நவீன வாக்குப்பதிவு இயந்திரம்… அரசுப் பள்ளி மாணவர்களின் அற்புத கண்டுபிடிப்பு!



எந்த ஒரு தேர்தலிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிக அளவில் இல்லாமலே உள்ளது. பெரும்பாலானோர் வேலைவாய்ப்புகளைத் தேடி வெளியிடங்களுக்கு சென்றுவிடுவதுதான் காரணம். இந்த நிலையை மாற்றும் விதமாக, வாக்களிக்கும் நபர் எந்த மூலையில் இருந்தும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யும் வகையில் ஓர் இயந்திரத்தை சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஜெயச்சந்திரன், ஜெபின், பிரதீப் குமார் ஆகிய மூவரும் வடிவமைத்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்புகளும், வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து அந்தப் பள்ளி தலைமையாசிரியை தமிழரசியைச் சந்தித்தோம்...

‘‘எங்கள் பள்ளியில் அட்டல் ஆய்வகம் 2017ல் தொடங்கப்பட்டது. எங்கள் மாணவர்கள் அறிவியல் கண்காட்சிகளில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டதனால், தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக அரசுப் பள்ளியில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆய்வகம் இது. இந்த ஆய்வகத்திற்கு டெல் மற்றும் எல்.எஸ்.எஸ். என்ற இரு நிறுவனங்களும் சப்போர்ட் மற்றும் நாலேட்ஜிங் பார்ட்னராகவும் உறுதுணையாகவும் இருக்கின்றன. இந்த ஆய்வகத்தில் அனைத்து மாணவர்களும் தினமும் பயன்பெறுமாறு அமைத்துள்ளோம். ஆசியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். மாணவர்களின் திறனை வளர்க்க பள்ளி அளவில் கண்காட்சி நடத்துவோம்.

6 முதல் 8, அடுத்து 9 முதல் 12 வரை என அவரவர் தரத்துக்கு ஏற்றவாறு கண்காட்சி நடத்தி தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்தகட்டமாக மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்புவோம். அவ்வாறு வெளியிடங்களுக்கு சென்று வெற்றிபெற்ற மாணவர்கள் நிறைய பேர் உள்ளனர். தேசிய அளவில் சென்ற மாணவர்கள் பாலஸ்ரீ விருதுகளும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு எங்கள் பள்ளி மாணவர்களின் 5 புராஜெக்ட்டுகளை டெல்லிக்கு அனுப்பினோம். இந்தியா முழுவதும் இருந்து கலந்துகொண்ட அந்த நிகழ்வில் எங்களது 5 புராஜெக்ட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அறிவுப்பூர்வமாக செயல்பட்டு அடுத்தக்கட்டத்தை பற்றியே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் எங்கள் மாணவர்கள். அதை நிரூபிக்கும் விதமாகவே பயோமெட்ரிக் ஓட்டிங் மெஷின் ஒன்றை எங்களது மாணவர்கள் கூட்டுமுயற்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 சதவிகிதம் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம். மேலும், வாக்களித்த நபர் திரும்பவும் வாக்களித்துவிடக்கூடாது என்பதும்தான். இன்னும் பல கண்டுபிடிப்புகளை மாணவர்கள் செய்ய ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர்’’ என்றார்.

