திறனைச் சோதிப்பதில்லை. தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற சில பணியிடங்களைத் தவிர  எஞ்சியவற்றுக்குப் பணித்திறன் பற்றிய அளவுகோல்கள் இல்லை. பாடங்களில் அவர்கள் பெற்றிருக்கும் அறிவு (மனப்பாட அறிவு) அவர்களது பணித்திறனில்  எதிரொலிக்கும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. ‘படித்தவன் தவறு செய்ய மட்டான்; சிவப்பானவன் பொய் சொல்ல  மாட்டான்’ என்பதைப் போல இதுவும் ஒரு கற்பிதம். கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட எந்தத் தேர்வுகளும் இப்படித்தான்.

ஆசிரியர்களுக்கான தேர்வுகளும் அவர்களின் மனப்பாட அறிவையே சோதிக்கின்றன. அவர்களின் கற்றல், கற்பித்தல் திறன், புதிய உத்திகள், அணுகுமுறைகள்  ஆகியவற்றை அளப்பதில்லை. எவரும் பணியில் சேர்ந்த பிறகே பணியைக் கற்றுக்கொள்ளும் அவலம் நீடிக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி II மற்றும் IIA) தேர்வுக்கான  பாடத்திட்டத்தை சமீபத்தில் மாற்றம் செய்தது. முதல்நிலைத்  தேர்வில் தமிழ்ப் பாடம் நீக்கப்பட்டு, புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்குத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்தது. அதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும்  இல்லை, மேலும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆறாம் வகுப்பிலிருந்து படித்த பாடங்களே தற்போது புதிதாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்றெல்லாம் கூறியுள்ளனர். பாடத்திட்டத்தில் தமிழ் என்ற பெயரில் மிகுதியான  வரலாற்றுப் பாடங்களே நுழைக்கப்பட்டுள்ளன.

இவை யாருக்குச் சாதகம் என்பதை எளிதில் உணரமுடியும். போட்டித் தேர்வுகளுக்குப் பலர் வரலாற்றை நாடுவது உண்டு. அவர்களுக்கு ஏற்ற வகையில்  தமிழென்னும் போர்வையில் வரலாற்றை அதிகம் நுழைத்திருப்பதை அறிய முடிகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாரிக்கும் தொழிற்சாலைகளை விரிவாக்கும்  நடவடிக்கையாகவே இது இருக்கிறது. இதற்கேற்ற வகையில் பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளைப் போட்டித் தேர்வுகள் ‘பாணிக்கு’ மாற்றும் முயற்சிகள்  நடக்கின்றன.

கல்வியின் பணி சந்தைக்கு ஆள்களை உற்பத்தி செய்வது மட்டுமல்ல. மாறிவரும்  சூழலுக்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதன் தேவையை நம்மால்  புரிந்துகொள்ள முடிகிறது. இருக்கின்ற பாடத்தை மாற்றி வேறொன்றைத் திணிக்கும்போதுதான் கேள்வி எழுகிறது. தமிழ்ப் பாடத்திற்கு உரிய இடமளிப்பதும்  தமிழ்நாட்டில் தமிழ் பயின்றோருக்கே அரசுப் பணி எனச் சட்டம் வகுப்பதும் இன்றைய உடனடித் தேவையாகும்.

- தோ.திருத்துவராஜ்