மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகை!*நியூஸ் கார்னர்

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் காலெடுத்து வைக்கும் மாணவர்களில் பலர் பொருளாதார சிக்கலால் உயர்கல்வியை விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையைப் போக்க மத்திய/மாநில அரசுகள் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த உயர்கல்விக்கான உதவித்தொகை.தகுதிகள்: மாநில பாடத்திட்டம் / சி.பி.எஸ்.இ., / ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மேல்நிலைப் படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை: இந்த உதவித்தொகை 41 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 41 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 82 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. மேல்நிலை வகுப்பில் அறிவியல், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவை படித்தவர்களுக்கு முறையே 3:2:1 என்ற விகிதாசாரத்தில் உதவித்தொகை எண்ணிக்கை பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடும் உண்டு.

உதவித்தொகை விவரம்: இளநிலைப் பட்டப்படிப்பில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பில் ஆண்டுக்கு 20,000 ரூபாய் என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2019 மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,‘ தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அறிவியல் விருது வழங்கப்படுகிறது.


ஆசிரியர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த அறிவியல் நகரம் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ் வழி, ஆங்கில வழி என தலா ஐந்து பேருக்கு விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த விருதைப் பெற தகுதி உள்ளவர்கள் தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அதிகாரி மூலமாக 15.9.2019 ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொல்கத்தா கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. மாணவர் சேர்க்கை!

இன்ஸ்டிடியுட் ஆஃப் டெவலெப்மெண்ட் ஸ்டடீஸ் கொல்கத்தா (ஐ.டி.எஸ்.கே.) கல்விநிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள்: உரிய முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., / ஓ.பி.சி, பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. நெட்/ ஸ்லெட் / செட் / கேட் அல்லது எம்.பில்.,/எம்.டெக்.,/எம்.டி.,/எம்.இ.,/எம்.பார்ம் தேர்ச்சி பெற்றவரகள் நுழைவுத்தேர்வு எழத வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 9.9.2019. நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் 21.9.2019. மேலும் விவரங்களுக்கு http://idsk.edu.in/phd-programme என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை!


இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி மும்பை மற்றும் ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ஐ.ஐ.டி.பி.,-மொனாஷ் ரிசர்ச் அகாடமி நிறுவனம் பிஎச்.டி., படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.


ஆராய்ச்சிக்கான பிரிவுகள்: அட்வான்ஸ்டு கம்ப்யூடேஷனல் எஞ்சினியரிங், ஸ்டிமுலேஷன் அண்ட் மேனுஃபேக்சர், இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர் எஞ்சினியரிங், கிளீன் எனர்ஜி, வாட்டர் ரிசோஸ், நானோடெக்னாலஜி, பயோடெக்னாலஜி அண்ட் ஸ்டெம் செல் ரிசர்ச், ஹுமானிட்டீஸ் அண்ட் சோஷியல் சயின்சஸ், டிசைன்.

ஆராய்ச்சிக் காலம்: மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை.
உதவித்தொகை விவரம்: இந்த உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், குறைந்தது ஓர் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 3,72,0000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டுக்கு 4,20,000 ரூபாய் வழங்கப்படும். ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் காலத்திற்கு ஆஸ்திரேலிய டாலர் 25,850 வரை உதவித்தொகையாக வழங்கப்படும். எனினும், மாணவர்களின் தகுதிகள், பாடத்திட்டத்தை பொறுத்து உதவித்தொகை மாறுபடும்.

தேவையான தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை ஐ.ஐ.டி., என்.ஐ.டி., பிட்ஸ் போன்றவற்றில் ஏதேனும் ஒரு கல்விநிறுவனத்தில், அதிக மதிபெண்களுடன் பி.டெக்., / எம்.டெக்., / எம்.இ., / எம்.எஸ்சி. போன்ற படிப்பை முதல்வகுப்பில் முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜி.ஆர்.இ. கேட், சி.எஸ்.ஐ.ஆர்.-நெட், ஜாம் போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வை எழுதியிருக்க வேண்டும். மேலும், ஐ.இ.எல்.டி.எஸ்., அல்லது டோஃபல் ஆங்கிலமொழிப் புலமைத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.9.2019. மேலும் முழு விவரங்களுக்கு: www.iitbmonash.org