தனியாருக்கு தாரைவார்க்கப்படும் ரயில்வே துறை!



சர்ச்சை

புதிய பொருளாதாரக் கொள்கைகள் கடந்த 1991-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டன.  இதன் ஒரு பகுதியாக உலகமயமாக்குதல், தாராளமயமாக்குதல்,  தனியார்மயமாக்குதல் ஆகிய கொள்கைகள் அமலுக்குவந்தன. இதிலும் குறிப்பாக நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை  செய்வதும் தொடங்கியது. பின்னர் காலப்போக்கில் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களைக்கூட தனியாருக்கு தாரைவார்க்கவும்  தொடங்கினர்.

தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முனைந்துவருகிறது. இதனால்,  ரயில் பயணம் சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. இதுகுறித்து சதர்ன் ரயில்வே மஸ்தூர்  யூனியன் பொதுச் செயலாளரும், அகில இந்திய தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகத் தலைவருமான N.கண்ணையாவிடம் கேட்டபோது, அவர் நம்மிடம்  பகிர்ந்துகொண்ட கருத்துகளைப் பார்ப்போம். ‘‘நாட்டின் சமுக, பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கு ரயில்வே துறை முக்கிய பங்காற்றிவருகிறது.

இதை தனியார்மயமாக்குவது ஒரு தவறான நடவடிக்கையாகும். இந்தியா வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கும் நாடாகத்தான் இன்னும் இருக்கிறது. ரயில்களில்  பாமர மக்கள், அடித்தட்டு மக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். நடுத்தர மக்களும் பயணிக்கின்றனர்.  இதிலும் குறிப்பாக நாள்தோறும் நாடு முழுவதும் 2.40  கோடி பேர் தினமும் ரயில்களில் பயணிக்கின்றனர். நாட்டிலுள்ள 130 கோடி மக்களில் 109.50 கோடி மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்களும்,  ராணுவத் தளவாடங்களும்கூட சரக்கு ரயில்கள் மூலமாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன.

எனவே, ரயில்வே துறையை தனியார்மயமாக்குதல் என்பது ஒரு தவறான செயல். சென்னை பெரம்பூரில் உள்ள லோகோ மற்றும் கேரேஜ் பணிமனைகளில்  மற்றும் Open line பகுதிகளில் உள்ள பணிமனைகளில் அவுட்சோர்ஸ்சிங் என்ற முறையில் பணிக்கு ரயில்வேக்கு சம்பந்தமில்லாத தொழிலாளர்கள்  நியமிக்கப்படுகின்றனர். இந்த வேலைகளை ரயில்வேயில் உள்ள ஊழியர்கள் செய்வதற்கு தயாராக இருந்தும் அவ்வேலையை கொடுப்பதற்கு நிர்வாகம்  மறுக்கின்றது. அங்கு தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

Outsourcing என்பது ஒப்பந்த ஊழியர்களை வைத்து, தனியார் செய்வது. இதைப்பற்றி கேட்டால், தனியார்மயம் என்பது வேறு, தனியார் செய்வது வேறு என  விளக்கம் கூறுவது நகைப்புக்குரியது.’’ என்கிறார் கண்ணையா. ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கப்படும் விதம், வருவாய் மற்றும் நிதி நிலைமை  குறித்து கூறும்போது,‘‘நன்றாக லாபத்தில் இயங்குகின்ற ரேபரேலியிலுள்ள Modern Coach Factory மற்றும் பெரம்பூரிலுள்ள ICF தொழிற்சாலைகள்  ரயில் பெட்டிகளை தரமாகவும், விலை மலிவாகவும், உற்பத்தி செய்து வருகின்றன.

இவ்விரண்டு தொழிற்சாலைகளிலிருந்தும் ரயில் எஞ்ஜின்களையும், பெட்டிகளையும் வாங்குவதற்கு பல்வேறு ஆசிய நாடுகள் முன்வந்துள்ளன. இருந்தபோதும்  மத்திய அரசு இந்த இரண்டு தொழிற்சாலைகளையும் தனியாருக்கு விற்க முடிவு செய்து பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய முயற்சிகளை  மேற்கொண்டுவருகின்றது. ஒருபுறம், Make in India எனக் கூறிக்கொண்டு, மறுபுறம் பன்னாட்டு நிறுவனங்கள் ரயில்பெட்டிகள்/எஞ்ஜின்களை நம் மக்கள்  பணத்தில் நிறுவிய உற்பத்திப் பணிமனைகளில் தயாரிக்க அனுமதிப்பது என்ற கொள்கையை எங்களது யூனியன் மற்றும் Federation மூலம் கடுமையாக  எதிர்த்துவருகிறோம்.