மாணவர் ஜெயச்சந்திரன் பேசும்போது, ‘‘12ஆம் வகுப்பு படிக்கிறேன். இந்த புராஜெக்ட்டின் முக்கியமான நோக்கம் என்னவென்றால், வாக்களிக்கும் சதவிகித்தை அதிகரிக்க வேண்டும் என்பதே. ஏனென்றால், தற்போது நடந்த தேர்தலில் 66 சதவிகிதம்தான் வாக்குகள் பதிவாகியிருக்கின்றது. இதுதான் வாக்குப்பதிவிலேயே அதிக சதவிகித வாக்குப்பதிவு என்கின்றனர். அப்படியானால் வாக்குப்பதிவை அதிகரிக்க நம்மால் என்ன செய்யமுடியும் என யோசித்து டெக்னாலஜி மூலமாக சொல்யூஷன் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போதுதான் இந்த புராஜெக்ட் ஐடியா வந்தது. இதன் மூலம் நிச்சயமாக வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க முடியும். இந்த சிஸ்டமே பயோமெட்ரிக்கை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதுதான். அதனால், ஒருவர் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் ஓட் பண்ண முடியும். பெரும்பாலானவர்கள் வேலைவாய்ப்புக்காக வெளியிடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’’ என்றார்.

மாணவர் ஜெபின், ‘‘நான் 11ஆம் வகுப்பு படிக்கிறேன். நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த இயந்திரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், சென்னையில் இருந்துகொண்டே கன்னியாகுமரியில் உள்ள எனது ஓட்டை கேட்ச் பண்ண முடியும். விரல் ரேகையும், கண்களின் கருவிழியையும் ஸ்கேன் பண்ணிய உடனேயே ஆதார்-ல் இருக்கக்கூடிய நம்முடைய இன்ஃபர்மேஷன் மற்றும் அட்ரஸ் எல்லாமே இந்த மெஷினுக்கு வந்துவிடும். அதைவைத்து நான் எந்தத் தொகுதியில் இருக்கிறேன், என்னுடைய தொகுதியில் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் நமக்கு தெரியவரும். அதன் மூலம் நாம் விரும்பும் நபர்களுக்கு வாக்களிக்க முடியும். இதனால், வாக்களிப்பு சதவிகிதத்தை அதிகரிக்கலாம்’’ என்றார்.

மாணவர் பிரதீப்குமார் பேசும்போது, ‘‘நான் 10ஆம் வகுப்பு படிக்கிறேன். எங்களோட புராஜெக்ட் பெயர் பயோமெட்ரிக் ஓட்டிங் மெஷின். இதில் இரண்டு டிவிஷன்கள் உள்ளன. ஒன்று ஐடென்டிஃபிகேஷன் டிவிஷன், இன்னொன்று ஓட்டிங் டிவிஷன். ஐடென்டிஃபிகேஷன் டிவிஷனில் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும், ரெட்டினா ஸ்கேனரும் யூஸ் பண்ணியிருக்கோம். கண் மற்றும் விரல் ரேகை ஸ்கேன் பண்ணி ஓட்டளித்த பின்னர், திரும்பவும் ஓட்டளிக்க முயன்றால் அது முடியாது. திரும்பவும் கண் மற்றும் விரல் ரேகையை ஸ்கேன் செய்யும்போது ஆல்ரெடி ஓட்டேட், அதாவது ஏற்கனவே வாக்களித்துவிட்டீர்கள் என வந்துவிடும். அத்துடன் இந்தத் தகவல் உடனடியாக அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்கும் சென்றுவிடும். இதன்மூலமாக கள்ள ஓட்டுப் போடுவதைத் தடுக்கலாம். அதேநேரத்தில் அனைவரும் தாங்கள் விரும்பிய நபருக்கு வாக்களிக்கலாம். இப்போதைக்கு ஆடியோ வைத்து இந்த புராஜெக்ட்டை செய்துள்ளோம். அரசு எங்களுக்கு அனுமதி கொடுத்தால், இந்த மெஷனினுடன் ஆதாரை இணைத்துப் பண்ணுவோம்.

வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், அருகில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இந்தக் கருவியை பொருத்துவது மூலம், ஏடிஎம் இயந்திரத்தில் தங்கள் கைரேகையை வாக்காளர்கள் பதிவிட்டு, தங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கும் வசதியும் செய்துள்ளோம்’’ என்றார். மாணவர்கள் மூன்று பேருக்கும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திருவளர்செல்வி தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகையை வழங்கி பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- திருவரசு