ரயில்வே தனியார்மய முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என 02.08.2019 அன்று நடந்த கூட்டத்தில் சேர்மன் மற்றும் ரயில்வே போர்டு உறுப்பினர்கள்  அனைவரும் கலந்துகொண்ட (Full Board) கூட்டத்தில் வலியுறுத்தினோம். இந்த விஷயத்தில் நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடுகளுடன்  ஒப்பிடக்கூடாது. இங்கிலாந்து, அர்ஜென்டினா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் ரயில்வே துறையை தனியாருக்கு வழங்கினார்கள். ஆனால், தனியார்  நிறுவனங்கள் சிறப்பான சேவையை வழங்கவில்லை என்று கூறி மீண்டும் அரசே எடுத்துக்கொண்டு நடத்திவருகிறது.

அமெரிக்காவிலும் இதுபோன்ற பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது. எனவே, ரயில்வே துறையை தனியார்மயமாக்கக் கூடாது. ரயில்வே துறையின் Operarting  ratio 94 ஆக உள்ளது. அதாவது, 100 ரூபாய் வருமானம் ஈட்ட 94 ரூபாய் செலவு செய்து 6 ரூபாய் லாபமாக பெற்றுவருகிறது. கடந்த வருடத்தில் ரயில்வே  வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் இரண்டு லட்சம் கோடி ரூபாயில், பன்னிரண்டு ஆயிரம் கோடி லாபம் அடைந்துள்ளது.’’ என்கிறார். மேலும்  தொடர்ந்த அவர், ‘‘பயணிகள் மற்றும் சரக்குக் கட்டண சலுகைகள் மூலமாக 42 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தையும், ரயில்வே இழந்துவருகிறது.

இதுமட்டுமின்றி, ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கான 40 ஆயிரம் கோடி பென்ஷன் தொகையை, ரயில்வே தனது வருமானத்திலிருந்து செலவு  செய்துவருகிறது. ஆனால், மத்திய அரசில் உள்ள இதர துறைகளில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் மற்றும் பென்ஷன் தொகையை  மத்திய அரசுதான் வழங்கிவருகிறது. தற்போது ரயில்வே துறைக்கு தனியான பட்ஜெட் இல்லாத சூழ்நிலையில் பென்ஷனுக்கான செலவு ரூ.40,000 கோடிக்கும்  மற்றும் பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணச் சலுகைகள் தொகை ரூ.42,000 கோடிக்கும் மத்திய அரசு பொறுப்பேற்றால், (உதாரணமாக, பெட்ரோலிய  நிறுவனங்களுக்கு வழங்கப்படும் LPG மானியத்தை போன்று) ரயில்வே துறையின் நிதிநிலைமை பல மடங்கு உயரும்.

மேலும் 82,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். அதேபோல தற்போது ரயில்வே துறையில் ரூ.100 மதிப்பு கொண்ட டிக்கெட்டை சலுகை விலையில்  பொதுமக்களுக்கு ரூ.47-க்கு வழங்கி வருகின்றது. ஆனால், ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால், அந்த மானியம் இருக்காது. இதற்கு தேஜாஸ்  எக்ஸ்பிரஸ் ரயிலை உதாரணமாக கூறலாம். தமிழகத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க ரூ.825 கட்டணமாக  இருக்கிறது. மூத்த குடிமக்களுக்கு ரூ.525-ம், வயது முதிர்ந்த தாய்மார்களுக்கு ரூ.425-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால், இதை தனியாரிடம் ஒப்படைத்தால், அந்த 53 சதவீத மானியம் ரத்து செய்யப்பட்டு ரூ.1800-ரூ.2000 வரையிலும் கட்டணமாக செலுத்தி பயணிக்க  வேண்டியிருக்கும். ரயில்வே துறை பணிகளை, ரயில்வே ஊழியர்கள் செய்யும்பட்சத்தில், பயணிகளிடம் புகார்கள் வந்தால், அந்தப் பணியை சரிவர செய்யாத  பணியாளர்கள் மீது, துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதனால், பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால், தனியாருக்கு அந்தப் பணியை  விடும்பட்சத்தில், குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் அந்தத் தொழிலாளர்கள் பணிகளை திறம்பட செய்ய வாய்ப்பில்லை.

அது குறித்து புகார் அளித்தாலும், எந்த பயனும் இருக்காது. எனவே, ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதால் பொதுமக்களுக்கு பாதிப்பே தவிர எந்த பயனும்  இல்லை. நிரந்தரமற்ற பணிச்சூழலால் ஊழியர்களை கலக்கத்துக்குள்ளாக்கும். இளைஞர்களின் வேலைவாய்ப்புகளும் பறிபோய்விடும். எனவே, இந்த விவகாரத்தில்  பொதுமக்களும் இணைந்து தனியார்மயமாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்’’ என்று ரயில்வே துறை தனியார்மயமாவதால் அந்த துறையும்  மக்களும் சந்திக்கப்போகும் பிரச்னைகளைப் பட்டியலிட்டார் கண்ணையா.

- தோ.திருத்துவராஜ்